செல்போனை அதிகம் பயன்படுத்தினால் கழுத்து வலிக்கும்!


தற்போது எந்நேரமும் செல்போனும் கையுமாக (காதுமாக?) இருப்பவர்களை அதிகம் காண முடிகிறது. செல்போன்களையோ, ஐ-பாடுகளையோ அதிகம் பயன்படுத்தினால் கழுத்தில் வலி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
`டெக்ஸ் நெக்' என்ற இந்தப் பாதிப்பு, செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.
குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் அந்தத் தோற்றத்துக்கு ஏற்ப முதுகுத் தண்டுவட எலும்புகளும், தசைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கழுத்து வளைவு, ஆதரவுத் தசைகள், மெல்லிய இணைப்புகளில் ஏற்படும் மாற்றம், கடைசியில் தசைகளில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது என்றபோதும், அவற்றால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது கையில் உள்ள உபகரணத்தை நாம் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்து செல்போனைக் கேட்கவோ, குறுந்தகவல்களைத் தட்டி அனுப்பவோ செய்யாமல் முகத்துக்கு நேராகப் பிடித்தபடி அவற்றைச் செய்ய வேண்டும். அதிக நேரம் தலை குனிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி `ரிலாக்ஸ்' செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். கையடக்க எம்பி 3 பிளேயர், ஈ- ரீடர் எனப்படும் மின்னணு புத்தகம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
``சிற்சில மாற்றங்கள் மூலம் நீங்கள் உங்களின் ஆரோக்கியம், முதுகுத் தண்டுவடம், கழுத்து எலும்பு மற்றும் தசைகளின் ஆயுட்காலத்தைக் காத்துக்கொள்ளலாம்'' என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக செல்போன் பித்தர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்கள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது!

No comments: