Pages

தேனீயாய் வந்த மகரிஷி ! - திருக்கொட்டாரம்


பசுமையான மரங்களும் பூஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த அற்புதமான தலம், திருக்கொட்டாரம், குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இத்தலம் காவிரித் தென்கரையில் அமைந்துள்ளது.
கி.பி.1253ஆம் ஆண்டு குலோத்துங்கச் சோழனால் இங்கு சிவாலயம் கட்டப்பெற்றுள்ளது. இம்மன்னனை கல்வெட்டு ஒன்று சோழ மண்டலத்து மண்ணிநாட்டு முழையூர் உடையான் அரையான் மதுராந்தகனான் குலோத்துங்கச் சோழன் எனக் குறிப்பிடுகின்றது.
""இரங்காய் உனது இன்னருளே...'' என சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலப்பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தனது கொம்பினால் மேகத்தினை இடித்து, மழையை ஆறுபோல் உருவாக்கி அந்நதி தீர்த்தத்தால் இத்தல ஈசனை வழிபட்டுள்ளது.
கோட்டினால் (கொம்பு) ஆறு ஏற்படுத்தி இங்கு பரமனை ஐராவதம் பூஜித்ததால் இத்தலம் கொட்டாரம் என அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவரும் சுபமகரிஷியும் இங்குள்ள சிவனாரை பூசித்துள்ளனர். சுபர் ஒரு நாள் இறைவனை தரிசிக்க தாமதமாக வந்ததனால் கோயில் நடைக்கதவு சாற்றப்பட்டுவிட்டது. உடன் சுபர், தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று ஈசனை வழிபட்டார். இதன் பொருட்டு ஆண்டுக்கொருமுறை இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புறச் செய்யப்படுகின்றது. இப்போதும் மூலவர் சன்னதி முன் தேன் கூடு இருப்பது கண்டு மெய்சிலிர்க்கலாம். இன்றும் சுப மகரிஷி தேனீயாய் இங்கு வந்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதிகம்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களை இத்தலத்தின் மீது பாடியுள்ளார். சுந்தரரும் தனது ஊர்த் தொகையில் இத்தலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
தேவர்களும், சித்தர்களும் இங்கு வந்து வழிபட்டதாக கூறும் சம்பந்தர், இப்பரமனை பாடித் தொழும் அடியவர்களின் வருத்தமும், வீண்பழியும் நீங்குவதோடு ; சிறந்த ஞானமும், புகழும் அடைவார்கள் என்றும் பாடியுள்ளார்.
ரம்மியமானதொரு சூழலில் அமைந்த திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில் சூழ அழகுற விளங்குகிறது.
உள்ளே கொடிமரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடி மரத்தின் வடபுறம் அகத்திய லிங்கம் கொண்ட தனிச் சன்னதி மேற்குமுகம் கொண்டு திகழ்கிறது. அதன் பின்னே, கிழக்குத் திருமாலைப்பத்தியில் சூரியன், சந்திரன், பைரவர் போன்ற சிலாரூபங்களும்; நவகோள் நாயகர் சன்னதியும் உள்ளன.
கொடிமரத்தின் நேரே மண்டப வாயிலின் மேலே சுதைவடிவ கயிலை தரிசனம் கண்குளிர வைக்கிறது. வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் மதில் மேல் பழமையான கண்டாமணியொன்று காணப்படுகிறது. முதலில் இருபது தூண்களை உடைய முன் மண்டபம் வவ்வால் நெத்தியமைப்புடைய கூரையைக் கொண்டு திகழ்கிறது. அதனுள் வலப்புறம் அம்பாள் சன்னதி அர்த்தமண்டபமும், மூலஸ்தானமும் கொண்டு விளங்குகிறது.
அம்பாள் அதியற்புதமாக நின்ற கோலத்தில் நம்மை ஆட்கொள்கின்றாள். வண்டார்குழலியென்று அழைக்கப்படும் இவ்வம்மையை சம்பந்தர் கோலவார் குழலாள் என்று வர்ணிக்கின்றார். எழிலுடன் திகழும் அம்பிகையை வணங்கியபின், முதல் வாயிலுள் நுழைந்து மகாமண்டபத்தை அடைகிறோம். அங்கே உற்சவர் அறை உள்ளது. நடுவாக நடராஜப்பெருமானும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்க, இவருக்கு எதிரே ஓர் வாயில் உள்ளது. இங்கே செப்புத் திருமேனியாக உள்ள முருகன் வில்லேந்தி அருள்புரிகின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனமளிக்கின்றார்.
அடுத்து, ஸ்தபன மண்டபம், அதன் இருபுறமும் கணபதி மற்றும் நாகராஜர் வீற்றுள்ளனர். வடக்கேயும், தெற்கேயும் இரு வாயில்கள் காணப்படுகின்றன. பின்னர் அர்த்த மண்டபம். அதன் வடமேற்கு மூலையில் போக சக்தி, உற்சவ விக்ரமாய் காட்சியளிக்கின்றாள்.
கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது.
கருவறையுள் சுயம்புநாதனாய் சிறிய லிங்கமாக நமக்கு அருட்பெருந் தரிசனம் அகமகிழ்ந்து வணங்கி, ஆனந்தம் அடைகிறோம்.
ஆலய வலம் வருகையில் மடைப்பள்ளியை ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது.
தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி தனியே சன்னதி கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்.
மேற்குத் திருமாலைப் பத்தியில் கிழக்குப் பார்த்தவாறு சுந்தரர்- பரவை நாச்சியார், கைலாசநாதர், நால்வர், சுப மகரிஷி, நாகராஜர், ஓர் சிவலிங்கம் என வரிசையாக தரிசனமளிக்கின்றனர். மேற்கில் கந்தன் சன்னதியும், வடமேற்கில் கஜலெட்சுமி சன்னதியும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் சண்டேசர் சன்னதியும் அதனருகே கிணறும் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணிவரையும்; மா லை 5 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தின் தீர்த்தமாக வாஞ்சியாறும், சூரிய தீர்த்தமும் உள்ளன. ஒரு காலத்தில் கோட்டாறு என்று வழங்கப்பட்ட நதியே இன்று வாஞ்சியாறு என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.
இங்கு சுவாமிக்கும், அம்பிகைக்கும் தேனால் அபிஷேகம் செய்து பாரிஜாத மலர்களால் அர்ச்சித்து வழிபடுபவர்களின் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறுகிறதாம்!
காரைக்கால் - மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள வேலங்குடியிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருக்கொட்டாரம். அம்பகரத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை ஆட்டோ மூலம் சென்றடையலாம். அனைத்து வசதிகளும் காரைக்கால் மற்றும் திருநள்ளாறில் உள்ளது.

No comments: