ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? "பெரிய கற்பனை' செய்து பயப்படாதீர்கள்!
இந்தியாவுக்கு நான்கு பருவ கால நிலைகள் உண்டு. அவை, குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி), வெயில் காலம் (மார்ச் - மே), மழைக் காலம் (ஜூன் - செப்டம்பர்), மழைக்குப் பிந்தைய காலம் (அக்டோபர் - டிசம்பர்). இப்போது காலம் கடந்த மழையால், பல நோய்கள் உருவாகின்றன.
மழை மற்றும் குளிர் காலங்களில், சளியும், இருமலும் நம்மை பாடாய் படுத்தும். காலநிலையைத் தான் மக்கள் திட்டுவர். திடீர் மழையால், காயாத துணியும், ஈரம் காயாத தலையுமாய் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அங்கலாய்ப்பர்.
இதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. சளி, 200 வகை தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் நம் உடலில் குறைந்தால், இது போன்ற தொற்றும், சளியும் ஏற்படுவது இயற்கையே. கிருமி, நம் மூக்கை அடையும்போது தொற்று ஏற்படுகிறது. அது, நம் தொண்டையை அடைய 10 - 15 நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ளும். மூக்கினுள் இருக்கும், மிகச் சிறிய முடிகள், அந்தக் கிருமிகளை வெளியேற்றும் வகையில் வீங்கிக் கொள்ளும் அல்லது சளியை வெளியேற்றும். இதனால் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஏற்படுகின்றன. தும்மல், இருமல் மூலம் வெளியேறும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களை அடைகின்றன. சில நேரங்களில் மரப் பொருட்கள், சுவர்களில், உடைகளில் இவை தற்காலிகமாக உயிர் வாழும். இவற்றின் மீது ஒருவர் கை வைக்கும்போது, அவருக்கும் தொற்று ஏற்படும்; கிருமி மூக்கினுள் செல்லும்; அவரும், "ஹச்...' போடுவார்!
மழைக்காலங்களில் ஜன்னல், வாசல் கதவுகளை மூடி விட்டு, நிறைய பேர் ஒரே அறையில் இருப்போம். அப்போது தொற்று மிக வேகமாகப் பரவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தொற்று மிக எளிதில் பரவும். தாயின் வயிற்றில் இருக்கும்போதும், தாய்ப்பால் குடிக்கும்போதும், மிகக் குறைந்த அளவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக் குழந்தை கொண்டிருக்கும். குழந்தை வளரும்போது அருகில் இருப்பவர்களிடமிருந்து தொற்று, பள்ளிக் கூடத்திலிருந்து தொற்று எனத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு எட்டு முதல் 10 தடவை தொற்று ஏற்படும். ஒவ்வொரு முறை சளி பிடிக்கும்போதும், ஏழு முதல் 10 நாட்கள் வரை இருக்கும். ஆண்டு ஒன்றுக்கு 60 நாட்கள் சளியால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, குழந்தை எப்போதும் நோய்வாய்ப் பட்டிருப்பதாக பெற்றோர் நினைப்பர். "பிரைமரி காம்ப்ளக்ஸ்' அல்லது காச நோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைப்பர். அது தவறு. இது போன்ற நோய்கள், சாதா சளி போல விட்டு விட்டு வராது. தொடர்ந்து நீடிக்கும். இதை பெற்றோர் உணர வேண்டும்.
சளி பிடித்தால் மிதமான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரித்தல், இருமல், உடல் வலி ஆகியவை ஏற்படும். ஓய்வெடுத்தாலே, இது குணமாகும். உடல் வெப்பம் 100.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு, உடலில் கடுமையான வலி ஏற்பட்டால், பாரசிட்டமால் மருந்து சாப்பிடலாம். பெரியவர்கள் 500 மி.லி.,க்கு மேல் சாப்பிட வேண்டாம். குழந்தைக்கு, அதன் மொத்த எடையில், ஒரு கிலோவுக்கு 10 முதல் 15 மி.லி., என்ற அளவில் பாரசிட்டமால் கொடுக்கலாம். நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். உப்பு நீரால் தொண்டையைக் கொப்புளிப்பது நல்லது. மூக்கிலும், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சொட்டு மருந்து ஊற்றலாம். ரசாயன சொட்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். சில மருந்துகள் மயக்க நிலையை ஏற்படுத்தும். இருமலுக்கான மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரைத்த அளவை மீறி சாப்பிடுவது தவறு. மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் சாப்பிடுவது முழு தவறு. இஞ்சி டீ, ரசம், அரிசி கஞ்சி, கோழி சூப் ஆகியவை, தொண்டைக்கு இதமளிக்கும். மூக்கடைப்பை நீக்கும். உடலில் நீர்ச்சத்தையும், ஊட்டச்சத்தையும் காக்கும். ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ, உடலில் குளிர்ச்சித் தன்மை நீடித்தாலோ, தொடர் தலைவலி ஏற்பட்டாலோ, அடிவயிற்று வலி, வாந்தி ஏற்பட்டாலோ, காது வலி ஏற்பட்டாலோ, மூச்சுத் திணறல் உண்டானாலோ, மயக்கம் ஏற்பட்டாலோ, குழந்தை தொடர்ந்து அழுதாலோ மருத்துவரிடம் காண்பிக்கவும். சளிக்கென கொடுக்கப்படும் கிருமி எதிர்ப்பு மருந்து, சளியைக் குறைக்காது. எனவே, காதில் தொற்று, சைனஸ், நுரையீரலில் தொற்று, நிமோனியா ஆகியவை ஏற்பட்டால், டாக்டர் பரிந்துரைத்துள்ள அளவு வரை முழுமையாக சாப்பிட வேண்டும். தொடர்ந்து சளி பிடித்தால், டாக்டரின் ஆலோசனை இன்றி, மருந்து சாப்பிடக் கூடாது. சிறந்த உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்வோருக்கு சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. எல்லா சளியும், தொற்று வகையைச் சார்ந்தவை அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வாமையால் ஏற்படும் சளி, அடுத்தவருக்குப் பரவாது. மகரந்தத் தூள், பட்டாசு தூசி, கொசு விரட்டியால் ஏற்படும் புகை, அறை தெளிப்பான்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, பள்ளிக் கூடத்தில் எழுது குச்சி ஆகியவை மூக்கினுள் செல்லும்போது, அதை வெளியேற்ற, தும்மல் உருவாகும். இது தான் ஒவ்வொமையால் ஏற்படும் சளியாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்க்க, மூக்கில் விடும் சொட்டு மருந்து உள்ளது. மூன்று மாதங்கள் வரை அதைப் பயன்படுத்தினால், ஒவ்வாமை குறையும். - டாக்டர் கீதா மத்தாய்
Labels:
உடல்நலம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றீ
மிகவும் பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி
Post a Comment