தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?


வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்
படுத்தப்பட்டது.
உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.

தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.
ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்' முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட்.
தெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.
பாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.

No comments: