Pages

இனி என்றும் இன்பமே!சகோதரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், தந்தை - மகன் உறவு எப்படி அமைய வேண்டும், தாய்க்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும், கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடந்து கொள்வது எப்படி, கைமாறு கருதாமல் உதவி செய்யும் மனப்பாங்கை பெறும் முறை போன்ற நல்ல விஷயங்களை எல்லாம் ராமபிரானின் வரலாற்றில் அறிந்து கொள்ளலாம்.

அயோத்தி மன்னர் தசரதரின் அருந்தவப் புதல்வராய் பிறந்தவர் ராமபிரான். இவரது சித்திமார்களின் பிள்ளைகள் லட்சுமணன், பரதன், சத்ருக்கனன். லட்சுமணன், சத்ருக்கனன் சுமித்திரைக்கும், பரதன் கைகேயியிக்கும் பிறந்தனர். ஸ்ரீமந்நாராயணன் ராமனாகவும், அவரது சகாக்களான ஆதிசேஷன், சங்கு, சக்கரம் ஆகியவை அவரது தம்பிகளாகவும், லட்சுமி தாயார் சீதாதேவியாகவும் பூமிக்கு வந்தனர்.
தசரதரின் மனைவி கைகேயி நல்லவளாயினும், தன் பணியாளாக இருந்த மந்தாரையின் சொல் கேட்டு, தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதரிடம் கேட்டாள். போதாக்குறைக்கு மூத்த மகன் ராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் சொல்லி விட்டாள். ஒரு முதலாளி, தனக்கு தவறான ஆலோசனை சொல்லும் பணியாளர்களை உடன் வைத்திருக்கக் கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம். அவளது சொல்லுக்கு கட்டுப்பட்டதால், எல்லா ராணிகளும் மாங்கல்யம் இழந்தனர்.
ஆனால், ராமனோ எந்தவித சலனமும் இல்லாமல், தந்தையின் உத்தரவை ஏற்று கிளம்பி விட்டார். இது, எங்கும் நடக்காத அதிசயம். சிறு சொத்துக்கு கூட, கோர்ட் வாசலை மிதிக்கும் சகோதரர்கள், விட்டுக் கொடுக்கும் மனநிலையைப் பெற வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ராமன் காட்டுக்கு கிளம்பி விட்டாலும், தம்பி பரதன், நாடாள மறுத்து விட்டான். ராமனின் பாத ரட்சையை சிம்மாசனத்தில் வைத்து, ராமனே ஆள்வதாக பாவனை செய்து கொண்டான். அண்ணன் - தம்பி உறவுக்கு இதை விட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது.
ராம சகோதரர்களின் மனைவிமார்களும் அப்படியே... எக்காரணம் கொண்டும் கணவனை தவிக்க விட்டு, அரண்மனை வாழ்வு வாழ மாட்டேன் என சீதை அடம்பிடித்து, அவனுடன் கிளம்பினாள். கணவனை அனுசரித்து மனைவி வாழ வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
"உங்கள் அண்ணனும், அண்ணியும் காட்டுக்குப் போனால், உங்களுக்கு அங்கே என்ன வேலை?' என, லட்சுமணனின் மனைவி ஊர்மிளா கேட்கவில்லை. 14 வருட காலமும் அவளும் கணவனை விட்டுப் பிரிந்திருந்தாள். "அவர்கள் தான் ராஜ்யத்திலேயே இல்லையே... நம் இஷ்டத்துக்கு, 14 ஆண்டுகள் அயோத்தியை ஆளலாம்...' என பரதனின் மனைவி மாண்டவியோ, சத்ருக்கனனின் மனைவி சுருதகீர்த்தியோ தன் கணவன்மாருக்கு தூபம் போடவில்லை. ஆக... இப்படி ஒரு அரிய குடும்பத்தை ராம சரிதத்தில் நாம் பார்க்கிறோம்.
ராமன் காட்டுக்குப் போன பின், ஆஞ்சநேயரை சந்தித்தார். முன்பின் தெரியாத ராமனுக்காக அவர் கடலையே தாண்டிச் சென்று, அவர் மனைவி இருக்குமிடத்தை அறிந்து வந்தார். தேவையே இல்லாமல் ராவணனைப் பகைத்துக் கொண்டார். இவ்வளவு செய்தும், "நீ எப்படி இந்த சாகசங்களையெல்லாம் செய்தாய்?' என்று யார் கேட்டாலும், "எல்லாம் இந்த ராமனின் ஆசிர்வாதத்தால், "ராம ராம' என்று சொன்னேன். அந்த திவ்யநாமம் வெற்றியைத் தந்தது...' என்று, தன் வெற்றியை ராமனுக்கே அர்ப்பணித்தார். ராமபிரானோ, "இல்லை... இல்லை...இந்த சிரஞ்சீவி இல்லாவிட்டால், என் மனைவி எங்கிருக்கிறாள் என்றே தெரியாமல் போயிருக்கும். நானும், என் மனைவியும் உயிர் பிழைத்ததே இவரால் தான்...' என்கிறார்.
அதாவது, நம் வாழ்வில் பெறும் வெற்றி நம் முயற்சியால் வந்ததல்ல... அது, இறையருளால் வந்தது, அதை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், பிறருக்கு நன்மை செய்பவன் எவனாயினும், அவனுக்கு கடவுளே அடிமையாகி விடுவார் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
ராமனின் வாழ்க்கை, மனித வாழ்வை திவ்யமாக நடத்த உதவுகிறது. "ஸ்ரீராமஜெயம்' என்று சொல்பவர்களுக்கு, எந்தச் செயலிலும் வெற்றி கிடைக்கிறது; மனோபலம் அதிகரிக்கிறது. ஸ்ரீராமனின் பிறந்தநாளே ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.

No comments: