வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?


உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:


ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் "காஸ்ட்லி ஸ்கிரப்பர்"களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.
வைட்டமின் "டி" குறைபாட்டை சரிகட்டுங்களேன்!
காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள்.

வைட்டமின் "டி" சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் "டி" சத்து கிடைக்கும்; உணவு வகைகள் மூலம் வைட்டமின் "டி" சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!
கண்கள் சோர்வடையாமல் இருக்க:
கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.
கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.
வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.
ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும்.
கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில் தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.

1 comment:

சாகம்பரி said...

அவசியமான குறிப்புகள். நன்றி