மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம்

கடல் உணவு வகைகளான நண்டு, மீன், இறால் போன்றவை அசைவு உணவு பிரியர்களின் மிக விருப்பமான ஐட்டங்களாகும். குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு புரதச்சத்தும் உள்ள கடல் உணவு வகைகள் ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றன. உடல் தசைகளின் உறுதிக்கும், உடலின் கொலஸ்டிரால் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதற்கும், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம். ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறிகளை விட கடல் உணவு வகைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகும்


கடல் மீன் உணவில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உடலுக்கு மிகவும் அவசியமானதாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மீன் உணவில் இது இயற்கையாகவே உள்ளது. ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும், மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் இது உதவுகிறது. நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி இந்தஆசிட் சில வகை புற்றுநோய்களை தடுக்கிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி, செலனியம், அயோடின் மற்றும் சில தாதுப் பொருட்களும் கடல் மீனில் உள்ளன.
ஒரு மனிதன், 100 கிராம் மீன் சாப்பிட்டால், அதில் சுமார் 20 கிராம் வரை புரதச்சத்து கிடைக்கிறது. சுமார் 60 கிலோ எடை உள்ள நடுத்தர வயது ஆண்களுக்கு, ஒரு நாளைக்கு 50-55 கிராமும், பெண்களுக்கு 40-45 கிராமும் உணவில் புரதச்சத்து இருக்க வேண்டும். நீங்கள் 200 ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன் வாங்கி உங்கள் வீட்டில் உள்ள நான்கு பேர் சாப்பிட்டால், ஒரு நபருக்கு சுமார் 50 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. இதன் மதிப்பு வெறும் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் புரதச்சத்து பவுடர் கடையில் வாங்கினால், அதன் செலவு மிக அதிகமாகும்.
இந்திய கடல் உணவு ஏற்றுமதி கழகத்தின் அறிக்கையின்படி 2009-2010 வருடத்தில் மட்டும், பத்தாயிரத்து நாற்பத்து எட்டு கோடி ரூபாய்க்கு கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய வருடத்தை விட பதினாறு சதவிகிதம் அதிகரித்து கடல் உணவு ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்து உள்ளது.
தற்போது உள்ள நடைமுறையில், முதல் தர நண்டு, மீன் மற்றும் இறால்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. உடல் திறனுக்கும், புத்திக் கூர்மைக்கும் அவசியமான புரதச்சத்து சாதாரண மக்களுக்கு முன்பு கிடைத்ததை போல் இப்போது கிடைப்பதில்லை. இவ்வாறு, ஒரு நாட்டின் புரதச் சத்து உணவு உள்நாட்டு மக்களுக்கு கிடைக்காத வகையில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதை ஆங்கிலத்தில் `ப்ரோடீன் பைரசி' என்பர். பரவலான புரதச்சத்து குறைபாடு என்பது குழந்தை களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அறிவுத்திறனுடன் தொடர்புடையது என்பதால், இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண சரியான அணுகுமுறை அவசியமாகும்.
பாரம்பரிய மீன் பிடி முறைகளை விடுத்து சுருக்குமடி, இரட்டைமடி, வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற சில தவறான மீன் பிடி முறைகளை மேற்கொள்ளும் ஒருசிலரால், நாம் சாப்பிடக்கூடிய கிட்டத்தட்ட 113 வகை மீன்கள் இல்லாதேபோகும் நிலைக்கு வந்துவிட்டன. தமிழக கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு அழிந்து கொண்டு இருக்கிற மீன்களின் பட்டியல் அதிகம்.
அந்த மீன்களின் தமிழ் பெயர்கள்: கூறல், உள்ளன், கொம்பன் சுறா, வெல்மீன், பன்னா, குதுப்பு, செம்மீன், சீலா, கட்டிக்காலை, கட்டா, வாவல், கடவுறா, குமுளா, நெய் மஞ்சளா, சாவாலை, அருந்தல், பூவாலை, காலா, தீக்குச்சி மீன், அராம்பு, வேடகொம்பன், வெள்ளைக்குறி, மாம்பழ கெழுது, இழுப்பன், சல்பாகெழுது, பொதி கெழுது, குழிபன்னா, வாணியம் பன்னா, நவரை, நங்கல்குட்டி, பொய்க்குட்டி, பொய்க்கம், கருவால் உள்ளம், காக்கன், சுதும்பு, தீராங்கன்னி, வங்கராச்சி, கார்த்திகை வாளை, வலங்கம்பாறை, முசுக்கம் பாறை, கண்டல், தோவை, ஆனைக்கத்தலை, மட்லீசி, தோக்கரா, வெள்ளுடா, வெங்கன், சீத்தலா, பொருவா, பால்கெண்டை மற்றும் செப்பிலி. இந்த லிஸ்டில் வராத பல மீன் களையும் இப்போது நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு மீன் இனங்களை அழிவிலிருந்து காக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில், கடலில் உள்ள ஒவ்வொரு வகை மீனும் வெவ்வேறு பருவ காலங்களில் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. அப்படி இருக்கும்போது வருடத்தின் குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மட்டும் மீன் பிடிக்கத் தடை விதிப்பது எந்தவிதத்தில் பயனளிக்கும் என்பதும் கேள்வியாகிறது.
கடல் உணவுக்கான இன்றைய நமது தேவை பத்து கோடியே நாற்பத்து மூன்று லட்சம் மெட்ரிக் டன் என தெரிய வருகிறது. கடல் உணவின் தேவை அதிகரிக்கும்போது, வளர்ந்த நாடுகள் லோக்கல் மார்க்கெட்டின் வழக்கமான விலையை விட பல மடங்கு விலை கொடுத்து இறக்குமதி செய்து கொள்கின்றன. இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் மீன் வளங்களை இயன்றவரை பிடித்து ஏற்றுமதி செய்யும் மனநிலையை உருவாக்கி விட்டது. குறுகிய காலத்தில் அதிக மீன்களை பிடிப்பதற்காக பல தவறான மீன் பிடி முறைகள் சிலரால் கையாளப்படுகின்றன. தமிழக கடலோரத்தில் உள்ள மீன் உற்பத்தி தளங்கள் பாதிப்படைந்து, தமிழக கடற்பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளதால், மீனவர்கள் கடலில் நீண்ட தூரம் போய் மீன்பிடிக்கச் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காகவே கடல் அலைகளோடு போராடும் மீனவர்கள், நம் நாட்டிற்கு தருவதோ ஆயிரம் கோடிகளில் அன்னிய செலாவணி. எனவே, கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது என்று மேலோட்டமாக பார்ப்பதை விட்டு, புரதச்சத்து சார்ந்த பிரச்சினையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சாதாரண மீனவர்கள் படும் துயரங்களை போக்கவும் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
(கட்டுரை: டாக்டர் வே.பாலாஜி, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், பட்டுக்கோட்டை)

No comments: