Pages

அறச்சாலையான திகார் சிறைச்சாலை !

திகார் ஜெயில் - டில்லியில் உள்ளது; ஆசியாவிலேயே பெரியது!
இப்போது, திகார் ஜெயிலில் உள்ள கைதிகள் எல்லாம் சிறு தொழிலதிபர்கள். இவர்கள், "டிஜெ' என்ற பிராண்டில் தயாரிக்கும் பொருட்கள் எல்லாம், இப்போது மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்த ஆண்டு ஒரு படி மேலே போய், இப்போது தங்களது பொருட்களை, "ஆன்லைன்' எனப்படும் கம்ப்யூட்டர் மூலம் விற்பனை செய்ய இருக்கின்றனர்.
எப்படி இதெல்லாம் சாத்தியமானது? பத்து வருடம் பின் நோக்கி செல்ல வேண்டும்.

ஜெயிலுக்கு வருபவர்களில் 65 சதவீதம் பேர், சந்தர்ப்ப சூழ்நிலையால் கைதிகளானவர்கள்தான். சிறைச்சாலை என்பது குற்றவாளிகளை, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, திருத்தும் அறச்சாலையாக இருக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை. காரணம், அவர்களுக்கு உள்ளே கிடைக்கும் தனிமை, அவர்களது வெறுமையை இன்னும் அதிகப்படுத்துகிறது.
ஆக... அவர்களது தனிமையை களைந்தாலே போதும். எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதநேய அதிகாரி போட்ட வித்துதான் இன்று மரமாகி உள்ளது.
"உழைத்து பிழைக்க விரும்புபவர்களுக்கு, சில சலுகைகள் வழங்கப்படும். யார் யாரெல்லாம் வருகிறீர்கள்...' என்று கேட்டதும், "எனக்கு மரச்சாமான்கள் செய்யத் தெரியும்... பெஞ்ச், மேஜை, நாற்காலி எல்லாம் நன்கு செய்வேன்...' என்றதும், அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, ஒரு இடம் கொடுத்து, தேவையான பொருட்களும் கொடுத்து, "உங்கள் திறமையை காட்டுங்கள்...' என்று வாய்ப்பு வழங்கப்பட்டது. இதே போல, "எனக்கு பேக்கரி தொழிலில் ஈடுபாடு அதிகம்...' என்றவர்களை ஒன்று சேர்த்து, ஜெயிலுக்குள்ளேயே பேக்கரியை துவக்கினர்.
டெய்லரிங் தெரியும் என்றவர்களைக் கொண்டு சர்ட், பேன்ட் தயாரிக்கும் கார்மென்ட்ஸ் பேக்டரி துவங்கப்பட்டது. இப்படி... எண்ணெய் தொழிலகம், காலணிகள் தயாரிப்பகம் உள்ளிட்ட பலவகை தொழிற்கூடங்கள் துவக்கப் பட்டன. "எங்களுக்கு எதுவுமே தெரியாது... நாங்கள் ஓவிய கலைஞர்கள்....' என்றவர்களை, "பரவாயில்லை... உங்களுக்கென்று இதோ ஓவிய கூடம்... வரைந்து தள்ளுங்கள்...' என்று, அவர்களுக்கும் இடம் ஒதுக்கப் பட்டது.
குறிப்பிட்ட காலம் முடிந்ததும், உற்பத்தியான பொருட்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்தினர். கண்காட்சிக்கு வந்த வி.ஐ.பி.,க்கள், பொருட்களின் தரத்தை பார்த்து வியந்து போய், <உடனே தங்களுக்கு தேவையான ஆர்டர்களை கொடுத்தனர்.
எதிர்மறை சிந்தனைக்கு விடை கொடுத்து, நல்ல விஷயங்களில் ஈடுபட வைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட, கைதிகளின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு லாப நோக்கம் கிடையாது என்பதால், சந்தையில் உள்ள இந்த வகையான பொருட்களை விட, விலை குறைவாக இருந்தது. இது, மக்களுக்கு பிடித்து போயிற்று.
கைதிகள் என்ற நிலை மாறி, கலைஞர்கள் என்ற கவுரவ நிலையை தக்க வைக்க வேண்டும் என்பதால், தங்களது திறமை முழுவதையும் காட்டியதால், பொருட்களின் தரமும் கூடியது; விற்பனையும் அதிகரித்தது. இதன் விளைவு, நீதிமன்றங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் இவர்களது பொருட்கள்தான் பிரபலம். பொருட்களின் தரம் பலவகையிலும் சோதனையிடப்பட்டு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்றவுடன், வியாபாரம் ஓகோ என்று <<உயர்ந்தது. "திகார் ஜெயில்' தயாரிப்பு என்பதை சொல்லும் வகையில், "டிஜெ' என்ற பிராண்டில் தயாரான பொருட்களுக்கு, இன்றைக்கு டில்லியில் தனி மதிப்பு. டில்லியின்  பிரதான பத்து இடங்களில், இப்போது  இவர்களுக்கான கடை உள்ளது. பொருட்கள் என்று இல்லாமல், கைதிகள் வரைந்த ஓவியங்களும் நல்ல விலைக்கு போகிறது. அடிக்கடி நடக்கும் கைதிகளின் ஓவிய கண்காட்சியில் இடம் பெறும் படங்களை வாங்கவும் ஒரு கூட்டம் தயாராக உள்ளது. அன்றாடம் இவர்கள் தயாரிக்கும் 13 வகை பிஸ்கட்டுகளுக்கு மிகவும் கிராக்கி இருப்பதால், உற்பத்தி செய்யும் இடத்தில், நின்று பேசக் கூட நேரமில்லாமல் உழைக்கின்றனர். உழைக்கும் கைதிகள் அனைவரும் ஊழியர்கள் என்று இருந்த போது அன்றாட சம்பளம் 52 ரூபாய். ஆனால், இப்போது, உற்பத்தியாளர்களும் இவர்களே, உரிமையாளர்களும் இவர்களே என்பதால்,  கிடைக்கும் பங்கு தொகை எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது.
கடந்த வருடம் 110 லட்ச ரூபாயாக இருந்த விற்பனை, இந்த வருடம் இன்னும் கூடுதலாகும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இப்போது கம்ப்யூட்டரின் உதவியுடன் நடக்கும், "ஆன்லைன்' வர்த்தகத்திலும் இறங்கியுள்ளனர். இதன் மூலம், 60 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. "இப்போதைக்கு, டில்லியில் இருந்து வரும் ஆர்டர்களை மட்டுமே ஏற்று சப்ளை செய்ய உள்ளோம். உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், வெளிநாட்டு தேவைகளைக் கூட நிறை வேற்றுவோம்...' என்கின்றனர். ஆரம்பத்தில் இவர்களுடன் ஒட்டாமல் இருந்த கைதிகள் கூட, இப்போது இவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு, வருமானம் போன்றவைகளைப் பார்த்து, "எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்...' என்று சொல்லி, களம் இறங்கியுள்ளனர். திகார் சிறைச்சாலை சந்தேகமில்லாமல் இப்போது அறச்சாலைதான். நீங்கள் மேலும் விவரம் அறிந்து கொள்ள விரும்பினாலும், ஆன்லைனில் வியாபாரம் செய்ய விரும்பினாலும், தொடர்பு கொள்ள வேண்டிய வெப் முகவரி: டபுள்யூ டபுள்யூ டபுள்யூ.திகார் ஆர்ஜெ.என்ஐசி.இன் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.                        ***
மனைவியும் சரி என்றார்; மனசும் சரி என்றது!
இருள் கவிந்த மாலை வேளையில், புது மனைவியுடன் இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் நெருங்கிய ரவுடி, இன்ஜினியரை தாக்கிவிட்டு, அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். இன்ஜினியருக்கு வந்த கோபத்தில், அருகில் இருந்த இரும்பு ராடை தூக்கி அடிக்க,  அந்த இடத்திலேயே ரவுடி அவுட். ரவுடி இறந்தது வேண்டுமானால் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால், அடிக்காமல் இருந்தால், மானம் அல்லவா போய் இருக்கும். ஆகவே, செய்த காரியத்தை மனைவியும் சரி என்றார்; மனசும் சரி என்றது.ஆனால், சட்டம், சரியில்லை என்றது. இப்போது, அவர் திகார் ஜெயிலில். ஆனால், அவர் சோர்ந்து விடவில்லை. உள்ளே இருக்கும் வரை பிறருக்கு உதவுவோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார். அவரே இப்போது கம்ப்யூட்டர் தொடர்பான விஷயங்களின் மூளையாக இருக்கிறார்.

No comments: