வழுக்கை தலை பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை : விஞ்ஞானிகள் அறிவிப்பு

வழுக்கை தலை பிரச்னையை ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என, ஜெர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் 80 சதவீத ஆண்கள் வழுக்கை தலை பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வழுக்கை தலை பிரச்னைக்கு, சந்தையில் நாள்தோறும் புதிய மருந்துகள் அறிமுகமாகி வருகின்றன.
ஆனால், அவை நிரந்தர பலன் தருமா அல்லது பக்க விளைவுகள் தருமா என்ற குழப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில், வழுக்கை தலை பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் என, ஜெர்மன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து பெர்லின் தொழில் நுட்ப பல்கலை விஞ்ஞானிகள், ஆய்வு நடத்தினர். இதில், ஸ்டெம்செல்லில் இருந்து முடிகளை வளர்க்க முடியும் என, அவர்கள் கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ரோலண்டு லாஸ்ட்டர் கூறியதாவது: விலங்குகளின் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களிலிருந்து செயற்கையாக முடி வளர்ப்பது சாத்தியமாகியுள்ளது. இதே போன்று, மனிதர்களுக்கும், அவர்களின் ஸ்டெம்செல்களிலிருந்து முடி வளர்க்க இயலும். ஸ்டெம்செல்களை ஆய்வகத்தில் வைத்து செயற்கையாக முடி வளர்த்து, பின்பு அதை மனிதர்களின் தலையில் பதியம் செய்ய வேண்டும். இந்த சிகிச்சை விலங்குகளிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு அளித்து சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த சிகிச்சையை பெற முடியும். இதன் மூலம், வழுக்கை தலை பிரச்னையால், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் பயன் பெற வழி பிறக்கும். இவ்வாறு ரோலண்டு லாஸ்ட்டர் கூறினார்.

No comments: