எளிதில் குணப்படுத்தலாம் ஞாபக மறதி நோயை!

திடீரென்று கமலநாதனுக்கு சிறு விஷயங்களில் மறதி ஏற்பட்டது. கார் சாவியைத் தொலைத்து விட்டார். எங்கு வைத்தோம் என்று ஞாபகம் வரவில்லை.
சிறந்த வக்கீலான இவருக்குப் பெயர்கள், சாமான்கள் மறந்து விட்டன. சீக்கிரத்தில் பண விஷயங்கள், கொடுக்கல் வாங்கல் என்று ஒவ்வொன்றாக மறக்கத் துவங்கியது. தன்னைப் பார்க்க வந்த வாடிக்கையாளரிடம் பணம் வாங்க மறந்து விட்டார்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுது சட்டென்று என்ன பேசுகிறோம் என்று மறந்து போய் திகைத்து நிற்பார்.
நல்ல அறிவுத்திறன் கொண்ட கமலநாதனின் நடவடிக்கை அவரது மனைவிக்குப் பயத்தை அளித்தது. ஹைதராபாத் நகரில் உள்ள, நிஜாம் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அங்கு ஞாபக சக்தி க்ளினிக்கில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஏ. சுவர்ணாவைச் சந்தித்தார்.
மிகச் சரியான சமயத்தில் கமலநாதன் எங்களிடம் வந்ததால் உடனே அவரை பரிசோதித்தேன். ஒரு சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் மூலம் அவர் ஞாபக மறதியினால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று புரிந்தது. அதனால் "மூளை ஸ்கேன்' செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை.
ஆனால் அவருடைய வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை எற்படுத்தும்படி கூறினேன். ஆறு மாதங்களில் அவரிடம் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
ஞாபக மறதி என்பது 50 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இதை MCI - (Mind Congnitive Impaitment)அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மறுத்துவம் கூறுகிறது.
ஆனால் இது பின்னாளில் உள் புதைந்திருக்கும் மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சனைகள் அல்லது அல்ஜெமர்(Alzheimers) எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையாக உருவாக்கலாம்.
நோயாளிகள் நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் தங்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றி கவலைப்படுவார்கள்.
எம்சிஐ ஒரு முழு ஞாபகமறதி. அல்ஜெமர்ஸ் ஆக உருவாகலாம். சில சமயங்களில் இவை ஆரம்பகால அறிகுறியாக இருந்தாலும், அவர்களது மருத்துவ சரித்திரம் மிகச் சரியாக இருந்தாலும், நாங்கள் நோயாளிகளை மூன்று மாதம் ஒருமுறை இங்கு வரும்படி கூறுகிறோம். மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து நிலைமையை உணர்கிறோம். உதாரணத்திற்குக் கமலநாதன் தன் வயதை மீறிய பணி, தன மகனின் படிப்பைப் பற்றிய கவலை, இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், ஆகியவற்றால் ஞாபக மறதி ஏற்பட்டது என்று விவரங்களைக் கூறுகிறார் மருத்தவர் சுவர்ணா.
ஞாபகமறதி என்பது ஒரு வியாதியாக மாறலாம் என்பதை இன்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சாவிகளை மறந்து விடுவது, உறவினர்களின் பெயர்கறை மறந்து விடுவது போன்றவை பின்னாளில் பிரச்சனை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்துள்ளனர்.
முக்கியமான விஷயங்களை மறப்பதில்லை. ஆனால் சிறு விஷயங்களை மறக்கும் தன்மையைப் பற்றி யோசிக்கிறார்கள். வீட்டிலோ அல்லது பணியிடங்களிலோ மன அழுத்தம் ஏற்படுவது சகஜம்தான். வேலைப்பளு, சமீபத்தில் ஏற்பட்ட உறவினர் இறப்பு அல்லது வளரும் பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சனை என்று மன அழுத்தத்திற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.
இந்தப் பிரச்சனைக்கு ஆண்கள் அதிகமாக உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கடுமையாக உழைத்து, களைத்து இருக்கும் மாணவர்களும் வருகின்றனர். இவர்கள் தினசரி ஏற்படும் விஷயத்தை மறப்பதில்லை ஆனால் பரீட்சை எழுதுகையில் ஏதோ ஒன்று அவர்களுக்குத் தடை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர்.
""படித்தவர்களும், விஷய ஞானம் உள்ளவர்களும் ஞாபக மறதியைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். உத்தியோகத்தில் முன்னேற்றப் பாதையில் உள்ள இவர்கள் இதில் மேலும் முன்னேறத் துடிக்கின்றனர்.
ஞாபக சக்தியைத் தூண்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா எனும் கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட மாத்திரைகள் உலகிலேயே இல்லை என்று கூறி அவர்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க ஆலோசனைகளை எடுத்துக் கூறுகிறேன்'' என்று கூறுகிறார் டாக்டர் சுவர்ணா.
டிமென்ஷியா எனப்படும் முழு ஞாபகமறதி நோய் சிறுசிறு ஞாபகமறதி அவதிகளில்தான் துவங்குகிறது. மூளையில் இருக்கும் உயிரணுக்கள் முற்றிலுமாக அழிந்து விடுவதுதான் டிமென்ஷியா ஆகும். இந்தியாவில் 3.2. கோடி மக்கள் இதனால் அவதியுறுகின்றனர்.
இன்று மக்களிடையே பரவலாக உள்ளது ஆல்ஜெமர்ஸ் (Alzeimers) நோய்தான். 65 வயதிற்குமேல் உள்ள 100 இந்தியர்களில் 3-5 பேருக்கு இந்நோய் உள்ளது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தைராய்டு சுரப்பிகளின் பணியை, மற்றும் பி-12 சத்தின் குறைபாடு இவற்றை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம். அறியும் சக்தி, நடத்தை இவற்றின் பரிசோதனைகளைச் செய்து பிரச்சனையைக் கண்டறியலாம்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஎம்எஸ் இல் ஒரு ஞாபக மறதி நோய்க்கான பிரிவு தொடங்கப்பட்டது. இந்நோய்க்கான காரணவியலைக் கண்டுபிடிக்க, நரம்பியல் மற்றும் மனோதத்துவ முறை, ஸ்கேன் மூலம் அறிதல் மற்றும் காரணத்திற்கான பாகுபாடுகள் ஆகியவற்றைத் தீவிர ஆராய்ச்சி செய்தனர்.
* 21% மனத்தளர்ச்சியினால் ஏற்பட்ட ஞாபக மறதி நோய்.
* சரியான காரணத்தை அறிய இயலாமல் 59%
* நல்ல ஞாபகசக்தியுடன் 20% பேர்.
* 30% பேர் எம்சிஐயினால் அவதிக்குள்ளாகிறார்கள். இவர்களுக்குப் பாரிசவாயு தாக்குதல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஆராய்ச்சியின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
*15 % பேருக்கு வயதையும் மீறிய அளவில் மூளை சுருங்கியுள்ளது. இவர்களை 13 மாதங்கள் பரிசோதனை செய்ததில் 11% பேருக்கு டிமென்ஷியா அதாவது முற்றிலும் ஞாபக மறதியை இழப்பது எனும் நோய்த் தாக்குதல் ஏற்படுகின்றது.
இவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் அதிக உடல் எடை முன்பே உள்ளது என்றும் கண்டறியப்பட்டது.
* 47% பேருக்கு சீக்கிரமாகவே டிமென்ஷியா நோய் ஏற்படுகிறது. என்று அறியப்பட்டது. ஆனால் மற்ற முன்னேறிய நாடுகளில் முன்பு எடுத்த புள்ளி விபரங்கள் 7-30% வரைதான் இந்நோய் ஏற்படுகின்றது என்று கூறியது.'' இவ்வாறு ருக்ஸானா அன்சாரி கூறுகிறார்.
இவர் அல்ஜெமர்ஸ் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நோய்களின் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
இந்நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களது மூளையின் எப்பகுதி பாதிக்கப்படுகின்றது என்பதைப்பொறுத்து அவர்களது பாதிப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அறிகுறி
* ஞாபக மறதி. இதில் சந்திப்புகளை மறப்பது.. சமீபத்தில் பேசியது அல்லது நடந்த நடப்புகளை மறப்பது.
*யதார்த்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பது புது இடங்களில் குழப்பம், மாதம் தேதிகளை மறப்பது, வீட்டிற்குப் போகும் வழியை மறப்பது.
* பேசுவதில் மிகவும் சிரமம். எளிமையான, நன்கு அறிந்தவற்றை மறப்பது, தவறான வார்த்தைப்பிரயோகம், வார்த்தைகளை மாற்றி மாற்றிக் கூறுவது.
*நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தாரை முற்றிலும் மறந்து விடுவது.
*வங்கிக் காசோலை எழுதுவது, பணத்தை எண்ணுவது, தொலைபேசியினை உபயோகிப்பது போன்ற சற்றே கடினமான விஷயத்தைச் செயலாக்கச் சிரமப்படுவது.
*மிகுந்த மனத் திருப்தியுடன் செய்து வந்த பணிகளைச் செய்யாமல் நிறுத்துவது.
*மற்றவர்களைத் தொந்தரவிற்கு உள்ளாக்கும் பணிகளைப் புரிவது.
*தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மறப்பது, பல் தேய்க்க, உடை உடுக்க, குளிக்க மறந்து போவது.
நன்றி-மஞ்சரி

No comments: