எனக்கு சமீபத்தில் பல்வலி வந்ததால் பல் டாக்டரிடம் சென்றிருந்தேன். `இதற்கு முன் பற்களில் வலி வந்திருக்கிறதா?' என்று டாக்டர் கேட்டார். `வாழ்நாளில் வந்ததில்லை. இன்றுதான் முதன் முதலாக பல் டாக்டரையே பார்க்க வந்திருக்கிறேன்' என்றேன். வாயைத் திறக்கச் சொன்னார்.
எனக்கு அவரிடம் வாயைத் திறந்து காட்ட கூச்சம். வாய் மற்றும் பற்கள் சுத்தமாக இருக்கிறதா, இல்லையா? என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயம். இருந்தாலும் தைரியமாக வாயைத் திறந்து காட்டினேன். காரணம் நான் பெரிய மனிதனாக ஆனதிலிருந்து (அதாவது 18 வயது தாண்டியபிறகு என்று சொல்ல வந்தேன்) தினமும் மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு பிரஷ் பண்ணுவேன். காலையில் மட்டும் பேஸ்டுடன்; மற்ற வேளைகளில் பேஸ்ட் இல்லாமல். எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவேன். இது என் தந்தையின் டிரெயினிங்.
`அப்பா, பேசாம நீங்க எங்கே வெளியே போனாலும் பாக்கெட்டிலேயே ஒரு பிரஷ்ஷை எடுத்துக்கிட்டு போயிடுங்க. வெளியிலேயோ, ஹோட்டலிலேயோ, சாப்பிட்டீங்கன்னா, அங்கேயே பிரஷ் பண்ணிக்கலாம்' என்று என் மகள் கூட என்னை கிண்டல் பண்ணுவாள். ஆகவே பற்கள் கண்டிப்பாக சுத்தமாக இருக்கும் என்ற தைரியம். மேலும் இன்றைய தேதி வரை பல்வலியே வந்தது கிடையாது. அது இன்னும் கொஞ்சம்
தைரியம்.பற்களை எல்லாம் டெஸ்ட் பண்ணிப் பார்த்த பின் டாக்டரைக் கேட்டேன், "என் பல் சுத்தம் எப்படி இருக்கிறது டாக்டர்? கண்டிப்பாக நன்றாக இருக்கணுமே. `குட்', `வெரி குட்', `வெரி வெரி குட்' இதில் எது?'' என்று கேட்டேன். `வெரி பேடு' என்று படாரென்று பல் டாக்டர் என்னைப் பார்த்து சொல்லி விட்டார். ஆடிப் போய்விட்டேன். மூன்று வேளையும் பல் துலக்கும் நமக்கா இப்படி?டாக்டரிடம் விளக்கம் கேட்டேன். டாக்டர், "நீங்க மூன்று வேளையும் பல் தேய்க்கிறீங்க, இல்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் பற்களின் வெளிப்பக்கம் மட்டும்தான் தேய்த்து சுத்தமாக வைத்திருக்கிறீர்களே தவிர, பற்களின் உட்புறத்தில் நீங்கள் சரியாக தேய்க்கவில்லை. நீங்கள் எத்தனை முறை பல் தேய்க்கிறீர்கள் என்பது பிரச்சினை இல்லை. எந்த முறையில் பல் தேய்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம். அதனால் உள்பக்கம் சுத்தமாக இல்லை'' என்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
அது நாள் வரை மொத்த பற்களும் தெரிய, நன்றாக சிரித்த நான், அதற்குப்பிறகு வாயை திறக்கவே கூச்சப்பட்டேன். எப்போதும் சிரித்த முகமாக இருப்பார் என்று எல்லோரும் என்னைச் சொல்வார்கள். அதற்கு தண்டனை இது என்று நினைத்துக் கொண்டேன்.
பற்கள் உடலின் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆனால் நாம்தான் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பல் இல்லாவிட்டால் சொல் இல்லை என்று சொல்லுவது உண்டு. பற்கள் ஆரோக்கியமாக இல்லையென்றால் உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்காது.
கருவில் சிசு உருவான ஆறாவது மாதத்திலேயே அதன் வாயில் கீழ் வரிசையில் முன் பற்கள் இருக்குமிடத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது வளரும் பற்களுக்கு பால் பற்கள் என்று பெயர். சிறிய வயதில் சாப்பிடுவதற்கும் மழலைப் பேச்சுக்களை பேசுவதற்கும் பயன்படும் பால்பற்கள், பின்னாளில் வரவிருக்கும் நிரந்தர பற்களுக்கு முன்கூட்டியே இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது என்று கூட பால் பற்களை சொல்லலாம்.
பற்களுக்கிடையில் நாக்கு மேலும் கீழும் இங்கும் அங்கும் புரண்டு வருவதால்தான் பேச்சு உருவாகிறது. நாக்கு புரண்டிருக்காவிட்டால் நாம் பேசியிருக்க மாட்டோம். உலகில் இத்தனை மொழிகள் தோன்றியிருக்கவும் மாட்டாது.
பற்களின் அழகே அவைகள் வரிசையாக ஒரே சீராக வெள்ளை வெளேரென்று இருப்பதுதான். பால் பற்களை ஒழுங்காக பராமரித்து கவனித்து வந்தால் அதன் பின் வளரும் நிரந்தர பற்கள் ஒழுங்காக சீராக வரிசையாக அதனதன் இடத்தில் வளர ஆரம்பிக்கும்.
குழந்தையின் மூன்றாவது வயதில் கிட்டத்தட்ட இருபது பற்கள் வளர்ந்து விடுகின்றன. ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதிற்குள் அநேகமாக பால்பற்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தானாகவே விழுந்து விடுவதும், சில குழந்தைகள் ஆடுகிற பல்லை கையாலேயே பிடுங்கிவிடுவதும் உண்டு. கிராமங்களில் சிறுவர்கள், ஆடும் பற்களை நூலைக்கட்டி இழுத்து பிடுங்கி விடுவார்கள்.
நிரந்தர பற்கள் கிட்டத்தட்ட ஆறாவது வயதிலிருந்து முளைக்க ஆரம்பிக்கும். பால் பற்கள் விழுந்த குழிகளில் புதுப்பல் (நிரந்தர பல்) முளைக்கும். இது மொத்தம் முப்பத்திரெண்டு ஆக இருக்கும். மேல் வரிசையில் பதினாறு பற்களும், கீழ் வரிசையில் பதினாறு பற்களும் இருக்கும். இதுதான் நிரந்தர பற்கள். உங்கள் வாழ்வின் இறுதிக் காலம் வரை உங்களோடு வரக்கூடிய பற்கள். எனவே இதைத்தான் நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதை சிலர் தவறாக பால் பற்களே என்று நினைத்து விடுவதுண்டு. அதனால் கவனமில்லாமல் இருந்து விடுவார்கள். பன்னிரெண்டு வயதளவில் நிரந்தரப் பற்கள் ஒவ்வொன்றாக முளைத்து விடும். `விஸ்டம் பற்கள்' (கீமிஷிஞிளிவி ஜிளிளிஜிபி) என்று சொல்லக்கூடிய கடைவாய்ப்பல் மட்டும் பதினேழு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் வரும்.
நாம் வளர்க்கும் நம்மைச் சுற்றி வளரும் மிருகங்களுக்கும் அனேகமாக முப்பத்திரெண்டு பற்கள்தான் இருக்கும். மாடுகளுக்குக்கூட முப்பத்திரெண்டு பற்கள் தான். ஆனால் ஒரு வித்தியாசம் நம்மைப் போலல்லாமல் அவைகளுக்கு மேல் தாடையில் பனிரெண்டு பற்களும் கீழ்த்தாடையில் இருபது பற்களும் இருக்கும்.
அதேமாதிரி, மிகப்பெரிய விலங்காகிய யானைக்கு மொத்தம் இருபத்து நான்கு பற்கள்தான். `பிரீ மோலார்' என்று சொல்லக்கூடிய பற்கள் முன்பக்கத்தில் பன்னிரெண்டும், மோலார் என்ற சொல்லக்கூடிய பற்கள் பின்பக்கத்தில் பன்னிரெண்டும் அமைந்திருக்கின்றன. யானையின் தந்தம் கூட பல்வகையைச் சேர்ந்ததுதான். இரண்டாவது `இன்சிஸார்' என்று சொல்லக்கூடிய பல் தான் மாறி அதிகமாக வளர்ந்து தந்தமாகி விடுகிறது.
மனிதனுக்கு வயதான காலத்தில் பற்கள் அனைத்தும் கொட்டிவிட்டாலும் செயற்கைப் பற்கள் மற்றும் பல்செட் உதவியுடன் வாழலாம். ஆனால் யானைக்கு அப்படியல்ல. யானைக்கு, கடைசியாக ஆறாவது செட் பற்கள் (அதாவது 12 பற்கள்) முப்பது வயது ஆகும்போது முளைக்க ஆரம்பித்து அதன் வாழ்நாள் முழுவதும் அதாவது சுமார் எழுபது வயதுவரை இருக்கும். இந்த கடைசி செட் அதாவது ஆறாவது செட் பற்கள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... யானை உயிரோடு இருக்காது. பல் இல்லாததாலும் சாப்பிட முடியாததாலும் யானை பட்டினி கிடந்து இறந்து விடுமாம்.
`பல் முழுவதும் விழுந்துவிட்ட 87 வயது முதியவர் ஒருவரை பற்கள் இல்லையே எப்படி சாப்பிடுகிறீர்கள்' என்றேன். `பல் இல்லாவிட்டால் என்ன, எனக்கு பல்லை விட ஈறு தான் ரொம்ப ஸ்ட்ராங். நான் அசைவ உணவைக்கூட ஈறுகளுக்கிடையில் வைத்து அரைத்து விடுவேன்' என்றார். அவர் சொல்வது உண்மை தான். சிலருக்கு ஈறும், தாடை எலும்பும் மிக மிக உறுதியாக இருக்கும்.
No comments:
Post a Comment