| பரசுராமன் பரசுராமன்...' என்று மூன்று முறை அழைக்கிறார் நீதிமன்றத்தின் டவாலி. அடுத்தாற்போல், `பரசுராமன் மகன் ரங்கராஜன்' என்று மூன்று முறை அழைக்கிறார்.
 மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி.
 நீதிமன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறது.
 பாச அணுக்களால் ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி?
 
 ஆம், சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
 தந்தையும் மகனும் மோதிக்கொள்வதும், அண்ணனும் தம்பியும் மோதிக் கொள்வதும் விபரீதமான நிகழ்ச்சிகளே. ஆயினும் எப்படியோ இவை நடந்து விடுகின்றன.
 அன்பையும் பாசத்தையும் வலியுறுத்தும் இந்து மதம் தவிர்க்க முடியாத சில விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டுகிறது.
 உறவு ரத்தம் பகையாக மாறுவதே விதியின் வலிமை என்கிறது.
 என்னுடைய ரத்தம் மிகவும் மென்மையானது.
 உறவினருக்குச் சிறிது துன்பம் என்றாலும்கூட, என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
 அவர்கள் என்னை ஏமாற்றி விட்டால்கூடப் பகை உணர்ச்சி எனக்கு வருவதில்லை.
 சில இடங்களில் உறவினர்கள் மோதிக் கொள்ளும் வேகத்தைப் பார்க்கும்போது எனக்குத் திகைப்பு ஏற்படும்.
 ஐந்து ரூபாய் வித்தியாசத்துக்காக அப்பனும் மகனும் அடிதடியில்கூட இறங்கி விடுகிறார்கள்.
 தகப்பனார் இறந்து கிடக்கிறார். அவரது ஐந்து பிள்ளைகளும் பிணத்தின் பக்கமே போகவில்லை; பெட்டகத்தை உடைத்துப் பணத்தைப் பங்குபோடத் துவங்குகின்றனர்.
 அடிதடி அரிவாள் தூக்கும் வரையில் முன்னேறுகிறது.
 அவர்களது மனைவிமார்கள், உடனே இரண்டாவது போர்க்களத்தைத் துவங்குகிறார்கள்.
 பிணம் இரண்டு நாட்கள் கிடந்து நாற்றம் எடுக்கிறது.
 இரவு பகலாகப் பங்காளிகள் சமாதானம் செய்கிறார்கள்.
 கடைசியில், மூத்த பிள்ளை கொள்ளிவைப்பதற்குக் கூட பணம் கேட்கிறான்.
 இறந்து போனவனுக்காக ஒரு பிள்ளைகூட அழவில்லை.
 அவன் சம்பாதித்த சொத்தும், கொண்டுவந்த மருமக்களும், தந்தை மகன் என்ற புனிதமான உறவை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டன.
 என் உறவினர் ஒருவர் வீட்டில் நான் கண்ட காட்சி இது.
 ஒரு தந்தை நன்றாகச் சம்பாதித்தார்.
 தனது நான்கு பெண்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்.
 தனது இரண்டு பிள்ளைகளுக்கும் அழகான பங்களாக்களைக் கட்டிக் கொடுத்தார்.
 பெரிய இடத்தில் பெண் எடுத்தார்.
 பிறகு, தமக்கென்று கொஞ்சம் செல்வத்தை ஒதுக்கிக் கொண்டு, ஒரு கோயில் விடுதியில் கடைசிக் காலத்தைக் கழித்தார்.
 மரணத் தருவாயில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கே மரணமடைந்தார்.
 அவரது சடலத்தைத் தங்கள் வீட்டில் போட்டுத் தூக்க ஒரு பிள்ளையும் ஒப்புக்கொள்ளவில்லை.
 அவர்களல்லவா குழந்தைகள்!
 என் வீட்டில் வேலைக்காரன் இறந்து போனாலும், அந்தச் சடலத்தைக்கூட அலங்கரித்து என் வீட்டிலிருந்தே தான் தூக்கி அனுப்புவேன்.
 அவனோ தந்தை; வீடும் அவன் கட்டிக்கொடுத்த வீடு; பெற்ற பிள்ளைகள் பிணத்துக்குக்கூட இடம் தரவில்லை.
 `நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது' என்பார்கள்.
 காரணம் பல ரிஷிகள் மனைவியராலும், பிள்ளைகளாலும் ஆனார்கள் என்பதால்.
 ரத்தம் தண்ணீரைவிட கனமானது என்பார்கள்.
 என்னுடைய கணக்கில் அது புஷ்பத்தைவிட மென்மையானது.
 என் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லையென்று கேள்விப்பட்டால், என் உடம்பிலிருக்கும் ரத்தம் முழுவதும் தலைக்கு ஏறுகிறது, ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது.
 ஆனால் சிலரது ரத்தம் இரும்பைவிடக் கனமாக இருக்கிறது.
 இரும்பைப்போல் அது துருப்பிடித்துப் போகிறது.
 உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும் உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.
 மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சம அளவில் தேடித் தரும் உறவு, மனைவி உறவு.
 அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும், அதைத் தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது.
 ஆனால், பிறப்பிலும், உடன் பிறப்பிலும், மனித அறிவுக்கு வேலையே இல்லை.
 அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது.
 பின் ஏனங்கே பகை வந்து, பாசம் சாகிறது?
 | 
| அதைத் தெளிவாகக் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மீண்டும் நாம் `பகவத் கீதை' க்குள்ளே தான் நுழைய வேண்டும். பாரதப்போரில் உறவுகள் ஒன்றையொன்று எதிர்க்க வேண்டி வந்தது.
 இத்தனைக்கும் சிற்றப்பன், பெரியப்பன் பிள்ளைகள்தான். உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்கூட அல்ல!
 அதிலும் அர்ச்சுனன் மயங்கி விழுகிறான். பாவம் அவன் என்னைப்போல.
 பார்த்தனின் சாரதி பரந்தாமன் அவனைத் தூக்கி நிறுத்துகிறான்.
 தவிர்க்க முடியாத அந்த யுத்தத்திற்கான நியாயங்களைக் கூறுகிறான்.
 ஒருவன் மனம் முழுக்கக் கல்லாகிவிட்ட பிறகு அவனைப் பற்றிய உறவு முறைகளை மறந்துவிடவேண்டும் என்கிறான்.
 ஒரு சகோதரனின் கழுத்தை இன்னொரு சகோதரன் அறுக்க முயன்றால், அதைத் தடுப்பதற்கு அவன் கையையாவது வெட்ட வேண்டி வருகிறதே! விருப்பத்திற்கு விரோதமான இந்த வினைக்கு விதியைத் தவிர, வேறு எந்தக் காரணத்தைக் கூற முடியும்.
 இது `தற்காப்பு' என்ற தலைப்பில் அடங்கும்.
 இருவருமே ஒருவர் கழுத்தை ஒருவர் அறுக்கத் துணிந்து விட்டால், அந்தக் கேள்விக்கு இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.
 பிறப்பு நிர்ணயிக்கப்பட்ட போது, அதன் நோக்கத்திற்கு ஒரு சட்டத்தையும், அந்தச் சட்டத்திற்குச் சில செக்ஷன்களையும், இறைவன் விதித்திருக்கிறான்.
 பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு செக்ஷனை வழங்கியிருக்கிறான்.
 சில பிறப்புகள் பந்த பாசத்தினால் உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன் நிர்ணயித்திருக்கிறான்.
 அதை அவன் நிர்ணயித்ததால் தான், அவனே கண்ணன் வடிவில் அதற்கு நியாயத்தைக் கற்பிக்கிறான்.
 "அர்ச்சுனா,
 கொலை செய்வது பாவம் என்றா நீ மயங்குகிறாய்?
 இல்லை, அப்படித்தான் நீ என்ன கொலையே செய்யாதவனா?
 ஏற்கெனவே பல போர்களில் பலரைக் கொன்றவன் நீ.
 இங்கே ஏன் மயங்குகிறாய்?
 எதிரே நிற்பவர்கள் யாரென்று பார்த்ததும் உனக்கு மயக்கம் வருகிறது இல்லையா?'' என்று கேட்கிறான்.
 பாவம் அர்ச்சுனன்!
 சிருஷ்டிகர்த்தா, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஒரே மாதிரியான குணத்தைக் கொடுக்கவில்லை.
 ஒரு ரத்தத்தை மலராகவும், ஒரு ரத்தத்தை இரும்பாகவும் படைத்தான்.
 இரும்பு எழுந்து நின்றாலும்கூட மலர் துவண்டு விழுகிறது.
 வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களையுமே, சில குடும்பங்களில் இப்படி க்ராஸ் போட்டு வைத்திருக்கிறான் இறைவன்.
 அந்த க்ராஸ் இறைவனாலேயே விழுந்தது என்று கண்டு விட்டுக் கொடுக்கும்படி புஷ்பங்களை வேண்டிக் கொள்கிறது இந்துமதம்.
 இரண்டு கைகளையும் தட்டினால் தானே சத்தம் வருமென்று, மென்மையான கையை அது அப்புறப்படுத்துகிறது.
 `வன்செயலில் ஈடுபடும் கை தன் கருமத்தின் பலனை அனுபவிக்கும், என்று போதிக்கிறது.
 பின் ஏன் பரமாத்மா அர்ச்சுனனை மட்டும் கொலை புரியத் தூண்டினான்?
 ஒரு காடு அழிந்தால்தான் ஒரு வயல் உருவாகும் என்ற நிலை அங்கேயிருந்தது.
 நான் வைத்த மரங்கள், நான் வளர்த்த மரங்கள் என்று பார்த்துப் பார்த்து மயங்குவதில் பயனில்லை.
 அவற்றைவிடப் பயனுள்ள தானியங்களுக்காக அவற்றை அழிப்பது முறையே.
 அங்கே நியாயம் தேவையைப் பொறுத்தது.
 அப்படி இன்றியமையாத தேவை வரும்போது ரத்தங்களுக்குள் யுத்தம் வரலாம்; நீதிமன்றத்து டவாலியும் மூன்று முறை கூப்பிடலாம்.
 ஆனால், மிகமிக இன்றியமையாத கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில், மேன்மையான உறவுகள் விட்டுக் கொடுத்துப் போவதையே இந்துமதம் வலியுறுத்துகிறது.
 தகப்பன்தான் இறந்து போய்விட்டானே, தம்பிக்கு என்ன ஆட்சியென்று ராமன் சிங்காதனத்தில் போய் உட்கார்ந்திருந்தால் யார் கேட்டிருக்கப் போகிறார்கள்?
 கைகேயியின் கைகளில் விலங்கு மாட்டி, பரதனையே பாதுகாப்பாகக் காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதுவும் ஒரு கதையாகத்தானே இருந்திருக்கும்!
 அப்படி ஆகியிருந்தால், ஸ்ரீராமன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக ஆகியிருக்க மாட்டார்; அயோத்தி இன்னொரு பங்காளதேஷ் ஆகியிருக்கும்.
 ராமன் பரதனுக்கு விட்டுக் கொடுக்க, பரதன் ராமனுக்கு விட்டுக் கொடுக்க, விட்டுக் கொடுப்பதிலேயே ஒரு நாகரிக சம்பிரதாயத்தை உருவாக்கியது ராமாயணம்.
 ஒரு நாற்காலி இருக்குமிடத்தில் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தால், ஒருவரைப் பார்த்து ஒருவர் `நீங்கள் உட்காருங்கள்' என்று சொல்வது நாகரிகமா? ஒருவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுத் தான் போய் உட்காருவது நாகரிகமா?
 விட்டுக் கொடுப்பது தவறில்லை; அது யுத்தத்தைத் தடுக்கிறது; ரத்தத்தைக் காப்பாற்றுகிறது.
 இதில் நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.
 "இறைவா, இனிமேலாவது தொட்டுக் கொடுக்கும் உறவுகளைத் தராதே; விட்டுக் கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு!''
 | 
1 comment:
இறைவா, இனிமேலாவது தொட்டுக் கொடுக்கும் உறவுகளைத் தராதே; விட்டுக் கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு!''
Post a Comment