கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!

இளைத்தவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்கு கொள்ளு...` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது.
அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.
கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்...' என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா?
கொள்ளு- பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - 4 கப்
கொள்ளு - 1/2 கப்
மிளகு - 20 மிளகாய் வற்றல் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை
* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.
* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.
சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.
பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி' சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.

No comments: