இன்றைய இளைஞனுக்கு-கவியரசு கண்ணதாசன்


நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்
நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!

- பட்டினத்தார்.
`ஏ மனிதர்களே! நாக்கே பிளந்துவிடும்படியாகப் பொய் பேசுவீர்கள்!
புதிய புதிய செல்வங்களைத் தேடுவீர்கள்!
பூமியைப் பிளந்துக்கொண்டு வருகின்ற புற்றீசல் போலப் பொல பொலவென்று கலகலவென்று பிள்ளைகளைப் பெறுவீர்கள்!
காப்பதற்கும் உங்களுக்கு வழி தெரியாது; அவர்களைக் கைவிடவும் மாட்டீர்கள்.
பாதி பிளந்து ஆப்பு வைக்கப்பட்ட மரத்துளையில் காலை வைத்துக்கொண்டே ஆப்பைப் பிடுங்குகிற குரங்கு, மரத்துளையில் கால் மாட்டிக் கொண்டு திண்டாடுவது போல பந்த பாசத்தில் கிடந்து உழலுவீர்கள்!' என்று சிரிப்போடு சொல்கிறார் பட்டினத்தார்.
தொட்ட பின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள்... -
சுட்ட பிறகே நெருப்பென்றறியும் அப்பாவிகள் -
அவர்கள் பட்ட பின்புமே கெட்ட பின்புமே பரம்பொருளை நினைக்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே வாழ்வை வகுத்துக்கொள்ள அவர்களால் முடிவதில்லை.
ராமலிங்க வள்ளலாரைப் போலவோ, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவோ, சுவாமி விவேகானந்தரைப் போலவோ, இளம் பருவத்திலே ஞான ஒளியைப் பெற அவர்களால் முடியவில்லை.
`ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!'
சாட்டை இல்லாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கிறான் கண்ணன்.
`உண்டு, உண்டு' என்று ஓடி, பிறகு `இல்லை, இல்லை' என்று ஏமாந்து, `எங்கே எங்கே' என்று தேடி, `இதோ, இங்கே இங்கே' என்று கண் மயங்கி, வெட்ட வெளிப் பொட்டலிலே விட்டெறிந்த பந்தினைப்போல், `ஆடி ஓடி அமர்ந்தேன் பராபரமே!' என்று அமர்ந்து விடுகிறார்கள்.
அனுபவங்களுக்குப் பிறகுதான் உண்மை அவர்களுக்குத் தெரிகிறது.
அந்த உண்மையை ஆரம்பத்திலேயே கண்டு கொள்வதெப்படி?
இது இன்றைய இளைஞனுக்குச் சொல்லவேண்டிய பாடம்.
குத்திய பின்பே முள்ளென்று அறியாமல், `இது முள்' என்று பார்வையிலேயே அவன் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு என்ன வழி?
இதோ ராமகிருஷ்ணர் சொல்கிறார்:
``வீட்டு ஈயானது ஒரு சமயம் அழுகிய புண்ணின் மீதும், மறு சமயம் நிவேனத்துக்கு வைத்திருக்கும் பொருளின்மீதும் உட்காரும். ஆனால், தாமரையிலுள்ள தேனை அருந்தும் வண்டு, அதைத் தவிர வேறொன்றையும் மதியாது. நீ வீட்டு ஈயைப் போலிராமல் தேன் வண்டைப் போலிரு''. -பரமஹம்சரின் இந்த வாக்கு, இன்றைய இளைஞன் கடைபிடிக்க வேண்டிய அறிவியல் அரிச்சுவடி.
வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்யவிருக்கும் இளைஞன் முதற்கோணல், முற்றும் கோணல் என்பதை நினைத்தே தன் படிப்பைத் தொடங்க வேண்டும்.
அந்தப் படிப்பையும் தேன் வண்டைப்போல் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
வாழ்க்கைக்குத் தேவையில்லாத, பயன்படாத, நூல்களைப் படித்துக் காலத்தை வீணாக்கக் கூடாது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
- என்றான் வள்ளுவன்.
பயனற்ற நூல்களில் காலம் வீணாகிறது.
பண்பாடற்ற நண்பர்களால் மனம் பாழாகிறது.
அலட்சிய மனப்பான்மையால் அறிவு மயங்குகிறது.
வெறும் ஆரவாரங்களில் போலி வாழ்க்கையே கிட்டுகிறது.
அஞ்சியஞ்சிச் சாவதால் ஆன்மா அடிமையாகி விடுகிறது.
படிப்பது என்பது, வரப்போகும் காலங்களுக்குப் போடப்படும் அஸ்திவாரம். ஆனால், தவறாகப் படிக்கும் படிப்புப் பயனற்றுப் போகிறது.
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத வயது இளம் வயது.
ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய வயதும் அதுதான்.
`சித்திரப்பாவையின் அத்தக அடங்கி' நல்ல பாடங்களைக் கேட்டு, நாளையப் பொழுதுக்குத் தன்னைத் தயார் செய்துக் கொள்ள வேண்டிய வயது, பள்ளி வயதுதான் என்பதை இளைஞன் மறக்கக்கூடாது.
அவனுக்குச் சாப்பாட்டைப் பற்றியும், தூக்கத்தையும் பற்றியும் இந்துமதம் கூறுகிறது.
கீதையில் பரந்தாமன் கூறுகிறான்:
``அர்ஜுனா!
அதிமாக உண்ணுபவனுக்கும் யோகமில்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் இல்லை; தூக்கத்தில் அதிக விருப்பமுடையவனுக்கும் இல்லை; தூங்காமலேயே விழிப்பவனுக்கும் இல்லை. அளவான ஊணும், உழைப்புமுடையவனுக்கும், அளவான உறக்கமும், விழிப்புமுடையவனுக்கும் துன்பம் துடைக் கும் யோகம் கிட்டுகிறது''.
- அதையே பரமஹம்சர் கூறுகிறார்:
``பகலில் திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால் இரவில் உணவு, அளவு குறைந்ததாயும் சத்துக் குறைந்ததாயும் இருக்கட்டும். சரீரத்திற்கு உஷ்ணத்தையும் மனத்துக்குச் சஞ்சலத்தையும் கொடுக்கும் உணவை உட்கொள்ளாதே! இழவு வீடுகளில் நடக்கும் சாப்பாட்டுக்குப் போகாதே. புரோகிதத்தால் பிழைப்பவர் வீட்டிலும் சாப்பிடாதே. இறைவனுக்குப் படைக்கக்கூடியது போன்ற சுத்தமான ஆகாரத்தையே சாப்பிடு''.
ஆம். முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்பு; அடுத்து அளவான சுத்தமான உணவு; அடுத்தது அளவான உழைப்பும் உறக்கமும்.
நான் சின்ன வயதில் படித்த எல்லாப் பாடங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன.
அவைதான் இத்தனை ஆண்டுகளாக எனக்குக் கை கொடுத்து வருகின்றன.
ஆனால், முறையற்ற உணவு, அதற்கு நேர்மாறான பட்டினி, அளவற்ற தூக்கம் - இவற்றால் என் உடம்பு கெட்டுவிட்டது.
ஆரம்பத்திலிருந்தே உணவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லையே என்று இன்று நான் வருந்துகிறேன்.
நல்ல வேளையாக இறைவன் எனக்களித்த வரம், அன்று நான் அர்த்தம் தெரியாமலே மனப்பாடம் செய்த பாடல்கள் அனைத்தும் இன்று அர்த்தத்தோடு வந்து உதவி புரிகின்றன.
இந்துமதத்தின் உபதேசங்களை இன்றைய இளைஞன் ஒதுக்கிவிடாமல் படிக்கவேண்டும்.
நோய்கள் பற்றியும் மருந்துகள் பற்றியும்கூட இந்துமதம் முழு அளவில் சொல்லி வைத்திருக்கிறது.
இன்றைய இளைஞன் திருமூலரின் திருமந்திரத்தை மனப்பாடம் செய்யவேண்டும்.
அவை இப்போது உதவாவிட்டாலும், பின்னாளில் உதவும்.
சந்தம் நிறைந்த பாடல்கள் விரைவிலே மனத்தில் பதியும்.
``சித்தர் ஞானக்கோவை'' என்று வழங்கப்படும் நூலில் பட்டினத்தார், சிவவாக்கியர், பத்திரகிரியார் பாடல்களை மனப்பாடம் செய்தால், பெண்ணாசை குறையும்.
எப்படிப்பட்ட பெண்ணைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.
ஆரம்பப் படிக்கட்டுகளை இவ்வளவு அழகாகப் போட்டுக் கொண்டு விட்டால், எதிர்காலத்தில் துன்பமிருக்காது; சோர்விருக்காது; அவமானம் நிகழாது. சென்ற இடமெல்லாம் சிறப்பும் கிடைக்கும்.
நண்பர்கள் இருப்பார்கள்; எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
வரவறிந்து செலவு செய்யும் புத்தி வந்து விடும்.
வாழ்க்கை என்பது பங்கீடு செய்யப்பட்ட சாலையாகி விடும்.
என்னைப்போல அடிக்கடி சோகப்பாட்டுப் பாட வேண்டியிராது.
சராசரி மனிதன் லெளகீக வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அடைவதற்கு, இந்துமத நூல்கள் நல்ல வழி காட்டுகின்றன.
வரவு செலவு பற்றிக்கூட நமது பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.
``ஒருவரிடம் கடன் வாங்கினால் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரே தவணையில் பணத்தைக் கொடுத்துப் பத்திரத்தைத் திருப்பி வாங்கிவிடு. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டத் தொடங்கினால், அதன் வட்டிக் கணக்கு தலைமுறை தலைமுறைக்கு வரும்''.
ஆம், அதிலும் இன்றைய இளைஞன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடைசியாக சாப்பாடு பற்றிய அனுபவம்.
எதை எதைச் சாப்பிடக்கூடாது என்று நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
.........................
தட்டைப் பயறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில்
கொடியதோர் வாய்வு தோன்றும்
தொட்டுப் பாராதே என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!
-நமது மூதாதையர்கள் வாய்வு, உஷ்ணம், சீதம், சிலேட்டுமம், பித்தம் என்று நோய்களுக்கான காரணங்களையே தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
இன்றைய இளைஞன் மர்ம நாவல்களை விட்டு விட்டு, மதநூல்களைப் படித்தால், வாழ்க்கையில் சகல பகுதிகளுக்கும் வழி கிடைக்கும்.

No comments: