Pages

மாயை தவிர்!


பகவான், பல கோடி ஜீவராசிகளைப் படைத்தான்; கூடவே, மாயை என்பதையும் படைத்தான். பரம புருஷன் ஒன்றே சத்யம், என்றும் இருப்பது; மற்றவை எல்லாம் மாயை, அழியக் கூடியது, இருப்பது போல் தோன்றுகிறது; ஆனால், ஒரு நாள் இல்லாமல் போய் விடுகிறது.
"இந்த மாயையில் மயங்காதே, சத்யமாக உள்ளதைத் தேடு, அதையே பிடித்துக் கொள்...' என்று மகான்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்ம விசாரணை என்ற பெயரில், பல உபதேசங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்: மூடா... செல்வத்தின் பால் விருப்பை விடு. ஒன்றுக் கொன்றுள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து, தெரிந்து கொள். மனம் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள். உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளானாலும்
திருப்தியடை... தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வம் தான்.

உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடு சிறிதுமில்லை. செல்வந்தருக்கு தம் மக்களிடமிருந்தும் கூட அச்சம் ஏற்படும். எங்கும், என்றும் இதே நிலை தான்... உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றை கண நேரத்தில் விழுங்கி விடுவான். பொய்யான இப்பொருட்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு, அவனிடம் அமிழ்ந்து விடு... உணர்ச்சி, வெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, ஆத்மனைப் பற்றி சிந்தனை செய்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடி. ஆத்ம ஞானம் இல்லாத மூடர்; பயங்கர நரகங்களை அடைவர்... கோவிலிலோ, மரத்தடியிலோ வசித்து விடலாம்; தரையில் படுத்துறங்கலாம்; மான் தோல் போர்த்திக் கொள்ளலாம்; விஷய போகங்களையும் விடலாம்.
ஆனாலும், ஆத்ம சிந்தனை இல்லையேல், இவைகளால் ஒரு பயனுமில்லை... நண்பன், பகைவன், மகன், உறவினர், யுத்தம், சமாதானம் எதிலும் பற்றுதல் வைக்காதே... எதிலும் சம புத்தியுடையவனாக இரு.
விரைவில் பரம நிலையை அடையலாம்... இல்வாழ்க்கையானது தாமரை இலை நீர்த் துளி போல் நிலையற்றது. இம்மக்கள் அனைவருமே, நோய், அகந்தை, துயரம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்... உன் குருவின் கமல பாதங்களில் அடைக்கலம் புகுந்து, சம்சாரத்தினின்று சீக்கிரம் விடுதலை பெறு. புலன்களையும், மனதையும் அடக்கியாள்வதன் மூலம், உன் இதயத்தில் உறையும் நாதனைக் காண்பாய்...
— இவ்வாறெல்லாம் உபதேசங்கள் உள்ளன. இதன் தாத்பர்யம் என்னவென்றால், வீடு, வாசல், மனைவி, மக்கள் என்று சொல்லி, அதிலேயே கவனம் செலுத்தி, நீ கடைந்தேறும் வழியைக் காணாமல் வாழ்நாளை வீணாக்காதே. நீ காண்பதெல்லாம் மாயை; அவை, உன்னை விட்டுப் போகலாம் அல்லது நீ அவைகளை விட்டுப் போகலாம்; இது நிச்சயம். ஆகவே, பரம பொருளைத் தெரிந்து, அவனைப் பிடித்துக் கொள். மறவாதே என்றனர். சொல்லும் போது நன்றாகத்தான் உள்ளது; செய்ய வேண்டுமே!
***
ஆன்மிக வினா-விடை!
ஆஞ்சநேயருக்கு எப்படி பூஜை செய்வது?
ஆஞ்சநேய தோத்திரங்களை பாராயணம் செய்து வரலாம். ஆஞ்சநேயர் கோவிலுக்கு, அபிஷேக ஆராதனைப் பொருட்களை வாங்கி தந்து, உதவலாம். ஆஞ்சநேயர் கோவில் விளக்கு எப்போதும் எரிய, எண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம்.

No comments: