சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!


மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.
தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ்
அண்ட் மேனேஜ்மென்ட்"  இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

No comments: