தன்னைத்தானே வணங்கும் `மதுரை பிள்ளையார்'

முக்குறுணி விநாயகர் விநாயகரை பல்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் இட்டு அழைக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ளேயே பல பெயர்களில் விநாயகர் வணங்கப்படுகிறார்.
இவர்களில் முக்கியமானவர் முக்குறுணி விநாயகர். இவரே இக்கோவிலில் உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 6 கிலோ.
இந்த விநாயகருக்கு 3 குறுணி, அதாவது 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அதனால், முக்குறுணி என்ற பெயர் இவருக்கு நிலைத்துவிட்டது.
மன்னர் திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தார். அதை மீனாட்சியம்மன் கோவிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். அதற்கு ஆதாரமாக, இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின்
உருவங்களை பார்க்கலாம்.
மேலும், மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்
பாலிக்கிறார்.
விபூதி விநாயகர் மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்து கொள்ளும் வகையில் விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் விபூதியைக் கொண்டு இவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அவ்வாறு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது அவர்களது நம்பிக்கை.
விபூதி என்றால் `மேலான செல்வம்' என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும், வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதேபோல், மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. பொதுவாக நாம் உலகில் ஆதிமூலமாக விநாயகரைத்தான் கருதுகிறோம். அவரை வணங்கிய பிறகுதான் பிற தெய்வங்களை வணங்குவது மரபு.
இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில், விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

No comments: