கடலில் உதித்த கந்தன்


ஆர்ப்பரிக்கும் அலைகள் திருச்செந்தூர் கோயில் மதில் சுவரை முத்தமிட்டு, மணல் மீது நுரை பொங்கச் சரிந்து வீழ்கின்றன. "மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்' எனப் பாட வைத்த திருத்தலம். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். இங்கு கந்தன், அருள் வள்ளி - தெய்வானையுடன் காட்சியருளுகிறார். தினசரி அபிஷேக நேரத்தில் திருப்புகழ் பாடல்களோடு, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுகின்றன. நிறைய திருவிளையாடல்களுக்குச் சொந்தக்காரர் இந்த கந்தன். அதில் ஒன்று தான் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்.

""பகழிக் கூத்தர் எனும் வைணவருக்குத் தீராத வயிற்றுவலி. அவரது கனவில் முருகன் தோன்றி, தம் மீது பிள்ளைத் தமிழ்பாடும்படி பணிக்கிறார். அவரும் திருச்செந்தூர் வந்து பிள்ளைத் தமிழ் பாட, வயிற்று வலி மெல்ல மெல்ல குறைந்தது. அதனால்தான் தினசரி முருகன் சன்னிதியில் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடப்படுகிறது'' என்கிறார் கோயில் பூசாரி.
கருவறை கந்தப்பெருமான் திருமுகத்தில் ஒருபுறம் ஏதோ அரித்தாற்போல இருக்கிறது. அதற்குக் காரணம். மூலவர் விக்கிரகம் ஆழ்கடலின் உள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாம்.
திருநள்ளாறு கோயிலில் நடராஜர் விக்கிரகத்தை அபகரித்த டச்சுக்காரர்கள், கப்பலில் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்து முருகன் விக்கிரகத்தை அபகரித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்குகின்றனர். கப்பல் செல்லச் செல்ல கடல் நடுவே பெரும் சூறாவளி சூழ்ந்து கொள்கிறது. கப்பல் நிலை தடுமாறுகிறது. டச்சுக்காரர்கள் அச்சப்படுகிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கிறார்கள்.
கடவுள் விக்கிரகங்களைக் களவாடியதால்தான் இத்தனை பெரிய சூறாவளியோ என எண்ணிய டச்சுக்காரர்கள், நடராஜர் விக்கிரகத்தைக் கடலில் தூக்கிப் போடுகின்றனர். அப்படியும் சூறாவளி அடங்கவேயில்லை. தெய்வக் குற்றம் செய்து விட்டதாகக் கருதியவர்கள், அடுத்து கந்தன் விக்கிரகத்தையும் கடலில் வீசியெறிகின்றனர். சில நிமிடங்களில் கடல் அமைதியாகிறது. டச்சுக்காரர்கள் தங்கள் பயணத்தைத்தொடர்ந்து, தங்கள் தேசத்தை அடைகின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் முருகன் விக்கிரகம் இல்லையென்கிற செய்தி பரவுகிறது. பக்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது திருநெல்வேலியை ஆண்டு வந்த வட மலையப்பப் பிள்ளை, பெரும் கவலை கொள்கிறார். பல நாட்கள் விரதம் மேற்கொள்கிறார். முருகப்பெருமான் அவர் கனவில் தோன்றுகிறார். ""கவலை வேண்டாம். கோயிலிலிருந்து சற்றுத் தூரத்தில் கடலுக்கடியில் நான் பத்திரமாக இருக்கிறேன். என் விக்கிரகம் இருக்குமிடத்துக்கு மேலாக ஒரு எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருக்கும்!'' என்கிறார் முருகப்பெருமான். வடமலையப்ப பிள்ளைக்கு மேலும் தலைசுற்றுகிறது. கடல் நடுவே மிதக்கின்ற ஒற்றை எலுமிச்சம் பழத்தை நான் எவ்விதம் காண்பேன்? எனக் கேட்கிறார். "" அந்த இடத்தில் வானில் கருடன் பறந்தபடி இருப்பான். கண்டுகொள் அந்த இடத்தை'' என்கிறார் சுந்தரப்பெருமான்.
கடல் நீச்சல் நன்கு தெரிந்த பத்துப்பேரை ஒரு பத்துப்பேரை ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கடல் மீது கிளம்பி விடுகிறார் வடமலையப்ப பிள்ளை. கடல் நடுவே வானில் ஓரிடத்தில் கருடன் வட்டமிட, மீனவர்கள் சிலர் கடலில் குதித்துத் தேடுகின்றனர். நடராஜர் விக்கிரகம் கிடைக்கிறது. கடைசியில் வடமலையப்ப பிள்ளையே கடலில் குதித்துத் தேடுகிறார். அவரது கைகளுக்குக் கந்தன் விக்கிரகம் கிடைத்துவிடுகிறது. கரைக்குக் கொண்டு வரப்படுகிறது. 1653 ஆம் ஆண்டு தை 29 ஆம் தேதியன்று கருவறையில் கந்தப்பெருமான் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சில காலம் கடல் நீருக்குள் கந்தன் விக்கிரகம் அமிழ்ந்து கிடந்ததால், முகம் ஒருபுறம் அரித்துப் போனதாகச் சொல்லப்படுகிறது!
* பழனி முருகனுக்கு தைப் பூசம் மாதிரி, திருச்செந்தூர் முருகனுக்கு சூரசம்ஹாரம் பெரிய திருவிழா. பத்து நாள் திருவிழா. பிரதி ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் சஷ்டி அன்று சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெறும்.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலை போல கூடுகின்ற பெருந்திருவிழா, பத்தாம் நாள் பால சுப்பிரமணியர் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம்.

No comments: