நமக்கு பலவித சவுகரியங்களை செய்து கொடுத்துள்ளார் பகவான். உணவு, உடை, இடம் எல்லாம் கொடுத்திருக்கிறார். இவைகளை அனுபவிக்க, அவயவங்களையும் தக்கபடி கொடுத்திருக் கிறார்; நாம், அவைகளை அனுபவிக்கிறோம். இதற்காக, நாம் பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துகிறோமா? "இவ்வளவும் நான் சம்பாதித்தது சார்...' என்று, மார் தட்டிக் கொள்கிறோம். பகவானுடைய அருள் இன்றி, நம்மால் எதை சம்பாதிக்க முடியும்; எதை அனுபவிக்க முடியும். இதற்காக, பகவானுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை.
பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டுமானால், அது வெகு சுலபம். பகவான் நாமாவை சொன்னாலும் போதும். நேரம் இருந்தால், பகவான் நாம பஜனை செய் யலாம்; அதுவும் முடியாத போது, துளசி தளம், உத்ரணி தீர்த்தம் எடுத்து, கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி, கீழே விட்டாலும் போதும்; பகவான் திருப்தியடைவார்.
சமையல் செய்த பொருட்களை, அவனுக்குக் காட்டி விட்டு சாப்பிடுவதை, நைவேத்யம் என்பர். நாம் காட்டும் பொருட்களில், ஒரு துளி கூட அவன் எடுத்துக் கொள்வதில்லை; ஆனால், "இவன், இவைகளை எனக்கு காட்டி விட்டு சாப்பிடுகிறானே... அது போதும்...' என்கிறார் பகவான்.
ஒரு வக்கீலிடம், "சார்... என் வழக்கை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்... நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...' என்றார் கட்சிக்காரர். அதற்கு, "இதென்ன பிரமாதம்... பணம் என்று ஒன்று இருக்கும் போது, எப்படி நன்றி சொல்வது என்று என்ன கேள்வி?' என்று பதில் சொன்னார் வக்கீல். அதாவது, பணத்தை கொடுத்து விட்டால், நன்றி சொன்னதாக அர்த்தம் என்பது வக்கீலின் எண்ணம்.
பகவான் பணத்தை கேட்கவில்லை; மனதை தான் கேட்கிறார். "உன் மனம் எப்போதும் என் பக்கம் திரும்பி இருக்கட்டும்...' என்கிறார். "முடியாவிட்டால், ஒரு நாளில், ஒரு வேளையாவது, ஒரு நிமிடமாவது என்னை நினைத்து வழிபடு; நான், உன்னை ரட்சிக்கிறேன்!' என்கிறார்; ஆனால், நமக்குதான் அந்த ஒரு நிமிடம் கிடைப்பதில்லை.
எத்தனையோ காரியங்களை காலை முதல் இரவு வரை செய்கிறோம். ஐந்து நிமிடம் பகவானை நினைக்கவோ, ஜெபம் செய்யவோ முடிவதில்லை; காரணம், மனம் அதில் ஈடுபடவில்லை. மணிக்கணக்காக, "டிவி' பார்க்க முடிகிறது; அதற்கு நேரம் இருக்கிறது; ஆனால், பகவான் புகழ்பாட நேரமில்லை; மனமும் இல்லை. இப்படியே போனால், பகவான் அருள் எப்படி கிடைக்கும்; அவனுக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்? மனம், அதில் ஈடுபட வேண்டும்.
1 comment:
மனம் பக்தியில் லயிக்கவில்லையெனில், இன்னும் வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை என்று பொருள். கவலையே பட வேண்டாம், எப்போது தேவையோ அப்போது கையெடுத்து கும்பிட வைத்து விடுவான். தன்னுடைய செயல்களை முழுமனதோடு எந்த எதிர்பார்ப்புமின்றி செய்பவர்களை பகவானிற்கு பிடிக்கும் -கர்மயோகம். நன்றி.
Post a Comment