கஜேந்திர மோட்சம் -1


நினைவு தெரிந்த நாள் முதல் , கிருஷ்ணரும் விநாயகரும் மட்டுமே என்னை அதிகம் ஆட்கொண்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். விநாயகரை எப்போதும் என் உதவிக்கு அழைத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வேண்டுதல்கள் வைத்திடுவேன். சிறு குழந்தையாய் இருக்கும்போதும், பிள்ளையார் சதூர்த்தியின் போது, விநாயகருக்கு லெட்டர்(கடிதம்) எல்லாம் எழுதி அவர் அதை பரமாத்மா கண்ணனிடம் பத்திரமாய் சேர்த்து விடுவார் என்று அவருடைய ஆடைக்குள் ஒளித்து வைப்பேன்.

துருவனுடைய கதை என்னை அதிகம் கவர்ந்து பக்தியை கற்றுக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும். பக்தியை கற்றுக் கொடுத்ததது என்று எழுதும்போதே என்னமோ வருத்தமாய் இருக்கிறது. எனக்கு உண்மையில் பக்தி எல்லாம் சுத்தமாய் இல்லை என்றே தோன்றுகிறது. இந்தப் பிறவியில் பக்தி இருப்பது போல் நடிக்க மாத்திரமே முடியும் என்றும் தோன்றுகிறது.
அதற்காக நடிப்பு என்று நான் சொல்லுவதை யாரும் போலிச் சாமியார்கள் நடத்தும் பித்தலாட்டம் என்று எண்ணி விடாதீர்கள் . நான் சொல்லும் நடிப்பு , நாடக நடிகர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பாத்திரம் போல என்று நீங்கள் பொருள் கொள்ள வேண்டும். மூன்றாம் வகுப்பு கூடத் தேறாத ஒருவருக்கு டாக்டர் வேடம் தந்தால் அதை எத்தனை பூரிப்போடு ஏற்றுக் கொண்டு அதிலேயே ஒன்றிப் போய் நடித்து பெயர் வாங்கத் துடிப்பார்!! ..அது போல.. பக்தி செலுத்தக் கூட துப்பில்லாதவள் என்பதால் இப்படிச் சொல்கின்றேன்..
உண்மையான பக்தி வந்தால் , எல்லா வற்றையும் உதறி விட்டு , கிருஷ்ணரிடம் மட்டுமே சரணடையத் தோன்றும் என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அத்தகைய பக்தி எந்தப் பிறவியில் எனக்கு வருமோ தெரியவில்லை .. படிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காகப் பிரார்த்தித்துக் கொண்டால் நிச்சயம் அந்த ஆசை நிறைவேறும்.
பலரும் என்னைக் கேட்டதினால் சொல்லுகின்றேன் .. பக்தி எல்லாம் ஏதோ திடீரென்று புத்தருக்கு போதி மரத்தில் கிடைத்தது போல எனக்கிங்கு சிட்னியில் கிடைத்ததெல்லாம் இல்லை .. ஆனால் வயது கூட கூட கொஞ்சமே கொஞ்சமேனும் அனுபவ முதிர்ச்சி வரும் இல்லையா .. அதனுடைய வெளிப்பாடே !
அப்போது படித்த ஆண்டாள், மீரா இவர்களின் கதைகள் இப்போது சற்று நன்றாக புரிவதனால், ஏதோ பொழுது போக்காக கடவுளை ஏதோ நமது வேலைக்காரர் போல பாவிக்கும் மன நிலையில் இருந்து மாறி, இப்போது கடவுளுக்கு அடியாராகத் தொண்டு செய்யும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு வருகிறேன். இப்படிச் சொல்லும்போது மீண்டும் வேதனையாகவும் வெட்கமாகவும் வருகிறது. அடியாருக்கு அடியாராய் வாழ்வதற்கும் துப்பில்லாமல் இருப்பது தான் உண்மை..
அண்மையில் குடும்பத்தோடு மூன்று நாட்கள் ஆன்மீக வாசம்?? (spiritual /transcendental retreat ) செய்ய நேர்ந்தது. அங்கு ஒரு நண்பர் என்னிடம் தானாகவே (நட்பு ரீதியில் ) இப்படித் தர்க்கம் செய்தார். அவர் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கும் கிருஷ்ணரின் தீவிரமான பக்தர் என்று கருதுகிறேன். அவர் பல சாஸ்திரங்களை எல்லாம் படித்து , பக்தியை முறைப்படி பயிற்சி செய்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர் . அதனால் அவர் சாத்திரப்படி , விஷ்ணு எனும் கிருஷ்ணரே முழு முதற் கடவுள் என்று பகவத் கீதை முதல் பல வித புராணங்களும் சொல்கிறதே ..அப்படி இருந்தும் உங்களது ஸ்ரீ சம்பிரதாயத்தில் (இராமனுஜரை ஆசாரியராகக் கொண்டு வளர்ந்த தென்னகத்து வைணவ சம்பிரதாயம் ) நாராயணன் தான் எல்லோருக்கும் பகவான் என்று எப்படி சொல்லுகின்றீர் ? கிருஷ்ணர் எனப்படும் விஷ்ணுவின் வெளிப்பாடே நாராயணன் எனும்போது, க்ரிஷ்ணரைத்த தானே நீங்கள் பகவான் என்று நித்தமும் வழி பட வேண்டும் என்று ஏதேதோ பேசினார்..
அவர் சொன்னதெல்லாம் உண்மை யாகவே இருக்கும் .. ஏனென்றால் அவரும் அவரது நண்பர்கள் பலரும் வேதங்கள் மற்றும் புராணங்களை எல்லாம் சிரத்தையோடு படிப்பவர்கள். அவர்களுக்கு வழிகாட்ட முறைப்படி வேதங்களை கற்ற பரம்பரையில் வந்த ஆச்சாரியார்கள் இருக்கின்றார்கள்.
அவர் அப்படிக் கேட்டதும் நான் இப்படிக் கூறினேன் ..
“அச்சச்சோ .. பெரிய பெரிய கேள்வியெல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள்.. இதை எல்லாம் புரிந்து கொள்ளவே எனக்கு புத்தி இல்லை .. நானெல்லாம் கீழுக்கும் கீழ் ரகம்.. நீங்களெல்லாம் வழி காட்டியாய் ஏற்றுக் கொண்டு அவரது பாதையை பின் பற்ற உமக்கென்று பெரிய பெரிய ஆச்சாரியார்கள் இருக்கின்றார்கள். எனக்கெல்லாம் இப்பிறவியில் அந்த பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ .. அதனாலேயே நான் கஜேந்திரனை ஆசானாய் பின் பற்றி ஏதோ பக்தியை வளர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..
முதலை தன் காலை கவ்வியத்தும் கஜேந்திரன் நாராயணா என்று கத்தி இருப்பாரா இல்லை கிருஷ்ணா என்று கத்தி இருப்பாரா … நீங்களே சொல்லுங்கள் ! ஆஆஆ என்று கூக்குரலிட்டு பிளிரத்தானே அவரால் முடிந்திருக்கும் .. அதைக் கேட்டே ஓடி வந்து பகவான் அவரை ரட்சிக்க வில்லையா .. இது தான் அவர் பெயர் என்று கடவுளுக்குப் பெயர் வைக்கும் யோக்கியதை எல்லாம் எனக்கில்லை .. இப்போது ஏதோ கிருஷ்ணா ராமா என்று வாயிருப்பதால் கொஞ்சம் கூப்பாடு மட்டும் போடுகிறேன் .. மற்ற ஆராய்ச்சியில் எல்லாம் நான் இப்போதைக்கு இறங்குவதாய் இல்லை ..
பக்தியோடும் பாவத்தோடும்(Bavam) பெருமாளை கூப்பிட்டால் அவர் வருவார் என்று மட்டும் தான் எனக்குத் தெரியும் .. இதை சொல்லிக் கொடுத்த கஜேந்திரன் தான் இப்போதைக்கு எனக்கு வழி காட்டி ..”
இந்த ரீதியில் நான் சொன்னதும் , அவர் கொஞ்சம் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு, அங்கிருந்து நழுவி விட்டார் .. :)
அந்த சூழ்நிலையில் எப்படி எனக்கு கஜேந்திர மோட்சம் கதை நினைவுக்கு வந்ததென்று எனக்கே அதிசயமாய் தான் இருந்தது .. கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நாராயணன் எனும் அந்தக் கிருஷ்ணர் என்னை மாத்திரம் கை விட்டு விடுவாரா என்ன என்று நினைக்கும் போது சிலிர்ப்பாய் வந்தது.
அர்ஜுனனுக்கு முன்பே சிசுபாலனுக்கு மோட்சம் தந்த பரமாத்மா , எல்லோரையும் மீட்டெடுக்கவே அந்தராத்மாவாய் நம் எல்லோரின் இதயத்திலும் இருக்கும் அவர் யாரையும் விடப் போவதில்லை … அப்படி இருக்க எப்படி இத்தனை நாளாய் அவரை அதிகம் நினைக்காமல் சுயநலமாய் இருந்து விட்டேன் என்று நினைக்கும்போது எனக்கே வெட்கமாய் வேதனையாய் இருக்கிறது..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் .. ஒவ்வொரு அனுபவமும் இப்படி எழுத வைக்கின்றது என்னை .. ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாதாம் .. அது போல் தான் என் கையும் .. என்றெண்ணி இங்கினி எழுதுகின்றேன் ..
யாரையும் புண் படுத்துவதாய் இருந்தால் , மன்னித்துக் கொள்ளுங்கள்.
கஜேந்திர மோட்சம்
கஜேந்திர மோட்சம்
*********************
எனக்கென்ன ஆனதென்று
எனக்கே தெரியவில்லை!
குப்பை குப்பையாய்
எழுதிக் கொண்டும்
கிறுக்குத் தனமாய்
கதைத்துக் கொண்டும்
திக்கேதும் தெரியாமல்
மனம் போன போக்கதிலே
சாகும்வரை வாழ்ந்து தானே
ஆக வேண்டும் என்பது போல்
பொருளற்று ஓர் வாழ்வு
வாழ்ந்து வந்தேன் கேளீர் !!
மவுனமாய் மன சாட்சியாய்
நெஞ்சத்துள் இருந்த கண்ணன்
அதற்கு மேல் பொறுக்காமல்
காப்பாற்ற வந்து விட்டார் !
இது தானாகக் கடைத் தேறும்
இரகமாக இல்லை என்று
தாமாகக் கருணை வைத்து
ஸ்ரீனிவாசனெனை ஆட்கொண்டார்
இல்லை என்றால் எனக்கெல்லாம்
நடிப்பிற்கும் கிடைத்திடுமோ
அடியாருக்கடியார் வேடம் ..
உலகமே நாடக மேடை கண்ணா!
*****************
ஒப்பில்லை உயர்வில்லை
எல்லோரும் சமமென்றார்
இத்தனை நாள் கேட்டிருந்தும்
அது எனக்குப் புரியலியே !
எல்லோரின் இதயத்தில்
இருப்பவன் நீ என்று
தெரிந்த கணம் முதல் தொட்டு
என் இதயம் வலிக்கிறதே!
அறியாமை இருள் கொண்டு
யாரை எல்லாம் இழிந்தேனோ !
மன்னித்து ஆட்கொள்ளும்
வேங்கடத்து மலையோனே!
*************************
மாயமில்லை! மந்திரமில்லை !
மாதவத்தாய் யசோதைக்குப்
பயந்தோடி ஒளிந்திட்ட
நம் கோகுலத்துச் செல்லப் பிள்ளை
இருக்குமிடம் சொல்கின்றேன்
விரைந்திங்கு வந்திடுவீர்!
செல்வத்துள் செல்வமாகத்
திருமகள் பெற்ற பேரை
மாதவம் ஏதுமின்றி
பெற்றதனால் அதனருமை
தெரியாமல் போனதுவோ?
காணாதவர் போல
எங்கெங்கோ தேடுகின்றீர் !
யார் எதனைச் சொனாலும்
நீர் அதனை செய்கின்றீர்!
ஓய்ந்த பின் தன்னாலே
மெத்தனமாய் போகின்றீர்!
எங்கேயோ இருப்பவர் போல்
கூவிக் கூவி அழைக்கின்றீர் !
சிரத்தையோடு கண்மூடி
உமக்குள்ளே பார்த்திடுவீர் !
நெஞ்சத்தை மஞ்சமாக்கி
பள்ளிகொண்ட பெருமானை
உமக்குள்ளே கண்டிடலாம்
வேறெங்கும் செல்ல வேண்டாம்!
********************
நாராயணா என்றால்
சண்டைக்கு அவர் வருவார்
கிருஷ்ணா என்று சொன்னால்
கேலியாய் இவர் சிரிப்பார் !
தந்தைக்குப் பெயர் வைத்த
பழக்கமோ எனக்கில்லை
எப்படி அழைக்கட்டும் நான் ?
ஆறறிவு இருப்பதினால்
வாதிட்டுப் பார்க்கும் மனிதன்
கஜேந்திர மோட்சம் கேட்டு
கொஞ்சம் கற்றுக் கொள்ள மாட்டானோ?
ஒரே ஒரு பிளிரளுக்கே
ஓடி வந்து அபயம் தந்த
எம்பெருமான் அவருக்கு
நாமங்கள் ஆயிரமே,
ஆயிரமே என்றாலும்
அவரை இங்கு கூட்டி வர
சரணடைந்த அடியார் தம்
கூக்குரலே போதுமன்றோ!
********************
தட்டுங்கள் திறப்பானவன்
கேளுங்கள் கொடுப்பானவன்
என்று சொல்லி உன்னிடத்தில்
என்னைக் கேட்கச் சொன்னார்கள்
எப்படிச் சொல்வேன் நான் ?
தட்டுத் தடுமாறி நிற்கவே வக்கற்ற
என் கண்ணைக் கருணையோடு
தானாகத் திறந்து விட்டீர் !
திக்கித் திக்கியேனும் கேட்கவும் துப்பற்ற
என் மீது இரக்கம் கொண்டு
நீராக எல்லாம் தந்தீர் !
இத்தனையும் பெற்றுக் கொண்டு
கருமிபோல் வாழ்வதனால்
வருவோரும் போவோரும்
உமைக் கேட்கச் சொல்கிறாரோ ?
நீர் கொடுத்த செல்வமதை
பங்கிட்டுக் கொடுத்து விட
பெரும் மனது தந்து விடும்
கோகுலத்துக் கோமகனே !
***************
-ஷ்யாமா

No comments: