சமையல் பாத்திரங்களும், சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களும் எப்போதும் மிகமிக சுத்தமாக இருக்க வேண்டும். உணவு சுத்தமாக செய்யப்பட வேண்டுமென்றால் அந்த உணவை சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களும் அதைவிட ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும்.
சமையல் பாத்திரங்களையும், சாப்பாட்டு பாத்திரங்களையும் தினமும் மொத்தமாக கழுவி எடுப்பது என்பது ஒரு சிரமமான காரியம் தான். சிலருக்கு இதில் அலுப்பே வந்து விடும். சவுகரியமானவர்கள் பாத்திரங்களை கழுவுவதற்கென்று `டிஸ் வாஷிங் மெஷின்' வைத்துக்கொண்டு அதன் மூலம் பாத்திரங்களைக் கழுவி எடுப்பதுண்டு. ஆனால் கைகளால் கழுவி எடுக்கிற அந்த சுத்தம் இந்த மெஷினில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
கிராமப்புறங்களில் சிலரது வீடு கிணறு வாய்க்கால் ஓரங்களில் இருக்கும். இவ்வாறு வீடு உள்ளவர்கள் ஓடும் தண்ணீரில் பாத்திரங்களை நன்றாக அலசி, கழுவி எடுக்க முடியும். பாத்திரங்களும் மிக மிக சுத்தமாக இருக்கும். ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் தண்ணீர் பற்றாக்குறையினாலும், வேலைப்பளுவினாலும் அதிக தண்ணீரை உபயோகித்து பாத்திரங்களை நன்றாக அலசி கழுவி எடுக்க முடியாது.
மேலும் எண்ணைப் பிசுக்கு, அழுக்கு, கறை உள்ள பாத்திரங்களைக் கழுவ `கிளினீங் சோப்', `கிளீனிங் பவுடர்' முதலியவைகளை உபயோகப்படுத்த வேண்டி வரும். `கிளீனிங் பவுடர்' முதலியவைகளை உபயோகித்து பாத்திரங்களைக் கழுவும்போது எண்ணைப் பிசுக்கோடு, உபயோகிக்கும் கிளீனிங் பவுடரிலுள்ள ரசாயனப் பொருட்களும் சேர்ந்து அகற்றப்பட வேண்டும். கண்டிப்பாக பலமுறை நன்றாக அலசி எடுக்க வேண்டும். இதற்கு நிறைய தண்ணீர் தேவை.
எனவே தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்துத்தான் பாத்திரங்களின் சுத்தமும், சுகாதாரமும் அமையும். குறைவான தண்ணீர் கிடைக்கும் இடங்களிலுள்ளவர்கள் பாத்திரங்களை சுத்தமாக தேய்த்து கழுவி எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
பாத்திரங்களைக் கழுவிய பிறகு பாத்திரங்களைத் தொட்டால் வழவழவென்று இருக்கக்கூடாது. அப்படி வழவழவென்று இருக்கிறதென்றால் எண்ணைப் பிசுக்கு சரியாக போகவில்லை என்று அர்த்தம். `கிளீனிங் பவுடரை' உபயோகித்து பாத்திரங்களை நன்றாக கழுவி எடுங்கள். எண்ணைப் பிசுக்கு போக வேண்டுமென்பதற்காக கிளீனிங் பவுடரை உபயோகித்து கடைசியில் கிளினீங் பவுடர் பாத்திரத்திலிருந்து போகாத நிலை ஏற்பட்டுவிட வேண்டாம். அதிக கவனம் தேவை.
வெந்நீர் அல்லது கொதிக்கும் நீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங் களிலுள்ள அழுக்கு, கறை, எண்ணைப் பிசுக்கு, கிளினீங் பவுடர் இவை எல்லாமே அறவே ஓடிப்போய்விடும். முக்கியமாக பாத்திரங்களிலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமிகளும் அழிந்து விடும். பாத்திரமும் பார்ப்பதற்கு புதுசு போல தினமும் மின்னும்.
குடிப்பதற்கே வெந்நீருக்கு வழியில்லாதபோது பாத்திரங்களைக் கழுவ வெந்நீருக்கு எங்கே போவது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆக மொத்தத்தில் சுத்தம் வேண்டும், அதற்காக சில காரியங்களை நாம் செய்துதான் ஆக வேண்டும். எது எதுக்கோ நாம் வீண் செலவு பண்ணும்போது உடல் ஆரோக்கியத்துக்காக செலவு பண்ணுவதில் தப்பில்லை.
வெந்நீரில் பாத்திரங்களைக் கழுவிய பின்பு `ஸ்டீம்' அதாவது நீராவியில் பாத்திரத்தை காயவைத்து எடுப்பது இன்னும் சிறந்தது. ஒரு கிருமி கூட பாத்திரத்தில் தங்க வாய்ப்பில்லை.
ஸ்டார் ஓட்டல்களிலும், சில வீடுகளிலும் நான் பார்த்திருக்கிறேன். சாப்பாட்டுத் தட்டை வெந்நீரில் நன்றாக கழுவியபிறகு சுத்தமான வெள்ளைத் துணியை வைத்து ஒரு துளி தண்ணீர்கூட தட்டில் இல்லாத அளவுக்கு நன்றாக துடைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் உணவை வைக்க ஆரம்பிப்பார்கள். இது மிக மிக ஆரோக்கியமான காரியம். ஆனால் துடைக்கும் வெள்ளைத்துணி எப்போதும் சுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரங்களைக் கழுவ பயன்படும் தண்ணீர் பெரும்பாலும் நல்ல தண்ணீர் அல்ல. அதாவது குடிப்பதற்காக நாம் பயன்படுத்தும் தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவ முடியாது. குடிக்கிற தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவி நல்ல தண்ணீரை `வேஸ்ட்' பண்ணவும் முடியாது. வீட்டிற்குள் வரும் தண்ணீர் அனைத்தும் குடிநீராக இருக்க முடியாது. அப்படி வீட்டிற்குள் இருக்கும் எல்லாக் குழாய்களிலுமே வரும் தண்ணீர் குடிநீராக இருக்க வேண்டுமென்றால் அது சுத்திகரிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் நீக்கப்பட்ட சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். அது தேவையுமில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வீட்டில் கூட பாத்திரம் கழுவுவதற்கு மினரல் வாட்டர் உபயோகிக்கிறார்களா என்பது சந்தேகமே.
நாம் பாத்திரங்களைக் கழுவ உபயோகப்படுத்தும் தண்ணீரில் பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. தண்ணீரிலிருக்கும் ஒரு கிருமியைக் கொல்ல வேண்டுமென்றால் தண்ணீர் நன்றாக சூடாக்கப்பட வேண்டும். உங்களது உடம்பு தாங்கக்கூடிய அளவுக்கு வெந்நீர் சூடு இருந்தால் போதாது. சுமார் 100 டிகிரிக்கு மேல் தண்ணீர் சூடுபடுத்தப்பட்டால் தான் அந்த தண்ணீரிலுள்ள கிருமிகள் சாகும்.
சுடுதண்ணீரையும், கிருமி நாசினியையும் சேர்த்து உபயோகித்தால் சமையல் மற்றும் சாப்பிடும் பாத்திரங்களிலுள்ள எண்ணைப் பிசுக்கு, அழுக்கு கறை சுத்தமாக அறவே போய்விடும். சுடுதண்ணீரும் கிருமி நாசினியும் சேர்ந்த தண்ணீர் பாத்திரங்களை கழுவ மிகமிகச் சிறந்தது.
வெந்நீர் உபயோகித்து பாத்திரங்களைக் கழுவும்போது பாத்திரங்களும் மிகமிக சீக்கிரமாக உலர்ந்துவிடும். உதாரணத்திற்கு இரண்டு சாப்பாட்டு தட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை சாதாரண தண்ணீரில் கழுவுங்கள். மற்றொரு தட்டை வெந்நீரில் கழுவுங்கள். இரண்டையும் ஒன்றாக வைத்துவிட்டு கவனியுங்கள்.
உங்கள் கண்ணெதிரில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெந்நீரில் கழுவிய தட்டு ஒரு துளி தண்ணீர் கூட இல்லாமல் சுத்தமாக காய்ந்து விடும். ஆனால் அதே நேரத்தில் சாதாரண தண்ணீரில் கழுவிய தட்டு காய்வதற்கு சற்று நேரம் அதிகமாகும். எனவே முடிந்தவரை சாப்பாட்டுப் பாத்திரங்களை வெந்நீரில் கழுவ முயற்சி செய்யுங்கள். சாதாரண தண்ணீரில் கழுவப்படும் பாத்திரங்களில் கிருமிகள் இருக்க, கிருமிகள் வளர வாய்ப்புண்டு.
சிலர் சாப்பிடுவதற்கு முன்பு பாத்திரத்தை தண்ணீரில் கழுவி அதை ஒழுங்காக வடிய வைக்கக்கூட மாட்டார்கள். கழுவிய தண்ணீர் கொஞ்சம் பாத்திரத்தில் மிச்சமாக இருக்கும். அப்படியே அந்த தண்ணீருடனே சாதத்தை போட்டு அந்த தண்ணீரோடு சேர்த்து பிசைந்து சாப்பிடுவார்கள். தட்டை தண்ணீரில் கழுவிவிட்டு சாப்பிடுவதால் ரொம்ப சுத்தமாக சாப்பிடுவதாக மனதில் நினைப்பு. இது மிகமிகக் கெடுதியான ஒரு காரியம்.
பாத்திரம் கழுவிய பிறகு பாத்திரத்தில் எஞ்சி நிற்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் அல்ல. அந்த தண்ணீரை நன்றாக வடியவைத்துவிட்டு ஒரு துளி தண்ணீர் கூட பாத்திரத்தில் இல்லை என்ற பிறகுதான் சாதத்தைப் போட வேண்டும். அப்படியில்லாமல் ரொம்ப சுத்தமாக சாப்பிடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு அந்த தண்ணீரோடு சாதத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுவது நல்லது கிடையாது.
வாழையிலையை கழுவிவிட்டு சாப்பிடும் போதும் இதையேதான் கடைபிடிக்க வேண்டும். சிலர் கல்யாண வீடுகளில் மினரல் வாட்டரிலேயே இலையைக் கழுவி விட்டேன் என்பார்கள். தயவு செய்து அங்கேயும் இலையிலுள்ள தண்ணீரை வடிய வைத்துவிட்டு சாப்பிடுங்களேன். சுத்தம் சோறு போடும் என்பார்கள். அதுபோல `சுத்தம் சுகம் தரும்'. இதுவும் உண்மைதான். சுத்தமான பாத்திரத்தில் சோற்றைப் போட்டு சாப்பிடுங்கள்!
No comments:
Post a Comment