நவராத்திரி

துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் நாயகியர் மூவர்க்கு உரியது நவராத்திரி. இந்த நாட்களில் தினமும் பூஜை செய்ய இயலாவிட்டாலும் சரஸ்வதி பூஜை என்று சொல்லப்படும் தினமான ஒன்பதாவது நாளில் (நவமி திதி தினம்) மட்டுமாவது பூஜை செய்வது அவசியம் என்கின்றன புராணங்கள்.

காரணம், ஒவ்வொருவரின் வாழ்விலும் கலைமகளின் ஆசி மிக மிக முக்கியமானது. அதை விளக்கும் விதமாக, ஆதிசங்கர மகானின் வாழ்க்கை வரலாற்றிலும் ஓர் அற்புத சம்பவம் உண்டு.
மண்டனமிஸ்ரர் எனும் மீமாம்சகரின் மனைவி சரஸவாணியாக, கலைமகளே வந்து சங்கரருடன் வாதப்போர் புரிந்தாள். வாதிடுபவள் வாணியே என அறிந்த ஆதிசங்கரர், வாதத்தில் தான் ஜெயித்தாலும் அன்னை சாரதைக்கு பீடம் அமைத்து வழிபட விரும்பினார்.
திரும்பிப் பார்த்தால் நின்றுவிடுவேன் என்ற நிபந்தனையுடன் தொடர்ந்தாள் சரஸ்வதி. மாகிஷ்மதி நகரத்திலிருந்து புறப்பட்டு துங்கபத்திரை நதிக்கரை நோக்கி வந்தபோது, ஓரிடத்தில் அதிசயக்காட்சி ஒன்றைக் கண்டார், அகிலகுரு. வெயிலில் வாடிய கர்ப்பிணித்தவளை ஒன்றுக்கு, கருநாகம் ஒன்று குடைபோல் தன் படம் விரித்து நின்றிருந்தது.
மனம் கசிந்த சங்கரர், மனம் மறந்து திரும்பி, “அம்மா… அதோ அக்காட்சியைப் பார்த்தாயா?” என்று சாரதையிடம் கேட்டார்.
மறுகணம், சங்கரரைத் தொடர்ந்து வந்த சாரதை, அங்கேயே நின்றாள்… பீடம் கொண்டாள். அவளை, சாரதா புஜங்கம் பாடித் துதித்தார் மகான்.
இதிலிருந்து தெரிவது என்ன… அன்பும், கருணையும் உள்ள இடத்தில் கலைமகள் விரும்பிக் குடிகொள்வாள் என்பதுதானே… அன்பு, பாசம், ஒற்றுமை இதெல்லாம் அலைமகளுக்கும், மலைமகளுக்கும்கூட பிடிக்கும் என்கின்றன புராணங்கள். அன்பே தெய்வம் அல்லவா!
அப்படிப்பட்ட அன்னை சாரதையை இடைவிடாது எப்போதும் துதிப்பது சிறப்பானது. அது இயலாவிட்டால், நவராத்திரி நாட்களில் குறிப்பாக சரஸ்வதி பூஜையன்று மட்டுமாவது மனதார அவளை வழிபடுவது மிகச் சிறப்பான பலன் தரும்.
அப்படி சாரதா தேவியை பூஜித்துத் துதித்திட வசதியாக, ஆதிசங்கர மகான் இயற்றிய ஸ்ரீ சாரதா புஜங்கம் என்ற அபூர்வ துதி, எளிய தமிழ் விளக்கத்துடன் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
எல்லா வெற்றிகளையும் தருபவளும், கல்வி, கலையின் அதிபதியுமான சரஸ்வதியை, இந்தத் துதியைப் பாடித் துதியுங்கள். சாரதாதேவி, சகல நலமும், வளமும், ஞானமும், கல்வியும் குறைவிலாது அளிப்பாள்.
சாரதா புஜங்கம்
ஸுவக்க்ஷோஜகும்பாம் ஸதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுண்யாவலம்பாம் |
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதா நோஷ்ட பிம்பாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
அருளமுதம் கொண்ட மார்பினள். அமுத கலசங்களாகிய குடங்களைக் கரங்களில் ஏந்தியவள். கருணை புரிந்து காத்திடும் அம்பிகை. புண்ணியம் செய்தவர்களாலேயே அறியமுடிந்தவள். நிலவைப் போன்ற எழிலுடன் எப்போதும் ஒளிர்பவள். காருண்யமுறுவலையுடைய எனது அன்னை சாரதாம்பாளை இடைவிடாமல் துதிக்கிறேன்.
கடாகே்ஷதயார்த்ராம் கரே ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை : ஸுபத்ராம் |
புரஸ்த்ரிம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
கடைக்கண் பார்வையாலேயே கருணையை வாரி வழங்குபவள். கரத்திலே ஞானமுத்திரையைக் காட்டுபவள். கலைகளின் இருப்பிடம் அவளே. புனிதமான ஸ்வர்ணமயமான ஆபரணத்தை அணிந்தவள். தெய்வமாய் நின்று விழிமூடாமல் உலகை ரட்சிப்பவள். துங்கபத்ரா நதியின் கரையிலிருந்து அருளும் என் அன்னை சாரதாம்பாளை எப்போதும் துதிக்கிறேன்.
லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைக பாலாம் யச: ஸ்ரீகபோலாம் |
கரே த்வக்ஷமாலாம் கனத் ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
ஒளிரும் நெற்றிச்சுட்டியை உடையவள். சங்கீத சேவையால் கவரப்படுபவள். தன்னுடைய பக்தர்களைக் காப்பாற்றுவதில் வல்லவள். கீர்த்தி மிக்கவள். அவளின் கன்னங்கள்கூட புனிதமானவை. கையிலே அக்கமாலையை உடையவள். கண்கவரும் ரத்னமயமான அணிமணிகளினால் எப்போதும் ஒளிர்பவள். அத்தகைய என் அன்னை சாரதையை இடைவிடாமல் வணங்குகிறேன்.
ஸுஸீமந்தவேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத் வஜ்ரபாணீம் |
ஸுதா மந்த்ராஸ்யாம் முதாசிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
முன்வகிடு எடுத்துப் பின்னிய கூந்தலில் குஞ்சலங்களை உடையவள். மான்போன்ற மருள் விழிகளையுடையவள். கிளியோடு பேசி விளையாடி மகிழ்பவள். இந்திரனால் வணங்கப்படுபவள். அமுதமயமான புன்னகையுடன் கூடிய வசீகரமும்முடையவள். அலையலையாய்ப் புரளும் கூந்தலையுடையவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை எப்போதும் பூஜிக்கிறேன்.
ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தேக சாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனஸ்தாம சிந்த்யாம் |
ஸ்ம்ருதாம் தாபனஸ: ஸர்கபூர்வஸ்திதாம் தாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
காருண்யநாயகி. பேரழகி. விழியோரங்களைத் தொடும் அளக பாரமுடையவள். கொடி போன்ற மேனியளாக ஜொலிப்பவள். நித்தியகல்யாணி. நிர்மலமான நிறைகுணமுடையவள். தவமுனிவர்களும் தொழுது பரவும் பிரபஞ்சத்தின் முதன்மையானவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை இடையறாது வணங்குகிறேன்.
குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோகே்ஷதி ரூடாம் |
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் |
நவராத்திரி (மகா நவமி) காலங்களில் மான், அன்னம், சிங்கம், யானை, குதிரை, காளை, கழுகு ஆகிய வாகனங்களில் எழிலுற ஆவிர்பவித்து பக்தர்களுக்கு அருள்பவளும், எப்போதும் அமரிக்கையானவளுமான என் அன்னை சாரதாம்பாளை இடையறாது துதிக்கிறேன்.
ஜ்வலத் காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானஸாம்போஜ ஸுப்ராந்த ப்ருங்கீம் |
நிஜ ஸ்தோத்ர ஸங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
அனலைப் போல ஜோதி சொரூபமானவள். அனைத்து உலகையும் தன்வசப்படுத்தியவள். அடியவர்களின் இதயத்தாமரைகளில் வண்டினங்களாக ரீங்காரம் செய்து சுழல்பவள். இயற்கையான நாதம், நடனம், தோத்திரங்களில் உள்ளொளியானவள். அந்த என் அன்னை சாரதாம்பாளை இடையறாது பூஜிக்கிறேன்.
பவாம் போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமாணாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சிஹ்நாம் |
சலச்சஞ்சலாசாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பாம் அஜஸ்ரம் மதம்பாம் ||
முக்கண்ணன், மாதவன், அம்போஜ சம்பவன் ஆகியோரால் துதிக்கப்படும் பெருமையுடையவள். ஒளிவீசும் புன் முறுவலுடையவள். அவளுடைய காதுகளிலுள்ள குண்டலங்கள் அசைந்து அசைந்து ஆடி அவளது அழகுக்கு அழகு சேர்க்கும். அத்தகைய என் தாயாகிய சாரதாம்பாளை எப்போதும் முழுமனதோடு வணங்குகிறேன்.
(ஸ்ரீ சாரதா புஜங்கம் நிறைவு பெற்றது)
- ஜி.எஸ். ராஜரத்னம்
Thanks:kumudam.com

No comments: