நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழிகள்

 பொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம்.
ரத்தக்கொதிப்பு கூடும்போது, உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், இருதயம், கண்களில் பெருமளவு பாதிக்கலாம். இதனால் இதற்குரிய அறிகுறிகளான பக்கவாதமோ, நெஞ்சுவலியோ, மூச்சுத் திணறலோ, கண்பார்வை மங்குவதோ, கால்வீக்கம் உட்பட பல வகைகளில் தென்படலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த வியாதியின் சிகிச்சையே இந்த உள்ளுறுப்பின் பாதிப்பை தவிர்ப்பதே. எனவே எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு முதலில் வாழ்வியல் முறை மாற்றமே அத்தியாவசியமானது. அதாவது மனதை நிம்மதியாக வைத்திருப்பது, உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெயை குறைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி முக்கியமானது.
இவை எல்லாம் செய்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே இந்த நோயை பொறுத்தவரை அறிகுறி வரும்வரை தாமதிக்காமல் ரெகுலராக, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது முக்கியம்.

No comments: