பகவான் நாமாவை உரக்கச் சொல்லுங்கள் !

எந்த புராணக் கதைகளைப் படித்தாலும், கடைசியில், "இதைப் படிப்பவர்கள், படிக்கக் கேட்டவர்கள், படிக்கச் செய்தவர்கள் யாவருக்கும் மகா புண்ணியம் பெற அந்த பகவான் அருள் கிடைக்கும்...' என்று முடித்திருப்பர்.
வாக்கு, நல்ல வாக்காக இருக்க வேண்டும். வாசலில் வரும் குடுகுடுப்பைக்காரன் கூட, "டுர்...ர்... ர்...ர்... நல்ல வாக்கு சொல்லடி மாரியாயி, ஐயாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... டுர்...ர்...' என்று, நல்ல வாக்காக சொல்கிறான். அவனுக்கு ஏதோ கொஞ்சம் அரிசியோ, காசோ போட்டு அனுப்புகின்றனர். வாக்கில் பகவானுடைய நாமா வந்தால், அது புண்ணியம்; பகவத் குணங்களை சொன்னால், அது புண்ணியம். இதை கேட்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். பகவத் குணங்களை சொல்லி, பக்தி பிரசாரம் செய்வது புனிதமான தொண்டு. இதை, சிலர் பக்தியின் காரணமாக,
எதையும் விரும்பாமல் செய்கின்றனர்; சிலர், பணத்துக்காகவும் செய்கின்றனர். எப்படி செய்தாலும் பக்தர்கள் வருகின்றனர்; புண்ணியம் கிடைக்கிறது; இதுவும் ஒரு விதமான தொண்டுதான். எல்லாருமே இலவசமாக பக்தி பிரசாரம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தால், வீட்டிலிருக்கும் அம்மணி, "எவ்வளவு கொடுத்தார்கள்?' என்று கேட்க மாட்டாளா? அவர்களுக்கும் குடும்பம் நடத்த வேண்டுமே! எப்படியோ ஒன்று முக்கியம்... பக்தி பிரசாரம் செய்வது நல்லது; புண்ணியம். பிறரையும் இதில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். பகவான் நாமாவை சொல்லவும், கேட்கவும் செய்யலாம். சின்ன விஷயத்தில் பெரிய புண்ணியம்.
சில வீடுகளில், வாசற்படிக்கு மேலே, "நாராயணா' என்றோ, "நமச்சிவாயம்' என்றோ, "ஸ்ரீராமஜெயம்' என்றோ எழுதி வைப்பர். வீட்டுக்காரர் இதை தினமும் படிக்கிறாரோ, இல்லையோ, அவரது வீட்டுக்கு வருபவர்களின் கண்களில் இது படும். அவர்களும் வாய் விட்டோ அல்லது மனதுக்குள்ளாகவோ அந்த நாமாவை சொல்வர்.
இப்படி வாயால் சொன்னாலும், மனதுக்குள் நினைத்தாலும் போதுமாம்; புண்ணியம் வந்து ஒட்டிக் கொள்ளும். எழுதி வைத்தவருக்கும் கூட இப்படித்தான். ஒரு உபன்யாசம் நடக்கிறது. போய் தான் பார்க்கலாமே என்று அங்கே போய் உட்காருகிறான். உபன்யாசத்தின் இடையே உபன்யாசகர், "நம பார்வதி பதயே, ஜானகீ காந்தஸ்மரணே...' என்பார். கூட்டத்திலுள்ளவர்களும், "ஹர ஹர மகா தேவ... ஜே ஜே ராம்...' என்று உரக்க சொல்ல வேண்டும். இந்த நாமாவை சொல்லியாவது புண்ணியத்தை பெறட்டும் என்பது உபன்யாசகரின் எண்ணம். அவர் மனம் விட்டு சொல்கிறார்; அவருக்கு புண்ணியம் கிடைக்கிறது. கூட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்கின்றனர். ஒரு சிலர் பகவான் நாமாவை சொல்லாமல் இன்னிக்கு, "டிவி'யில் என்ன சீரியல் பார்க்கலாம் என்று விசாரித்துக் கொண்டிருப்பர். ஒரு சிலர் மட்டும், "நமப் பார்வதி பதயே... ஹர ஹர மகா தேவா...' என்பதை மெதுவாக சம்பிரதாயத்துக்கு சொல்வர். பகவானும், "இந்த அளவாவது சொன்னாயே... அதற்கு தகுந்த புண்ணியம் கிடைக்கும்...' என்று ஆசீர்வதிப்பார். பகவான் நாமாவை சொல்வதில் அவ்வளவு கூச்சம். வாசலில் துடப்பக் கட்டை விற்றுக் கொண்டு போனால், "ஏய் துடப்பம்... இங்கே வா...' என்று நாலு வீட்டுக்கு கேட்கும்படி கூவி அழைக்கிறாள்; இதில், கூச்சமே இல்லை. இப்படி இருந்தால் எப்படி புண்ணியம் கிடைக்கும்? உரக்கச் சொல்லுங்கள்... கிடைக்கும். ***

No comments: