எடையைக் குறைக்கும் `படிகங்கள்'!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வகை `படிகங்கள்', எடையைக் குறைக்க உதவும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
இந்தச் சிறுபடிகங்கள், சுவை கூட்டப் பயன்படுபவையாக உணவில் தூவப்படும். உள்ளுக்குள் செல்லும் இந்தப் படிகங்கள் மூளையைத் தூண்டி, ஏற்கனவே நிறைய சாப்பிட்டுவிட்டதாக உணர வைக்கும். எனவே இந்தப் படிகங்களைச் சேர்த்துச் சாப்பிடும் ஒருவர், இயல்பாகவே உணவு அளவைக் குறைக்க, உடம்பு அளவும் குறைந்து
விடும்.
அமெரிக்காவில் ஏற்கனவே இந்தப் படிகங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை இங்கிலாந்து சந்தையை எட்டவிருக்கின்றன. அமெரிக்காவில் ஆயிரத்து 400 பேருக்கு உணவுடன் இந்த சிறுபடிகங்களைத் தூவிக் கொடுத்தபோது அவர்களுக்கு அது பசியுணர்வைத் தணிப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் படிகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இதில் சேர்க்கப்படுபவற்றில் ஒன்று, `மால்டோடெக்ஸ்டரின்' என்று தெரியவந்துள்ளது. இந்த கார்போஹைட்ரேட், கார்ன் ஸ்டார்ச், சிலிக்கா, டிரைகால்சியம் பாஸ்பேட், சோயா மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படிகங்களைத் தயாரித்திருப்போர் கூறுகையில், `இதில் சோடியம், சர்க்கரை, கலோரி, குளூட்டேன் இல்லை. வேறு எந்த ஊக்க வேதிப்பொருட்களும் இதில் அடங்கியிருக்கவில்லை' என்கின்றனர்.
சோதனையில், குண்டானவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, 6 மாத காலத்தில் 12 கிலோ எடையைக் குறைப்பது தெரியவந்தது. மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களால் அதே காலத்தில் 1 கிலோ எடையை மட்டுமே குறைக்க முடிந்தது.
இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர் சிகாகோ மணம் மற்றும் சுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் நிபுணர் ஆலன் ஹிர்ஷ். அவர் கூறும்போது, ``உடம்புக்கு எதிராகப் போகாமல் அதன் இயற்கையான தூண்டுதலுடன் இணைந்து செயல்படுவதுதான் இந்தப் படிகங்களின் சிறப்பு'' என்று புகழ்ந்து உரைக்கிறார்.

No comments: