ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்வோம் : வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடப்பார். இந்த இனியநாளை ஒட்டி ஸ்ரீரங்கம் பற்றிய வித்தியாசமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!


* அயோத்தியிலிருந்து வந்தவர்: சீதையை மீட்க ராமபிரானுக்கு உதவினார் ராவணனின் தம்பியான விபீஷணன். இதற்குப் பரிசாக, தான் பூஜித்த ரங்கநாதர் விக்ரஹத்தை அவருக்கு பரிசாக அளித்தார். அதை இலங்கை கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார் விபீஷணன். இலங்கை செல்லும் வழியில் காவிரியைக் கண்டான். அது சுழன்றோடிய அழகு கண்ட அவர், அதில் நீராட முடிவெடுத்தார். சுவாமியை கீழே வைத்துவிட்டு நீராடினான். பின்பு, சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. விபீஷணர் வருத்தத்துடன் இலங்கை போய்விட்டார். அந்த ரங்கநாதர் இருந்த இடத்தில், பிற்காலத்தில் தர்மவர்மா என்ற சோழ மன்னன் கோயில் எழுப்பினான்.


* காவிரி நீர் அபிஷேகம்: ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், முகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாள் (வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் கடப்பவர்) அணிந்திருக்கும் தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரி தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையில் அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.


* ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்: ஆண்டவன் சந்நிதியில் எல்லாருமே ஒன்று போல கருதப்பட வேண்டும். அங்கே ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. இப்போதெல்லாம் முக்கியஸ்தர்கள் வந்தால், போலீசாரைக் கொண்டு மற்ற பக்தர்களை தடை செய்கின்றனர். அவர்கள் இறைவனை வணங்கிச்செல்லும் வரை பக்தர்கள் கால்கடுக்க காத்து நிற்க வேண்டியுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சமயம் என்ன நடந்தது தெரியுமா?சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த சமயம், ஒருமுறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார். ரங்கநாதப் பெருமானை தரிசிக்கும் ஆவல் அவர் உள்ளத்தில் நிறைந்திருந்தது. கவர்னர் ஜெனரல் வருகிறார் என்றவுடன் வாசலிலேயே காத்திருந்தனர் அதிகாரிகள். அவரை ஏக தடபுடலாக வரவேற்று கோயிலுக்குள் அழைத்துப் போவதாக முடிவு செய்திருந்தனர்.


ராஜாஜி வந்தார்...காலணிகளை கழற்றினார். அதிகாரிகள் அவரை நெருங்கினர். ""நண்பர்களே! நீங்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட மரியாதை ஏதும் செய்ய வேண்டாம். இங்கு வந்துள்ள பக்தர்களையும் தடுத்து நிறுத்தக்கூடாது. எனது காலணியைக் கழற்றிய அதே சமயம், கவர்னர் ஜெனரல் என்ற பதவியையும் வாசலோடு கழற்றி வைத்து விட்டேன். சாதாரண பக்தனாக கோயிலுக்கு வந்துள்ளேன். என்னையும் மற்றவர்களைப் போல நடத்தினால் போதும்,'' என கோயிலுக்குள் சென்று பகவானை வழிபட்டு, அமைதியாகத் திரும்பச் சென்று விட்டார்.இந்த அடக்கத்தை... இன்று ஒரு அதிகாரியிடம் கூட எதிர்பார்க்க முடியுமா என்ன!


* விடிய விடிய போர்வை போர்த்துதல்: கார்த்திகை மாதத்தில் வரும் கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் இரவு முழுவதும் நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரத்தைச் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும் போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.


* மூன்று தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோரும் உள்ளனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயாருக்கு தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.


* பூபதி திருநாள்: சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்று அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.


* சுக்கு சாப்பிடும் ரங்கநாதர்: மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சந்நிதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவை படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது. தானியலட்சுமி அன்னப்பெருமாள்கோயில் பிரகாரத்தில் தானியலட்சுமிக்கு சந்நிதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்ருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும். பெருமாளே அன்னப்பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

No comments: