Pages

அலமேலு பத்மாவதி


திருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, "அலமேலு' என்பர். "அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை. "அலர்' என்றால், "தாமரை!' "மேலு' என்றால், "வீற்றிருப்பவள்!' இதையே, "பத்மாவதி' என்கின்றனர். "பத்மம்' என்றாலும், "தாமரை!' "வதி' என்றால், "வசிப்பவள்!' ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருகின. இதைக் குறைக்க, இறைவன் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில், முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், "யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?' என்று முனிவர்களைக் கேட்டார். இவ்வுலகிலேயே சாந்தமான தெய்வம் யாரோ, அவருக்கு யாக பலனைத் தருவதென்று முடிவு செய்தனர்.

சாந்தமானவரை தேடி, பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். திருமால், பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவரது மார்பில் முனிவர் எட்டி உதைத்தார். திருமால், கோபம் கொள்ளவில்லை; உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே, யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.
பெருமாளின் மார்பிலேயே லட்சுமி வாசம் செய்கிறாள். பிருகு முனிவர், பெருமாளை மிதிக்கும்போது, அவரது பாதங்கள் லட்சுமியின் மீதும் பட்டன. எனவே, அவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல, திருமால் மறுத்து விட்டார். இதனால், அவள் கோபம் கொண்டு, பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து, தவத்தில் ஆழ்ந்தாள்.
திருமகளைத் தேடி, திருமால் அந்தணராக மாறி, பூவுலகத்தைச் சுற்றி அலைந்து, வேங்கடமலையில் வந்து ஒரு புற்றுக்குள் அமர்ந்தார். அவருக்கு பசியெடுத்தது. இதுபற்றி, தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார் நாரதர். கணவர் மீது கோபமிருந்தாலும், அவர் பசியுடன் இருப்பது குறித்து லட்சுமி வருத்தமடைந்தாள்.  அவளிடம், திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார் நாரதர். அதன்படி, பிரம்மாவும், சிவனும் பசுவாகவும், கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்கச் சென்றாள். மன்னன் வாங்கிய பசு, மேய்ச்சலுக்குச் செல்லும்போது, சீனிவாசன் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. அதைக் குடித்து சீனிவாசன் பசியாறினார். பசுவை மேய்த்த இடையன், பசுவின் பின்னால் சென்று, புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி, புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது.  தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆசிரமம் ஒன்றைக் கண்டார். அது வராஹ மூர்த்தி என்பவரின் ஆசிரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன், பாசத்தில் மூழ்கினாள். திருமாலும், அன்புடன் வகுளாதேவியை, "அம்மா' என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு, "ஸ்ரீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள். இந்நிலையில், சந்திரகிரி என்ற பகுதியை ஆண்ட ஆகாசராஜன், பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுக முனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. எனவே, குழந்தைக்கு, "பத்மாவதி' என்று பெயரிட்டான். ராமாவதாரத்தின் போது வேதவதி எனும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி, தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே, வேதவதி, பத்மாவதியாகப் பிறந்து, ஆகாசராஜனின் மகளானாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. பத்மாவதி, திருச்சானூரில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. திருச்சானூரில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில், தாயார் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. நீங்களும் சென்று தாயாரைத் தரிசித்து வாருங்கள்.