நமது உடலே... அருமருந்து!'

"நமது உடல் என்பது அருமருந்துகளால் உருவானது. நாம் இழுக்கும் மூச்சும், உடலில் சுரக்கும் திரவங்களும் மருந்து தான்! நமது உடலுக்கு தினந்தோறும் புத்துணர்வும், சரியான உணவும் ஊட்டி பாதுகாப்பது அவசியம். இதைத் தான் நான் ஒருங்கிணைந்த யோகா மற்றும் திட்ட உணவு(டயட்) என்று கூறுகிறேன்.
என்னிடம் வருவோரிடம் முதலில் நான் கூறுவது... `பட்டினியாக இருக்காதீர்கள்... திட்ட உணவை சாப்பிடுங்கள்' என்று வலியுறுத்துகிறேன். யோகா மற்றும் தியானத்தை தனியாகப் பயிற்சி பெறுவதும், தனியாக அதை செயல்படுத்துவதுமே சிறந்த முறை. குழுவாக யோகா பயிற்சி என்பது சிறந்த முறையாக இருக்காது.
ஏனென்றால் ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். உடல், மனம் ஆகியவற்றிலும் வேறுபட்ட குணாதிசயங்கள் இருக்கும். ஆதலால் தனியாக பயிற்சி பெறும்போது நிறை, குறைகளை கண்டு சீர்படுத்த முடியும்'' என்று தீர்க்கமாக கூறுகிறார் டாக்டர் சந்திரா.

சென்னை, திருவான்மிரைச் சேர்ந்த, இவர் மும்பையில் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில், லூசியானாவில் உள்ள லேசாலே பல்கலைக்கழகத்தில், `சைவ உணவுமுறை, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்குமா?' என்ற தலைப்பில் பி.எச்டி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.
சைவ உணவு குறித்த ஆராய்ச்சி பற்றி சந்திரா கூறுகையில், ``சைவ உணவு சாப்பிடும் விலங்குகள் மற்றும் மனிதனுக்கு உள்ள பற்களின் அமைப்பு வேறு... அசைவ உணவு சாப்பிடும் விலங்குகளுக்கு உள்ள பற்களின் அமைப்பு வேறு. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு உள்ள பற்களின் அமைப்பு, அவற்றின் உடலில் சுரக்கும் திரவம், ஜீரண உறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அனைத்தும், அசைவ உணவை சாப்பிடுவதற்காக இயற்கையால் அமைக்கப்பட்டவை.
ஆனால் நம்மை போன்ற உயிரினங்களின் பற்கள் அமைப்பு, உமிழ்நீர், ஜீரண உறுப்புகளின் அமைப்பு மற்றும் நமது செயல்பாடுகள் அனைத்தும் சைவ உணவு சாப்பிடுவதற்காக அமைந்தவை. நாம் அசைவ உணவை சாப்பிடும்போது பல்வேறு பிரச்சினைகள் நமது உடலில் ஏற்படுகின்றன.    பற்களில் பிரச்சினை, செரிமானம் இல்லாமை, தொண்டைப்புண், கொழுப்பு படிதல், உடல் சூடு என உடலில் பல்வேறு நோய்கள் நம்மை தொற்றுகின்றன. இறைச்சி சாப்பிட்டால் நமக்கு செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் தேவை. மனத்தளவில் கோபம், வெறி ஆகியவை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டுத் திறன் மந்தமாகும். நாம் சாப்பிடும் விலங்கிற்கு ஏதாவது நோய் இருந்தால் அதுவும் நம்மை தொற்றிக் கொள்ளும்.
சைவ உணவுமுறை, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதை என்னுடைய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. சாப்பிடுவது எளிது. ஜீரணமாவது எளிது. மனத்தளவில் சாத்வீகம் ஏற்படும். மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
பால் உணவுகள், பருப்பு வகைகள், பழங்கள், பச்சைப்பயிறு, நிலக்கடலை, பாதாம், கீரை, சோயா பீன்ஸ் போன்ற உணவுகளில் புரோட்டீன் அதிகம் என்பதால், இவற்றை சாப்பிடும்போது, அசைவ உணவுக்கு நிகரான சத்துக்களை சைவ உணவிலேயே பெறமுடியும். மிகச் சரியான முறையில் இவற்றை சமைத்து சாப்பிட்டால் எந்த தொந்தரவும் ஏற்படாது.
அமெரிக்காவில் உள்ள தென்மாநிலங்களில் வசிப்போர் இறைச்சி அதிகமாக சாப்பிடுவார்கள். அங்கே சைவ உணவு முறை குறித்து ஆராய்ச்சி நடத்துவது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. அதையும் மீறி இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தேன்.
இதற்கிடையே யோகா கற்றுக் கொண்டேன். உலகின் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். சீனாவில் நடந்த அக்குபஞ்சர் பயிலரங்கில் கலந்து கொண்டேன். பின்னர் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்டேன். வீணையும் வாசிப்பேன்.
எனக்கு பிரபல நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை கிடைத்தது. வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் பிரானிக் ஹீலிங் பற்றிய ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்தேன்'' என்கிறார் சந்திரா.
மேலும் கூறுகையில், ``நேர்மறை எண்ணங்கள், மனப்பாங்கு, நம்பிக்கை ஆகியவையே ஒருவரை மேலும் அழகாக்குகின்றன. ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதனை என்னிடம் வரும் நோயாளிகளிடம் வலியுறுத்துகிறேன். மேலும் பிரானிக் ஹீலிங் மற்றும் தியானம் மூலம் குணப்படுத்துவேன். இதை நான் ஒரு தொழிலாக கருதுவதில்லை. சேவையாகவே செய்து வருகிறேன்'' என்று கூறும் சந்திரா, தனது ஆராய்ச்சியை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
உடம்பே மருந்தாவது... எப்படி? என்று கேட்டபோது,
``நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். பழங்காலத்தில் முனிவர்கள் அனைவரும் பிராண சக்தி மூலம் நோயைக் குணப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில், இன்றைய மனிதர்களின் மனநிலைக்கு தக்கவாறு வடிவமைக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றியது இந்த பிரானிக் ஹீலிங் என்ற புதிய சிகிச்சை முறை.
`நம்முடைய உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்தது' என்று நவீன மருத்துவத்தின் தந்தை `ஹிப்போக்கிரட்டீஸ்' கூறியுள்ளார். உடலில் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிக்குப் பிராண சக்தியை அளித்தாலே போதும், விரைவில் குணமாகிவிடும்'' என்றார் சந்திரா.
----------------------------------------------------------    உடலைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டம்
நம் உடலைச் சுற்றி ஐந்து அங்குலம் வரை `ஆரா' எனப்படும் ஒளிவட்டம் காணப்படுகிறது. இது நமது உடம்பை ஒரு கவசமாக பாதுகாக்கிறது. நமது உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த வட்டக்கவசம் பாதிக்கப்படும். எனவே நோயாளியைத் தொடாமலேயே பிரானிக் ஹீலிங் மூலம், இந்த ஒளிவட்டத்திற்கு சிகிச்சை அளிப்பார்கள்.
மூட்டு வலி, சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், மனக்கோளாறு, மூச்சுக் கோளாறு முதலியவற்றை சிரமமின்றி எளிதில் குணப்படுத்தலாம். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், பிரானிக் ஹீலிங் முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ஐந்து மடங்கு வேகத்தில் விரைவாக குணமாகலாம். பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை இது. மேலை நாடுகளில் இந்த சிகிச்சை முறை பிரபலமாகும்.
நன்றி-தினத்தந்தி

No comments: