அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதன் அவசியம் அறிந்தே, `இல்லங்கள் தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்` என்றார் அறிஞர் அண்ணா. இன்று உலகம் முழுவதும் நூலகங்கள் பெருகி உள்ளன. நூலக பெருமையை உலகோர் உணர்ந்ததையே இது காட்டுகிறது. 
எகிப்தியர்கள் கி.மு. 300 ஆண்டில் அலக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்ததே முதல் நூலகமாக அறியப்படுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்கள் உருவாக பெருமுயற்சி மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.
***
அமெரிக்காவில் உள்ள `லைப்ரரி ஆப் காங்கிரஸ்' நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகும். 1800-ல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகள், லட்சக்கணக்கான நூல்களும், ஒலி- ஒளி நாடாக்களும் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லி நூலகமே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.
இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைய நூலகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பெரிய கிளை நூலகங்களும், சிறு நூலகங்களும் செயல்படுகின்றன. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஊர்ப்புற நூலகங்களும், ஏராளமான தனியார் நூலகங்களும் உள்ளன.
***
கொல்கத்தாவின் பெல்வேடேர் பகுதியில் உள்ள இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பை பெறுகிறது. 1836-ல் பொது நூலகமாக இது செயல்படத் தொடங்கியது. 1903-ம் ஆண்டில் கர்சன்பிரபு இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பீரியல் நூலகத்தை இணைத்து நி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார். 1953-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் இது தேசிய நூலகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. 1990 வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 20 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. ***
கொல்கத்தாவில் இன்னொரு புகழ்பெற்ற நூலகம் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகமான இதுதான் இந்தியாவின் பழமையான நூலகமாக திகழ்கிறது. 12-12-1856-ல் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் செனட் இல்லத்தில் செயல்பட்டு வந்த நூலகம் 1912- ல் தனிகட்டிடத்திற்கு மாறியது. தர்பங்கா மகாராஜா இதற்கு பெரிதும் உதவினார். 1935 வரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்ட இது, தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கும் கைகொடுக்கிறது. இப்போது இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. ***
டெல்லியில் பிரசித்தி பெற்ற டெல்லி பொது நூலகம் இருக்கிறது. இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து ஏற்படுத்திய சிறப்புக்குரிய நூலகம் இது. மாதிரி பொது நூலகங்களை உருவாக்கும் திட்டத்தில் 1951-ம் ஆண்டில் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகம் என்று பெயர் பெற்ற நூலகம் இது. மைய நூலகமான இது சில பெரிய கிளை நூலகங்களையும், சிறு கிளை நூலகங்கள் பலவற்றையும் கொண்டு செயல்படுகிறது. இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது. ***
சென்னையில் உள்ள கன்னிமாரா பொதுநூலகம் சிறப்புக்குரிய நூலகமாகும். இது 1896-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வெளியீடுகள், ஐ.நா, யுனெஸ்கோ வெளியீடுகளும் இங்கு சேகரிக்கப்படுகிறது. 1990 வரை இங்கு 2 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 6 லட்சம் நூல்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் சென்னையில் சிறப்பாக இயங்கும் இன்னொரு நூலகமாகும். இவ்விரு நூலகங்களிலும் பல்துறையைச் சேர்ந்த பன்மொழி நூல்கள் நிறைந்து கிடைக்கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இவற்றை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
***
சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகம் ஆகும். ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான நூல்களை சேகரித்து இந்த நூலகத்தை 28-12-1886-ல் நிறுவினார். சுற்றுலாப்பிரியரான இவர் அடையாறை ஓய்விடமாக பயன்படுத்தினார். அங்கு தனக்காக உருவாக்கிய நூலகத்தை உலகப்புகழ் பெற்றதாக உயர்த்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பயணித்து பயனுள்ள நூல்களை நூலகத்தில் சேர்த்தார். இங்கும் லட்சக்கணக்கான நூல்கள் பராமரிக்கப்படுகிறது. அரிய, பழமையான நூல்களின் கருவூலம் இந்நூலகம்.
***
தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்". 2010 செப்டம்பர் 15-ல் இந்நூலகம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 8 மாடி கட்டிடத்தில் செயல்படும் இது கன்னிமாரா நூலகத்தைவிட பெரியது. தெற்கு ஆசியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பையும் இது பெற்றிருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி நூல்கள் தனித்தனித் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரெய்லி நூலகப் பிரிவும் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
***
டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்தியன் கவுன்சில் நூலகம் 1 லட்சம் நூல்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் இயங்கி வரும் முக்கிய நூலகமாகும். 1950 முதல் செயல்படும் இந்நூலகம் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். டெல்லி மத்திய தலைமைச் செயலக நூலகம் (21/2 லட்சம் நூல்கள்), உத்தரபிரதேசம் ஆசாத் நூலகம் (5 லட்சம் நூல்), கோவா வரலாற்று ஆவணக்காப்பகம், டெல்லி இண்டியன் நேஷனல் சயின்டிபிக் டாக்மென்ட்டேசன் சென்டர், அகமதாபாத் ஜேத்தாபாய் புத்தகாலயம், டெல்லி நேஷனல் ஆர்ச்சீவ்ஸ் ஆப் இண்டியா போன்றவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூலகங்களாகும்.

No comments: