Pages

இந்து மங்கையர்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

இந்துக்களின் குடும்ப வாழ்க்கை பலவித சம்பிரதாயங்களைக் கொண்டது.
அந்தச் சம்பிரதாயங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இருந்தன என்பதை, சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சொற்பொழிவுகளால் அறிய முடிகிறது.
சுவாமி கூறுகிறார்:
``இந்தியாவில் லட்சியப் பெண்மணி, தாய். அன்னையே முன்னறி தெய்வம். இறுதியாக, அறியப்படுவதும் அன்னையே. `பெண்' என்ற சொல் இந்தியனுக்கு எண்ணத்தில் தாய்மையையே நினைவுபடுத்துகிறது. ஆண்டவனையே அவர்கள் `அன்னை' என்றுதான் வணங்குகிறார்கள். குழந்தைப் பருவத்திலே, நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியற்காலத்தில் சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று அன்னையின் முன் வைப்போம். அவள் அதிலே தன் காற் பெருவிரலைத் தோய்ப்பாள். அந்நீரை நாங்கள் பருகுவோம்.    மேலை நாட்டிலே பெண் என்றால் மனைவி. பெண்மை என்னும் லட்சியம், இங்கே மனைவியாகக் குவிந்திருக்கிறது. இந்தியாவில் பாமரன் கருத்துப்படி பெண்மணியின் முழுச் சக்தியும் தாய்மையில் ஒருமுகப்பட்டுள்ளது. மேல் நாட்டிலே மனைவி, வீட்டை ஆள்கிறாள். இந்தியக் குடும்பத்திலே வீட்டை ஆள்பவள் தாய். மேலை நாட்டுக் குடும்பத்தில் ஒரு தாய் ழைந்தால் அவர் மனைவிக்கு அடங்கியே இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நாட்டிலே மனைவிதான் தாய்க்கு அடங்க வேண்டும்.
மனைவி என்ற இடத்தில் இந்தியப் பெண்மணி வகிக்கும் நிலை என்ன? இன்னும் என்னை ஈன்றெடுத்துப் புகழுக்கெல்லாம் பாத்திரமாகிய அன்னையின் நிலை என்ன? ஒன்பது மாதம் என்னைக் கருவிலே காத்த அவள் நிலை யாது? தேவைப்பட்டால் இருபது தடவையானாலும் எனக்காகத் தன் உயிரைத் தரக்கூடிய அவள் எங்கே? நான் எவ்வளவு தீயவனானாலும் தன் அன்பு என்றும் மறவாத தாயின் நிலை எது? ஒரு சிறிது யான் அவளைத் தவறாக நடத்தியதும் உடனே மணமுறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் மனைவியோடு ஒப்பிடுங்கால் அந்தத் தாய் எங்கே? ஓ! அமெரிக்க மங்கையரே! அவள் எங்கே?
எங்கள் தாய்! அவளுக்கு முன்னால் நாங்கள் இறப்பதாயினும் அவள் மடியிலே தலைவைத்தே இறக்க ஆசைப்படுகிறோம். `பெண்ணென்பது உடலோடு உறவு ஏற்படுத்தக்கூடிய பேர்தானா! இந்துக்கள் அந்தப் பெயரை நிரந்தரமாகப் புனிதமாக்கி விட்டார்கள். `காமம்' என்பதே என்றும் அணுகாத, தீய நினைவுகளே என்றும் நெருங்காத ஒரு பெயர், தாய் எனும் ஒன்றைத் தவிர வேறு எது?
எங்கள் நாட்டிலே ஒவ்வொரு பெண்ணையும், `தாயே' என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். சிறுமியைக் கூட `அம்மா' என்றுதான் அழைக்கிறோம்.
இங்கே அமெரிக்கப் பெண்களை நான் `தாயே' என்று அழைத்தபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். எனக்குக் காரணம் புரிந்தது. தாய் என்றால் வயது முதிர்ந்தவர்கள் என்று இங்குள்ளவர்கள் எண்ணுகிறார்கள். எங்கள் நாட்டில் பெண்கள் அனைத்துமே தாய்மை.
தாய்தான் முதலில்; பின்புதான் மனைவி; நான் மணம் புரிந்துகொண்டிருந்தேனாயின், என் மனைவி, என் அன்னையை வருத்தப்படுத்தத் துணிந்தால் நான் அவளை வெறுப்பேன். ஏன், நான் என் தாயை வணங்கவில்லையா? அவளுடைய மருமகள் ஏன் அவளை வழிபடலாகாது? நான் வழிபடும் ஒருவரை அவள் வழிபட்டால் என்ன? என் தலைமேலே ஏறிக்கொண்டு என் தாயை அதிகாரம் செய்ய அவள் யார்? தாய்மையிலிருந்தே பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. அதுதான் அடிப்படை! அங்கிருந்து முன்னேறுங்கள்''.
ஆம், இந்துவின் குடும்பம் என்பது தாய்மையையே தலையாகக் கொண்டது.
அங்கிருந்துதான் ஒவ்வொரு கிளையும் தொடங்குகிறது.
தாயை மகன் நேசிப்பதுபோல், மருமகளும் நேசித்தாக வேண்டும்.
தன் தாயை நேசிக்காத மனைவியை, கணவன் தான் நேசிக்கக் கூடாது.
தாய் வேர்.
மகன் மரம்.
அந்த மரக்கிளையில் வந்தமரும் பறவையே மனைவி.
தன்மீது விளையாட அந்தப் பறவைக்கு மரம் இடம் கொடுத்ததால் மரத்தின் வேரை அது கொத்தித் தின்ன முடியாது.
இந்துக் குடும்பத்தில் மருமகள் என்பவளின் அந்தஸ்து வீட்டுக்கு ராணி என்னும் அந்தஸ்தல்ல; தாய் என்னும் ராணியின் தோழி என்னும் அந்தஸ்தே.
கணவன் தன்னிடம் பெறும் சுக அனுபவங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும், அவனது தாயை அவள் விலையாகக் கேட்க முடியாது.
எவள் இல்லையென்றால் இந்தப் பூமியில் அவன் ஜனித்திருக்க முடியாதோ, அவளேதான் எல்லோரையும்விட உயர்ந்தவள்.
அந்தத் தாயின் அந்தஸ்தை ஒப்புக்கொண்ட மருமகள்தான், தனக்கு வரப் போகும் மருமகளிடம் அந்த அந்தஸ்தை எதிர்பார்க்க முடியும்.
மருமகளும் ஒரு நாள் மாமியார் ஆகத்தான் போகிறாள்.
ஆகவே, குடும்பக் கோவிலின் கோபுரம் அன்னையே.
இந்துக்கள் பொருளாதாரத் திலும் அதே நிலையை வைத்திருந்தார்கள்.
மகன், தான் தனியாகச் சம்பாதிக்கிற பணத்தைத் தாய் தந்தைக்குத் தெரியாமல் மனைவியிடம் கொடுக்க முடியாது.
மகனையும், மருமகளையும் அதே அளவிலே கட்டுப்படுத்துவதற்குத்தான், `பாட்டனின் சொத்து பேரனுக்கு' என்ற சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார்கள்.
தன் தகப்பன் சொத்தை மகன் விற்றுவிட்டால், பேரன் கோர்ட்டுக்குப் போனால், அந்த விற்பனை செல்லுபடியாகாது.
இந்துக்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் இதிலே அடங்கியிருக்கிறது.
`தாயின் தனி உடைமைகள் பெண் மகளுக்கே' என்பது இந்துக்களின் சம்பிரதாயம்.    மகனது குடும்பத்துக்குப் பாதுகாப்புக்காக, `தகப்பன் சொத்துப் பேரனுக்கு' என்றும், பெண் மக்களுக்குப் பாதுகாப்பாகத் `தாயின் சொத்து பெண் மக்களுக்கு' என்றும் வகுத்தார்கள்.
அதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் வழியில் சொத்து வருகிறது.
அவளது பிள்ளைக்குப் பாட்டன் வழியில் சொத்து வருகிறது.
மகன் சம்பாதிப்பது அவனது பேரனுக்குப் போகிறது.
ஆகவே, ஒவ்வொரு தலைமுறைக்கும் சொத்துப் பாதுகாப்பு இருக்கிறது.
இதிலே இன்னும் ஒரு கௌரவத்தை இந்து மகன் தாய்க்கு அளித்தான்.
அதாவது, தாயின் முன்னிலையில் மனைவியோடு பேசுவதில்லை.
இன்று காலம் மாறிவிட்டது.
சம்பிரதாயங்கள் மீறப்படுகின்றன.
தாயின் முன்னிலையில் மனைவியின்மீது கைபோடுவதுகூட வேடிக்கையாகி விட்டது.
போன தலைமுறை வரை நமது இந்து சமுதாயம் கண்டிப்பான சம்பிரதாயங்களை அனுஷ்டித்தது.
தாய் தகப்பன் விழித்துக் கொண்டிருக்கும் போது கணவனும் மனைவியும் தனியறைக்குள் செல்ல மாட்டார்கள்.
கணவன் பெயர் `சங்கரன்' என்றிருந்தால் இதே சங்கரன் என்ற பெயரில் அவனுக்கொரு தம்பியோ வேலைக்காரனோ இருக்கலாம்.
அவனை, `டேய் சங்கரா?' என்று அழைக்க நேரிடலாம்.
அது கணவனை அவமானப்படுத்துவதாக அமையலாம்.
ஆகவேதான், கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்று வைத்தார்கள்.
பெண்ணுக்கு அடக்கம் போதிக்கப்பட்டது.
சத்தம் போட்டுச் சிரிப்பது இழிவான பெண்களின் குணம் என்று கருதப்பட்டது.
அதனால், `நகுதல் - நகைத்தல' என்று மெல்லச் சிரிப்பதை, அது பெண்ணுக்கு வலியுறுத்தியது.
அந்தச் சிரிப்பையும் அவள், பிற ஆடவர் முன்னிலையில் சிரிக்கக் கூடாது.
காரணம், எவனாவது ஒரு ஆடவன் அந்தச் சிரிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.
``பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு'' என்பது பழமொழி.
நேருக்கு நேராக அவள் யாரையும் பார்க்கக் கூடாது.
இந்தப் பார்வை, சிரிப்பு - இரண்டையும் ஒரு குறளில் சொன்னான் வள்ளுவன்.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
ஆம், பாராத போது பார்க்கும், மெல்ல நகும். அவ்வளவுதான்.
காதல் உணர்ச்சியில் அவள் உடலில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும்.
அவள் உள்ளம் கொதிக்கும். ஆனால், அப்போதும் அவள் ஊமையாகவே இருப்பாள்.
`நாணம்' என்பது தமிழ்ச் சொல்தான்; என்றாலும், இமயமுதல் குமரிவரையிலே உள்ள இந்துப் பெண்களுக்கு அது பொதுச் சொல் ஆகும்.
இந்துக்கள் இந்த நாணத்தை மனப் பழக்கமாகத் தொடங்கி, உடற் பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.
இந்துப் பெண்களுக்கு நாணம் சொல்லித் தெரியவேண்டிய கலையல்ல; அது அவள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.
சாந்தி முகூர்த்தத்தன்று, மணமகளை இரண்டொரு மங்கல மங்கையர் அழைத்துக் கொண்டு போய் பள்ளியறையில் உட்கார வைக்கும் பழக்கம் இந்துக்களிடையே உண்டு.    ஏனிந்தப் பழக்கம்?
காமத்தால் துடித்தும், நாணத்தால் நடக்க முடியாமலிருக்கும் அந்தப் பெண்ணை, நாலுபேர் நடத்திக் கொண்டு போவதாக ஐதீகம்.
இதைத் `தனியறை சேர்த்தல்', `அமளியிற் சேர்த்தல்' என்று இதிகாசங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன.
இவையனைத்தும் பலமான கட்டுக்காவற் சம்பிரதாயங்கள்.
இவற்றை மீறுவோர் உண்டு. தவறுவோர் உண்டு.
இவர்கள் சமுதாய அங்கவீனர்கள்.
இவர்கள் நற்குடிப் பிறவாதவர்கள்.
வள்ளுவன் தெளிவாகவே சொன்னான்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும், என்று.
`ஒருவன் அல்லது ஒருத்தியின் நடத்தை தவறாயின் அவர்களது குலமே சந்தேகத்திற்குரியது' என்றான் வள்ளுவன்.
இன்னும் மணமாகாத இந்து இளைஞன், தனது சம்பிரதாயங்களின்படி அமையப்பெற்ற ஒரு பெண்ணோவியத்தைப் தேர்ந்தெடுத்தால், அவனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
நீண்ட நாள் கணவனைப் பிரிந்திருந்தாலும், நெறிமுறை பிறழாது, உலை மூச்சைப்போல அனல் மூச்சை ஜீரணித்து உப்பைக் குறைத்துச் சாப்பிட்டும், குளிர்ந்த நீராடியும் காம உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஓர் இந்துப் பெண் கிடைப்பதுபோல், கணவன் பெறக்கூடிய பெரும்பேறு வேறு எதுவுமே இல்லை.
கண்களையும் கவர்ச்சிகளையும் நம்பி, கட்டுப்பாடற்ற பெண்ணின் வலையில் விழுவோர் ஒன்று பைத்தியமாவார்கள்; அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்துச் சட்டங்கள் மட்டுமல்லாது, சம்பிரதாயங்களும்கூட, சகல வழிகளிலும் செம்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.
வாழ்க்கை என்பது உடல் இச்சை மட்டுமன்று.
அதனையும் மீறிச் சில சுகங்களும் பெருமைகளும் உண்டு.
உடல் இச்சை மட்டும் மூல ஆதாரமாக இருந்து விட்டால், பெண்ணைத் தேர்வதில் இளைஞன் தவறி விழுவான்.
தாய்க்கும் தனக்கும், அடங்கிய பெண்ணுக்கு அழகு தேவையில்லை.
அவள் அழகில்லாதவளானாலும், அவளுக்குத் தெய்வமும் நிகரில்லை!

No comments: