வாக்களிப்போம் வாருங்கள் !டிச., 22 - ஆருத்ரா தரிசனம்!

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது. "திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' என்பர். திருவாதிரையன்று, நடராஜருக்கு களி நிவேதனம் செய்து சாப்பிடுவது பாரம்பரியமான பழக்கம். களி, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு. திருவாதிரையில் சாப்பிடும் களி ரத்த விருத்திக்கு உதவுகிறது. அதனால் தான், பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், வீடுகளில் களி சமைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. ஆக, அறிவியல் ரீதியாகவும் நம் பண்டிகைகளுக்குரிய நைவேத்யங்களை முன்னோர் வகுத்துள்ளனர்.
சரி... வெறுமனே சுண்டல், களி சாப்பிடுவதற்கெல்லாம் ஒரு விழாவா என நினைக்கக்கூடாது. உண்மையில், "திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' இரு வேறு பொருட்களைத் தருகிறது.
"களி' எனும் சொல்லுக்கு, "நடனத்தைப் பார்ப்பதால் ஏற்படும் ஆனந்தம்...' என்றும் பொருள். "வாய்' எனும் சொல்லை, "வாசல்' எனலாம். வாசலை, "வாயில்' என்றும் சொல்வர். திருவாதிரை விழா ஆனந்தத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. நடராஜரின் ஆனந்த நடனம் எனும், "களி' உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்துகிறது. அந்த நடனக்காட்சியைக் காண்பவர்கள், கைலாயம் அடைந்து நிரந்தர சுகம் பெறுவர் என்பதே இதன் தாத்பர்யம்.
இன்னொரு பொருளைப் பார்ப்போம்...
"திருவாதிரைக்கு ஒரு வாக்கு அளி...' என்ற வாக்கியமே திரிந்து, "திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என, மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. திருவாதிரையன்று செய்யும் நற்செயல் நம் பாவங்களைக் களைந்து, மோட்சத்தைத் தரும். எனவே, நம்மைச் சார்ந்திருப்பவர்கள் ஏதேனும் காரணத்தால் கஷ்டம் அனுபவித்தால், அதைக் களைவதற்கு, "என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்...' என்று, வாக்கு அளிக்கலாம். மனிதர்களிடம் மட்டுமல்ல...
இறைவனுக்கும் நாம் வாக்கு கொடுக்கலாம்.
இறைவா... என்னிடம் "மதுப் பழக்கம், புகைப் பழக்கம், மற்றவர்கள் நன்றாக வாழ்வதை பொறாமைக் கண்ணுடன் நோக்கும் பழக்கம்.'
இன்னும் என்னென்ன கெட்ட வழக்கங்களெல்லாம் உண்டோ, அத்தனையும் உள்ளது. இவற்றை இன்று முதல் விட்டு விடுவதாக உன்னிடம் வாக்களிக்கிறேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உன்னருள் வேண்டும். உன் ஆனந்த நடனக்காட்சி இருள் சூழ்ந்த என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்த வேண்டும். உன் கையிலுள்ள அக்னி சட்டி, என் உள்ளத்திலுள்ள தீய வழக்கங்களை எரிக்க வேண்டும். உன்னிடமுள்ள சாட்டை என் கெட்ட பழக்கங்களை அடித்து விரட்ட வேண்டும். இவையெல்லாம் நடந்தால், உன் முகத்தில் இருக்கும் புன்சிரிப்பு என்னிடமும் மலரும். நாங்கள் மகிழ்வுடன் வாழ அருள் தா...' என பிரார்த்திக்க வேண்டும்.
திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஊர்களுக்குச் சென்று பஞ்சசபை நடராஜரையும் தரிசிக்க இது ஏற்ற காலம். ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற நடராஜர் உள்ளார். இங்கே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனத்தைக் களைந்து, பச்சை மரகதத்தில் காட்சியளிக்கும் நடராஜரைத் தரிசிக்கலாம். உலகின் முதல் நடராஜர் எனக் கருதப்படும் திருநெல்வேலி செப்பறை நெல்லையப்பர் கோவிலிலுள்ள கலையம்சம் மிக்க நடராஜரையும் தரிசித்து வரலாம்.
திருவாதிரை நன்னாளில் நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கைவிடுவதற்கு நடராஜரிடம் வாக்கு கொடுப்போம். ***

No comments: