சூடிக்கொடுத்த சுடர்க்கொடி



சூடிகொடுத்த சுடர்க்கொடி என்றாலே ஆண்டாளின் நினைவுதான் நமக்கு வரும். ஒரு முறை நாராயணனிடம் லட்சுமி கேட்டாள். ` உங்கள் பக்தர்களிலே உங்களுக்கு யாரை அதிகம் பிடிக்கும்?'


`எனக்கு பூமாலை சூடுபவர்களைப் பிடிக்கும். ஆனால் அதை விட எனக்கு பாமாலை சூடுபவர்களை இன்னும் அதிகம் பிடிக்கும் ' என்றார். அதாவது அவரைப்பற்றி பாடல்கள் புனைபவர்களை அதிகம் பிடிக்குமாம். இதற்காக பெருமாள் கூட புகழ்ச்சியை விரும்பியிருக்கிறார் என்பது பொருளல்ல. ஒருவர் மீது காதல் கொள்ளும்போதுதான், ஒரு மனிதனின் படைப்பாற்றல் அதிகம் வளம் பெறும். அதன் மூலமாக அந்த மொழியும் செழிப்புறும். ஆண்டாளை பெருமாளின் மகளிர் அணித் தலைவியாக மட்டும் பார்த்து நாத்திக செம்மல்கள் கொதிப்படைய வேண்டிய தேவையில்லை. பெரியாழ்வாரின் புதல்வியும் தமிழ் வளர்த்த சிந்தனையாளர்களில் ஒருவராக கொள்ளலாம்.






ஆண்டாள்தான் ஆண்டவனுக்கு பாமாலையும், பூமாலையையும் சூடிக்கொடுத்தவள். இதன் பொருள் என்ன ?அன்புக்காதல் தொலைதூரத்தையும் சமீபமாக்கிவிடுகிறது. அன்னியனையும் சகோதரனாக்குகிறது.


பக்திக்காதல் என்பது பரமபதத்தையும் மண்ணில் கொண்டு வந்து விடுகிறது.ஆண்டவனையும் அருட்காதலனாக தழவிக்கொள்கிறது. ஆண்டவன் காதலியைத் தழவி கொள்வது போல் பக்தனை அணைத்துப் பாதுகாக்கிறான் என்று நம்புகிறது.





அன்பின் மூலமாகத்தான் ஆண்டவன் பக்தர்களுக்கு அடியவன் ஆகிறான். அன்பனாகிறான்; காதலனாகிறான். பரமனே பரம பக்திக்கு கட்டுப்படுகிறான்.. பக்தன் விரும்புவதை தானும் விரும்புகிறான். பரத்வம் பரம பக்தியால் எளிமையிலும் எளிமையாகிவிடுகிறது.காதல் வெள்ளம் கரை புரண்டு ஒட அதில் ஆசாரம் முதலிய மரபுகள் எல்லாம் கரைந்து போகின்றன. அன்பு தழவியே ஒன்றே ஆசாரமாகிறது. மரபுகளாகிறது

ஆண்டாளைப் பற்றிய இந்த சிந்தனைகள் ஆன்மிகப் பிரசாரம் அல்ல.நாத்திகம் என்கிற பெயரால் எப்படி நல்ல தமிழ் பக்திக்குள் கிடந்ததால், தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவேடுதான். பக்தி இலக்கியங்களிலிருந்த நல்ல தமிழை நினைவுபடுத்தும் ஒரு முயற்சி.

ஒரு ராணி இருந்தாள். அவள் கடவுளுக்காக வைத்திருந்த மலரை நுகர்ந்து பார்த்தாள். அதற்காக அவளுக்கு தண்டனை கிடைக்கிறது.பக்திக்கு ஆசாரம் மிகவும் அவசியமானது என்பது மரபு.இதே கதை சைவத்திலும் உண்டு. இந்தச் செய்தியை உலகத்திற்கு சொன்னவர் சேக்கிழார் பெருமாள்.கண்ணப்பன் கதையில் வேடனின் எச்சிலை கூட சிவபெருமான் விரும்பிய்தாக பாடியுள்ளார்.இக்கதையில் அவர் ஆசாரம் பக்திக்கு மேலானது என்று காட்டுகிறார்.


ஆண்டாளின் கதையில் பெரியாழ்வார் நறுமலர் கொயது பூமாலை தொடுத்துக் கூடையில் வைத்திருந்தார். அந்த பூக்களின் நறுமணம் தன் தந்தையாரின் கைவண்ணம் என்று நினைத்தாள். பிறகு அந்த மலரை தன் தலையில் சூடிக்கொண்டு தானும் அதற்கு நறுமணம் சேர்ப்பதாக நினைத்தாள். தினமும் ஆண்டாள் சூடிய மலர்களே பெருமாளுக்கு போனது. ஒரு நாள் மாலையில் ஒரு உரோமம் தென்பட்டது. அதைக் கண்ட அர்ச்சகர் `மாலைகள் அசுத்தமாகிவிட்டன' என்று திருப்பி கொடுத்துவிட்டார். இதற்கு காரணம் யார் என்று தெரிந்து ஆண்டாளை கடிந்து கொண்டார். நல்ல மாலையை கொண்டு போனார் கோவிலுக்கு. அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி `பூவின் இயற்கை மணத்தோடு உம்முடைய புதல்வியின் கூந்தல் மணமும் எனக்கு பிடிக்கும்' என்றார்.இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பலரும் கனவு கண்டார்கள்,` தன் மகள் தன் பரமபக்தியால் என்னை ஆண்டு கொண்டாள்' என்றார் பெரியாழ்வார். அன்றுவரை கோதையாக இருந்த்வள் ஆண்டாளாக ஆனாள்.இது பரமபக்தியின் உச்ச நிலை.ஆண்டாளின் காதலை பரமபக்தியாக எடுத்துக்கொண்டார் ஆண்டவன்


`ஒரு மகள் தன்னை உடையேன்:

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்'

செங்கண்மால்தான் கொண்டு போனான். என்பது பெரியாழ்வார் வாக்கு

பல வலைப்பதிவு வாசகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பக்தி மூலமாக தமிழ் பரப்பிய ஆண்டாளைப்பற்றிய செய்திகள் தொடர்கிறது.ஆண்டாளின் வாழ்க்கை என்பது வித்தில் அடங்கிய விருட்சம் என்று பொதுவாக சொல்லுவார்கள். காதல் துறையில் பெரியாழ்வார் தமது பக்தியை தாய் சொல்லும் பாசுரமாகவே வெளியிட்டிருக்கிறார் என்பது அந்த பாடல்களை படித்தாலே புரியும்.


ஆண்டாளை ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே பலரும் பார்த்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராஜாஜி, ரசிகமணி டிகேசி. தன் பாடல்கள் மூலமாக பெரியாழ்வார் ஆண்டாள், அவள் வாழ்க்கைப் பற்றி ஒரு தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே உணர்ந்துகொண்டார் என்று நினைப்பவர்களும் உண்டு.


`பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்' என்று ஒரு பாடலில் வருகிறது. ஆண்டாள் தன்னைப் பற்றி சொல்லும்போது ` பட்ட்ர்பிரான் கோதை' என்கிறாள்.` ஒரு மகள் தன்னையுடையேன்' என்கிறார் பெரியாழ்வார். இவற்றை வைத்து ஆண்டாளை சிலர் பெரியாழ்வாரின் சொந்தப் பெண் என்றே கருதுகிறார்கள்.


குருபரம்பரைக் கதைகளோ எல்லாம் ஒரு முகமாக ஆண்டாளை வளர்ப்புப் பெண்ணாகவே சொல்கின்றன். ` இவளுக்கு துளசியே தாய், பெரியாழ்வார் தந்தை' என்கிறார் ஒரு கவிஞர். இவள் பூமித்தாயின் புதல்வி என்று சொல்பவர்களும் உண்டு. பக்திக்கும், பணிக்கும் ஒரு இலக்கிய உதாரணமாக தோன்றியவள் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்புகிறார்கள்.


சூரியோதயத்திற்கு முன்பு பெரியாழ்வார் நந்தவனத்திற்குப் போனார், திருத்துழாய் செடியின் `மடி' யில் குழந்தை கோதையை கண்டாராம், ஒரு ஜோதி ரூபமாக,


ஜோதிமேல் ஜோதியாகித்

துலங்குதல் தொண்டர் கண்டார்

என்கிறார் வடிவழகிய நம்பிதாசர்


பசுமையாக இருந்த அந்த நந்தவனத்திலே ஒரு பகுதியிலே ! அங்கே பெரியாழ்வார் அதிசயமாக குழந்தை கோதையை கண்டாராம்


புதுமதுப் பொங்கும் பச்சைப்

பசுந்துழாய்ப் பூட்டினூடே

கதுமென விழியால் நோக்கி,

கருணையின் கொழந்தைக் கண்டார்


இந்தக் கருணை கொழந்தை பக்திக் கொழந்தாக பெரியாழ்வார் வளர்த்தார்,தத்துக்கொண்டதைப் போலே.ஏற்கெனவே, பெரியாழ்வாரின் பரம பக்தி மானசீகமாக கண்ணனைப் பெற்று வளர்த்தது. யசோதை தாய் போல், தேவகி தாய் போல், பெரியாழ்வாரும் தாயாகிவிட்டார்

பெரியாழ்வார் மானசீகமாகப் பெற்று வளர்த்த மகள் பாலகோபாலனுக்கே வாழ்க்கைப்பட்டாள் கோதை. அவனையே காதலித்தாள்; அவனுக்கே பித்தானாள்; அவன் காதலியாகவே வளர்ந்து வந்தாள். வளர்ப்புப் பெண் மானசீகப் புத்திரனை மணந்தாள் என்பது ஆண்டாளின் ரத்தினச் சுருக்கமான கதை.
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள் ' என்பார் கண்ணதாசன்

4 comments:

இதழ் சுந்தர் said...

உங்கள் தமிழ் நன்று இப்படி தமிழை வளர்த்துக்கொள்ள நூல்களை பரிந்துரை செய்யுங்களேன்

Anonymous said...

ஆண்டாள் பற்றிய ஆக்கம் நல்ல தகவலாக உள்ளது வாழ்த்துகள். மேலும் பார்க்கிறேன்.
Vetha Elangathilakam
Denmark.

Anonymous said...

ஆண்டாள் பற்றிய ஆக்கம் நல்ல தகவலாக உள்ளது வாழ்த்துகள். மேலும் பார்க்கிறேன்.
Vetha. Elangathilakam.
Denmark.

kobikashok said...

உங்களது வருகைக்கு மிக்க நன்றி தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள்