வண்டி மறித்த காளியம்மன்


ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரோட்டில் முறம்பு என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வண்டி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் படுத்த கோலத்தில் காட்சித் தருகிறார்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் நடந்த சந்தைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் வணிகர்கள், கிராம மக்கள் வருவார்கள். இந்த சந்தைக்கு ஒரு வயதான வியாபாரியும், அவரது பேத்தியும் மாட்டு வண்டியில் வந்தனர். மாட்டு வண்டியை வியாபாரி ஓட்டி வர பேத்தி வண்டியில் அமர்ந்து இருந்தாள். தற்போது கோவில் இருக்கும் இடத்துக்கு அருகே வண்டி வந்ததும் காளை மாடுகள் இரண்டும் நகர மறுத்தன. எவ்வளவோ முயன்றும் காளைகள் நகர்ந்தபாடில்லை.

அந்த இடத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என நினைத்த வயதான வியாபாரி, சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றுமே அவரது கண்ணுக்கு புலப்படவில்லை. அப்போது திடீரென வண்டியில் அமர்ந்து இருந்த அவரது பேத்தி அருள் வந்து ஆடினாள்.
"என்னை யாருன்னு உனக்கு தெரியலையா? நான்தான் காளி வந்து இருக்கேன். இங்கே தான் படுத்து இருக்கேன். என்னை இந்த வழியாக செல்பவர்கள் வணங்கி சென்றால் அருள் தந்து காப்பேன்'' என கூறி கண்கள் சிவந்தபடி நின்றாள்.
அப்போது வியாபாரி, "நீ தான் காளி என எப்படி நம்புவது?'' என வினவினார்.
"என்னையே நம்ம மறுக்கிறாயா? கொஞ்சம் தள்ளி சென்று பார்த்தால் நான் யாருன்னு உனக்கு புரியும் போ... போய் பாரு'' என ஆக்ரோஷமாக கூறினாள்.
இதனால் அந்த வியாபாரி பேத்தி கை காட்டிய இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காளியம்மன் கண்களை உருட்டியபடி சிவப்பு பட்டு உடுத்தி படுத்த கோலத்தில் ஆங்காரமாக காட்சி அளித்தாள்.
இதை பார்த்து பரவசம் அடைந்த வியாபாரி அவளிடம் மன்னிட்டு கேட்டு தரையில் விழுந்து வணங்கினார். அதற்குள் அங்கிருந்து காளியம்மன் மறைந்துவிட்டாள். அந்த இடத்தில் காளிக்கு கோவிலும் எழுப்பப்பட்டது. வண்டியை மறித்து காட்சி அளித்ததால் இந்த அம்மனை `வண்டி மறித்த காளியம்மன்' என அழைக்கின்றனர்.
சிறப்பு அம்சம்
12 அடி நீளத்தில் கம்பீரமாக படுத்த நிலையில் வீற்றிருக்கும் இவள் கேட்டவர்களுக்கு கேட்டவரம் அருளும் தாய் உள்ளம் கொண்டவள். குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். இவள் எழுந்து நின்றால் உலகம் தாங்காது என கருதி இவளது காலில் சங்கிலி போட்டு உள்ளனர். இந்த சங்கிலியை தொட்டு வணங்கினால் தீராத பிரச்சினைகள் உடனே தீரும் என்கிறார்கள்.
தலைமுடியையே பாயாக விரித்து அதன்மேல் தலை வைத்து படுத்து இருக்கும் இந்த காளியம்மனை இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் வணங்கி செல்கின்றனர்.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் முறம்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.

No comments: