ஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா ?



ஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் செய்து விட்டு, "நான் ஆயிரத்தெட்டு காயத்ரி ஜெபம் செய்கிறேன்; ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் செய்கிறேன்...' என்றால் மட்டும் போதாது.
ஜெபம் செய்ததற்கு பலன் உண்டு. ஆனாலும், இந்த காயத்ரி தேவியின் உருவம், நிலை, ஆடை, ஆபரணம், ஆயுதங்கள் இவைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதிரி உருவத்தை மனதில் பதிய வைத்து, ஜெபம் செய்வது நல்லது. அடுத்து,
விஷ்ணு சகஸ்ர நாமம். அதை, தினமும் பாராயணம் செய்வது நல்லது. இதை வயதானவர்தான் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை; சிறுவர்களும், ஸ்தீரிகளும், கூட சொல்லலாம். இதற்கு விசேஷமான பலன் உண்டு. விஷ்ணுவை குறித்த ஸ்தோத்ரம் சொல்லும் போது, அந்த விஷ்ணுவின் உருவத்தை
தியானிப்பதும், மனதில் நிறுத்தி வைப்பதும் நல்லது. பகவானுக்கு உருவம் கிடையாது என்று சொல்வது வேறு விஷயம். அதாவது, அவனை எந்த உருவத்திலும் வழிபடலாம் என்பதற்காகச் சொன்னது. எந்த உருவத்தில் வழி பட்டாலும் நல்லது தான். விஷ்ணுவுக்கும் ஆடை, அலங்காரம், ஆயுதம் என்றெல்லாம் வர்ணனை செய்துள்ளனர். மனதை அவனிடம் நிறுத்தி, பக்தி செய்வது தான் சரியான முறை. "என்னிடம் மனதை நிலை நிறுத்தி, என் பக்தனாய், என் பொருட்டு பூஜை செய்பவனாய், என்னை வணங்குவாயாக...' என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார் கிருஷ்ணர். ஆயிரம் பெயர்களால் எவனொருவன் எப்போதும் புரு÷ஷாத்தமனை ஸ்துதி செய்கிறானோ, எவன், அழிவில்லாத அந்த புருஷனையே பக்தியோடு அர்ச்சனை செய்கிறானோ, எவன், அவனையே தியானித்தும், துதித்தும் வணங்கி பூஜித்து நிற்கிறானோ, அவன் சகல துக்கங்களையும் கடந்து, எம்மை அடைகிறான் என்பது தெய்வ வாக்கு. இந்த விஷ்ணுவின் பாதாதி கேச வர்ணனை என்ற நூலைப் படித்தால், பல விஷயங்கள் தெரிய வரும். பாதாதி கேசம் என்றால், பாதம் முதல் தலையிலுள்ள முடி வரை உள்ளவைகளை பற்றி விபரமாக கூறப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. இவைகளையும் தெரிந்து கொண்டு, அந்த உருவத்தை மனதில் நிறுத்தி ஜெபம் செய்வது அதிக பலனைக் கொடுக்கும். சும்மா ஜெபம் என்று உட்கார்ந்து விட்டு, எண்ணுவதோ, மணிமாலையை உருட்டிக் கொண்டே, "வாசலில் முருங்கைக்காய் விற்றுக்கொண்டு போகிறான், கூப்பிடு...' என்று மனைவியிடம் சொல்வதோ ஜெபமாகாது. ***

No comments: