Pages

குருவாயூரப்பன் காட்டிய கருணை!

கோயிலில் கடவுளைத் தேடுவதல்ல ஆன்மிகம். நமக்குள்ளேயே ஆண்டவன் இருப்பதை புரிந்து கொள்வதே ஆன்மிகம்.எதற்கு இறைவனின் சந்நிதானத்திற்குப் போகிறோம்?
நிறையபேர் அங்கே போகிறபோது அந்த தெய்வீக அதிர்வுகள் நமக்கு ஒரு பரவசத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். அதற்குத்தான் கூட்டுப் பிரார்த்தனை பற்றி சிறப்பாக பேசுகிறோம்.
பக்தியின் முதல்படி நெற்றியில் குறி இட்டுக்கொள்வது, இரண்டாவது படி கோயிலுக்குப் போவது,மூன்றாவது தன்னையறிவது. நான்காவது இறைமையை அறிவது. இதில் ஒரு முக்கியமான விஷயம். படிப்படியாக ஏறினால்தான் நான்காவது படியை அடைய முடியும். இந்த நான்காம்படிதான் இறுதி நிலை. சிலர் முதல் படியிலும், சிலர் இரண்டாவது படியிலும் நின்று விடுவார்கள். தன்னை அறிவதே உண்மையான முயற்சி. தான் யார், தான் செய்வது என்ன என்று ஆராய வேண்டியது அவசியம். நான்காவது நிலையான கடவுளை அறிந்து கொண்டால் கோயிலுக்கே போகவேண்டாம். இதற்கு சிறந்த உதாரண புருஷர் ரமணமகரிஷி!

பாதாளக் குகையிலிருந்து தியானம் செய்தபோது அவரை விஷப்பூச்சிகள் கடிக்க... சேஷாத்ரி சுவாமிகள் அவரை மேலே கொண்டு வந்தார். சிகிச்சை தந்தபின், ரமணர் விரூபாஷி குகையில் இருந்தார். தன்னை அறிந்தபோது அவர் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு போகவே இல்லை.
என் ஆன்மிக குரு என்றால் தட்சிணாமூர்த்திதான். கடவுளே எனக்கு குரு. இந்த விஷயத்தில் மனிதர்கள் மீது எனக்கு ஈடுபாடு வருவதில்லை. எனக்கு என்ன குழப்பம் வந்தாலும் தட்சிணாமூர்த்தி சந்நதிக்குப்போய்விடுவேன். அவரை உற்றுப்பார்த்தலே போதும்... அவரது சாந்தம் நம்மீது படருவது போல் தோன்றும். அடுத்த கணமே நம் சங்கடங்கள் கரைந்து விடும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். தட்சிணாமூர்த்தி ஒரு மோனோலிஸா புன்னகை பூப்பார் பாருங்கள்... "நான் கூடவே இருக்கிறேன். விசனம் வேண்டாம்' என்பது போல் தோன்றும்! மௌன குரு என்று அவரைக் கூறுவது மிகப்பொருத்தம்!
எனக்கு ரமணமகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளலார் ஆகிய மகான்கள் மீது ஒரு மரியாதை உண்டு.
தியானம் என்பது என்னைப் பொருத்தவரை ஓவியம் வரைவது போன்றது. தினசரி வேலைகளை உண்மையாகச் செய்வதேகூட, தியானம்தான்.
என் குல தெய்வம் பாலக்காடு காவசேரியிலுள்ள பரக்காட்டு பகவதி. ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். ராஜராஜேஸ்வரி ரூபமாக இருக்கிறார். வருஷா வருஷம் போவோம். என் இஷ்ட தெய்வம் குருவாயூர் கிருஷ்ணர். பரசத்தில் கண்களில் நீர் வராமல் ஒரு தடவைகூட நான் அங்கே நின்றதில்லை. கண்களில் நீர் முட்டி சாமியையே பார்க்க முடியாமல் தவித்துவிடுவேன்.
அதற்காகவே "நான் அங்கே வரும்போது என் கண் கலங்கக்கூடாது'என்று வேண்டியிருக்கிறேன். சிவனும் என் இஷ்ட தெய்வம். கைலாயத்திற்கெல்லாம் போயிருக்கிறேன். தினமும் காலையில் எழும்போது கைலாசமலையை மானசீகமாக மனதில் கொண்டு வருவது என் வழக்கம்!
அமைதியான இந்த வாழ்க்கையில் என்னைக் திகைக்க வைத்த விஷயங்கள் எத்தனையோ! "ஆகாச தூது' என்றொரு நாவல் எழுதினேன். நாவலை எழுதி முடித்த கையோடு ரமணாஸ்ரமம் போனேன்.
ரமணர் முக்தியடைந்தபோது அவர் ஒளியாக திருவண்ணாமலையில் ஐக்கியமான சமயத்தில் அதைப் பார்த்தவர்கள் யாராவது இருப்பார்களா என்று அப்போது எண்ணுகிறேன். அடுத்த நிமிஷமே, "நான் சின்னவளா இருந்தபோது ஓர் ஒளி பளபளவென்று போனது... அது ரமணர் ஒளி என்று தெரிந்தது' என்று தன் கூட வந்தவர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அன்று என் பிரமிப்பு அடங்க வெகு நேரமானது.
எப்படி அவள் என் மனதை அறிந்தாள்? ஒரு முறை குருவாயூரில் துலாபாரம் கொடுக்கப் போனோம். போக்குவரத்துச் செலவு ஏகமாக இழுத்துவிட்டதில் கையில் பணத் தட்டுப்பாடு. ஊர் திரும்ப ரயில் டிக்கெட் தவிர கொஞ்சம் பணம்தான் கையில் இருந்தது. என் பெண்கள் பன்னிரண்டு கிலோதான் இருப்பார்கள் என்பதால் பிரச்னையில்லை. என் எடை அப்போது எழுபத்து இரண்டு கிலோ. கையில் வேறு பணமில்லையே என்ற பதட்டம். "என் பர்ஸில் என்ன இருக்கு என்று உனக்கு தெரியும். பார்த்துக்கொள்' என்று குருவாயூரப்பன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எடையில் உட்கார்ந்தேன்.
துலாபாரம் பழம்! ஐம்பத்திரண்டு கிலோதான் எடை காட்டியது. எப்படி என் குறைந்தது? இன்று வரை புரியாத புதிர். ஊர் திரும்ப போதிய அளவிற்க பணம் மிச்சமும் இருந்தது!
கைலாயத்திற்குப் போயிருந்த போது நடந்ததை இப்போது நினைத்தாலும் உடம்பு வெடவெடக்கிறது. மலைமீது குறுகலான கரடு முரடான பாதை. இரண்டு பக்கமும் பள்ளத்தாக்கு. குனிந்து பார்த்தால் அதலபாதாளம் தெரிகிறது. நமக்குப் பின்னால் ஆள் வந்து வட்டால் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர முடியாது. என்னோடு ஒரு கைடு வருகிறார். திடீரென்று எனக்குப் பின்னே விறுவிறுவென்று ஒருவரை சுமந்து கொண்டு எருது ஒன்று வருகிறது. அதை "யாக்' என்பார்கள் அங்கே மலை மீது எருதுகள் வயதானவர்களை சுமந்து போவது சகஜம்.
அது என்னைக் கடக்கும் போது நான் எங்கே ஒதுங்குவது? நெஞ்சு அடைக்க, வயிறு ஏதோ இனம் புரியாமல் வலிக்க வாழ்க்கையில் முதன் முறையாக மரண பயணத்தை உணர்ந்தேன்! எருதோ ஜாம் ஜாமென்று என்னை நெருங்குகிறது. என்னோடு வந்த கைடு சட்டென்று கண் இமைக்கும் நேரத்தில் முன்னே போய் மறைந்துவிட்டார். "அடப்பாவி இப்படி நட்டாற்றில் இல்லை... நடு மலையில் விட்டு விட்டாரே' என்று இன்னும் பதறிப்போய், அப்படியே கையைக் கூப்பி "கைலாச நாதா , காப்பாற்று' என்று நின்று விட்டேன். ஒரு நிமிஷம்... கண் திறந்து பார்க்கிறேன்.
இப்போது என் முன்னே எருது போய்க் கொண்டேயிருக்க, என் கூட வந்த கைடு, அருகே வந்து ஏதேதோ சைகை காட்டுகிறார்! எனக்கு எதுவும் புரியவில்லை. எருதுகாரரிடம் ஏதாவது சொல்லி ரூட்டை மாற்றினாரா.... அப்படியென்றாலும் அதற்கு சுத்தமாக இடமில்லையே.. இன்று வரை குழம்புகிறேன். ஈசன் அருளை நினைத்து பரவசப்படுகிறேன்.
1998-ம் வருஷம், கோடையில் திடீரென கனமழை. வீட்டில் நாங்கள் கீழே படுத்திருக்கிறோம். மாடியில் மின் இணைப்பு "ஷார்ட் சர்க்யூட்' ஆகியிருப்பது எங்களுக்குத் தெரியவில்லை.
விடியற்காலை வீடு முழுக்க ஏதோ கருகின வாசனை வருகிறதே என்று அவசரமாக மாடிக்கு ஓடினால் கதவு, பீரோ உள்பட அத்தனை சாமான்களும் கருகியிருந்தன. ஆனால் அலமாரியிலுள்ள அண்ணாமலையார் படம் மட்டும் அப்படியே இருந்தது. அதன் பின்னால் உள்ள பிளாஸ்டிக் கூட உருகிப்போய்விட்டது. எப்படி நடந்தது இந்த அதிசயம்! அப்புறம்தான் புரிந்தது. நெருப்பை நெருப்பால் எரிக்க முடியாதே!
கடவுள் தூக்கத்திலும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டே இருக்கிறார். நாம் தான் சின்ன சோதனை வந்தாலும் அவர் கைவிட்டு விட்டார்'என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்!

No comments: