Pages

காணக் கண்கோடி வேண்டும்! அழகர் வைகை வைபவம்!காணக் கண்கோடி வேண்டும்! அழகர் வைகை வைபவம்!


மலைகளில் சிறந்தது அழகர்மலை. தன் பக்த கோடிகளுக்கு தீர்த்தம் வழங்கி அருள்வதற்காக, ஏப்., 18 அன்று, மதுரை வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர். இறைவனைத் தேடி பக்தர்கள் செல்வதும், பக்தனைத் தேடி இறைவன் வருவதும் என்றும் உள்ள கதை.
இறைவனை அடைவதற்காக, ரிஷிகள், தங்கள் உடல், பொருள், ஆவியைத் துறக்க தயாராக இருந்தனர். வால்மீகி போன்ற ரிஷிகள், தங்களைச் சுற்றி, புற்று வளர்வது கூட தெரியாமல், பல்லாண்டுகள் தவமிருந்ததாக புராணங்களில் பார்க்கிறோம். தன்னை அடைய இத்தகைய தியாகம் செய்த அவர்களைச் சந்திப்பதற்காக, இறைவனும், பூமிக்கு வந்ததுண்டு.

ஸ்ரீமந்நாராயணன் எடுத்த ராமாவதாரத்தின் நோக்கமே, ரிஷிகளைக் காண வந்தது தான். அவர், தன் அவதார காலத்தில் வசிஷ்டர், விஸ்வாமித்திரர், சபரி அன்னை இன்னும் காட்டில் வசித்த பல ரிஷிகளைச் சந்தித்தார். மன்னனாகப் பிறந்தும், காட்டிற்கு போக வேண்டுமென்று, தனக்குத்தானே ஒரு பிரச்னையை உருவாக்கி, தான் மட்டும் செல்லாமல், தன் துணைவி லட்சுமியின் அவதாரமான சீதா, ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணனுடன் சென்றார். அதுபோல, பூலோகத்திற்கு அழகராகவும் அவர் வந்தார்.
மண்டூகர் என்ற மகரிஷி, ஒரு சாபத்தால், தவளையாகப் பிறந்து, வைகை ஆற்றில் சிரமப்பட்டார். அவருக்கு விமோசனம் அளிக்க பேரழகு பெட்டகமாக, சுந்தரராஜர் என்ற பெயரை கள்ளழகராக மாற்றிக் கொண்டு அருள் செய்தார். அவர் வைகைக்கு வந்ததால், பூலோகத்திலுள்ள பக்தர்களுக்கு அவரைக் காணும் பாக்கியம் கிடைத்தது. பூமிக்கு வரும் கடவுள் வெறுங்கையோடு வருவாரா என்ன... பிறவிப் பிணியைத் தீர்க்கும் தீர்த்தம் கொண்டு வந்தார்.
அழகர், ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள், சக பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். அழகர், பக்தர்களுக்கு தீர்த்தம் தந்து, தன் திருவடியோடு இணைத்துக் கொள்கிறார் என்றே பொருள்.
அவர், கள்ளர் வேடம் தாங்கி வருவதற்கு காரணம், பக்தர்களின் உள்ளங்களைக் கவர்வதற்கு தான்.
ஆனால், ஒரு செவிவழிச் செய்தி தான், கிராமத்து மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. அதாவது, மதுரையில் கோவில் கொண்டுள்ள தன் சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு, சீர்வரிசை கொடுக்க அவர் வந்தார். வழியில் திருடர் பயம் அதிகமாக இருந்தது. இவரும், மானிட அவதாரம் எடுத்த தன் தங்கை மீனாட்சிக்கு, மானிட வடிவம் தாங்கிய அண்ணனா கவே வந்தார். எனவே, சாதாரண மனிதர்கள் திருடர்களுக்கு பயப்படுவது போல், இவரும் பயப்படுவதாக பாவனை காட்டிக் கொண்டார். கள்ளர்களிடமிருந்து தப்ப ஒரு யோசனை செய்தார். இவரும், கள்ளனைப் போல் வேஷமிட்டு கொண்டார். அழகர்மலையில் இருந்து அவர் கிளம்பிவரும் வழியில், கள்ளனாக திரிந்த (மாறிய) இடம் தான், "கள்ளந்திரி' என்ற பெயரில் அழைக் கப்படுகிறது.
கள்ளழகர் அழகை வர்ணிக்கிறாள் ஆண்டாள். "அவரையே கணவனாக அடைவேன்...' என்று சூளுரைக்கிறாள். பெரும்பாலான பெருமாள் கோவில்களில், ஆண்டாள் நின்ற கோலத்தில் தான் இருப்பாள்; அவள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட, இந்த நிலை தான். ஆனால், அழகரின் அழகைக் கண்டாளோ இல்லையோ, அப்படியே உட்கார்ந்து, ரசிக்க ஆரம்பித்து விட்டாள். அதனால் தான், அழகர்கோவிலில் மட்டும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.
ஆண்டாள் கண்ட அந்த அழகன், வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு அடுத்த நாள், மண்டூகருக்கு மோட்சம் தர கருட வாகனத்தில் அமர்ந்து, மீண்டும் இறங்குவார். ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி கொடுப்பார். இந்தப் பேரழகை பார்க்க, மதுரை சென்று வாருங்களேன்.

No comments: