வீண் வம்பு வேண்டாம்!



யோகிகள் மிகுந்த தவ வலிமை பெற்றவர்கள். உடல் வலிமையை விட, இவர்களது தவ வலிமை பெருமை வாய்ந்தது. இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.
ஏதோ அவசரத்தில் சாபம் கொடுத்தாலும் உடனே பச்சாதாபப்பட்டு, சாப நிவர்த்திக்கான மார்க்கத்தையும் சொல்வர். அதனால், இப்படிப்பட்ட சாதுக்கள் மற்றும் யோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒரு கந்தர்வன், முனிவரின் சாபத்தால் பாம்பானான். எப்படி? ஒரு சமயம் கோபர்கள் எல்லாரும் அம்பிகாவனம் சென்று, சரஸ்வதி நதியில் நீராடி, மகாதேவரையும், பார்வதி தேவியையும் பூஜித்தனர். பிறகு, நிவேதனம் செய்யப்பட்டவைகளை புசித்து, அன்றிரவு அங்கு தங்கினர். எல்லாரும் படுத்திருந்த போது, ஒரு பெரிய பாம்பு வந்து, நந்தகோபரை விழுங்கத் துவங்கியது.

"கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னைக் காப்பாற்று...' என்று கத்தினார் நந்தகோபர். மற்றவர்கள் ஓடி வந்து, அந்த பாம்பை அடித்தனர்; ஆனால், அந்தப் பாம்பு சாகவில்லை. அப்போது, பகவான் கிருஷ்ணன் வந்து, அந்த பாம்பின் மீது, தன் பாதங்களை வைத்தார். அடுத்த வினாடி, அந்தப் பாம்பு, கந்தர்வனாக மாறியது.
"நீ யார்?' என்று கேட்டார் பகவான். அவன், "நான் சுதர்சனனென்ற கந்தர்வன். நான் விமானத்தில் சஞ்சரித்த போது, விரூபமான ஆங்கீரச மகரிஷியைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன். அதனால், அவர் என்னை பாம்பாகும்படி சபித்து விட்டார். அத்துடன், கருணா மூர்த்தியான உம்முடைய பாதம் பட்டதும், சாபம் நிவர்த்தியாகும் என்றும் அருளினார்.
"உம்முடைய பாதம் பட்டதால், பாம்பாக இருந்த நான், இப்போது மீண்டும் கந்தர்வரூபம் பெற்றேன்.
"பாபங்களை நிவர்த்திப்பவரே... உம்மை சரணடைகிறேன். எனக்கு விடை கொடுத்தனுப்ப வேண்டுகிறேன்.
"மகா புருஷ, சாதுக்களுக்கு அதிபரே... சகல லோகங்களுக்கும் அதிபதிகளாகிய பிரம்ம தேவர் முதலியவர்களுக்கு அதிபரே... கிருஷ்ணா... உம்மை தரிசித்த மாத்திரத்தில் பாப நிவர்த்தியாகியது.
"எவருடைய திவ்ய நாமதேயம், கேட்பவர் களையும், உச்சரிப்பவர்களையும், கேட்கச் செய்பவர்களையும் உடனே சுத்தப்படுத்துகிறதோ, அப்படிப்பட்ட உம்முடைய திவ்யமான பாதத்தால் தொடப்பட்ட எனக்கும் பாப, சாப நிவர்த்தி ஏற்பட்டது...' என்று சொல்லி, அவரை நமஸ்காரம் செய்து, மறைந்தான், கோபர்களும், பயம் நீங்கி கோபாலனைத் தொழுதனர்.
கந்தர்வனுக்கு இது வீண் வம்புதானே... தன் அழகில் பெருமை கொண்டு, அழகில்லாத முனிவரை கேலி செய்வானேன்; பாம்பாக மாறி பரிதவிப்பானேன்! அகம்பாவம் தான் காரணம்.
இன்னும் கூட சிலர் தங்களை ரொம்பவும் அழகு, மன்மதன், ரதி என்றெல்லாம் நினைத்து, ஏதோ ஒரு மாதிரியாக இருப்பவர்களை பரிகாசம் செய்வதுண்டு. பரிகாசம் செய்யப்படுபவரின் மனம் எவ்வளவு புண்படும். அவரும், மனதுக்குள் சாபமிடுவார்; சாபம் பலிக்காமலா போகும்.
அதுவும், சாதுக்களின் சாபம் பலிக்காமல் போகாது. ஜாக்கிரதை... வீண் வம்பு வேண்டாம்.

2 comments:

kobikashok said...

thanks sir i will submitted to idli

Jayadev Das said...

\\இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.\\இங்க ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கனும். இங்க ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கனும். சாதாரணமா நமக்கு யாராச்சும் கெடுதல் நினைச்சா பதிலுக்கு அவனுக்கு கெடுத்தாள் தான் நினைப்போம். ஆனால், இறைவனும் அவரது அடியார்களும் அவ்வாறல்ல. ஏதாவது ஒரு வகையில் அவர்களை அணுகினால் போதும் அதன் பலன் நன்மையே, கெடுதலாக இருக்காது. இங்கு சுதர்சனனென்ற கந்தர்வன் ஆங்கீரச மகரிஷியைப் பார்த்துப் பரிகாசம் செய்த போதும் அவரது சாபத்தால் என்ன நிகழ்ந்தது? கந்தர்வனாகிய அந்த பாம்பின் மீது, பகவான் கிருஷ்ணன் தன் பாதங்களை வைத்தார், பகைவனின் தரிசனமும் கிடைத்தது. இது கிடத்தர்க்கரிய பாக்கியம்.